Showing posts with label கே.ஜே.அசோக்குமார். Show all posts
Showing posts with label கே.ஜே.அசோக்குமார். Show all posts

Saturday, January 1, 2022

முன்னுரை - குதிரைமரம் & பிற கதைகள்


நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவதும் சிறந்த மனப்பயிற்சியாக இருந்தது அப்போது. இந்தக் கதைகள் இனிய மனநிறைவோடு எழுதியவை என்றே நினைக்கிறேன். தொகுப்பிற்காக மீண்டும் வாசித்தபோது ஆழ்மனதை சென்றடைந்த அதே பரவசத்தை இப்போதும் உணர்ந்தேன். கதைகளை வேறுஒரு தளத்தில் நின்று பார்க்கும்போது நான் அடையும் பெருமிதம் மற்ற உலகியல் பெருமிதங்களுக்கு பலபடிகள் மேலானதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்க இதைத்தான் காரணமாக சொல்லமுடியும்.

Tuesday, October 3, 2017

அலர் (சிறுகதை)


மதியதூக்கத்தை கெடுத்துவிட்டது அந்த செய்தி. மற்றநாளாக இருந்தால் அலுவலகம் முடிந்துவிட்டு வந்தபின்தான் தெரிந்திருக்கும். மதியஉணவுவை முடித்துவிட்டு வழக்கம்போல வாசலில் வந்து வேடிக்கை பார்த்த நேரத்தில் தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வெங்கட் விடுபட்டதை யோசிக்கிறவனாக திரும்பி ‘விஷயம் தெரியுமா’ என்றான். தெரியாதது ஒரு குற்றம்போல் அவனுக்கு பட்டிருக்கவேண்டும். ‘என்ன?’ என்று கேட்டவுடன் மெதுவாக நான் நின்றிருந்த வாசல்வரை வந்து அவன் எப்போதும் இருக்கும் கலகலப்பு தோரனையை மெனக்கெட்டு திருத்தியதுபோல் தீவிரமான முகக்குறிகளோடு 'மூன்றாம் தெரு குணசேகரன் இருக்காருல்ல, ஹைஸ்கூல் வாத்தியாரு, அவர் பொண்டாட்டி இன்னிக்கு 12 மணிக்கு ஆக்ஸிடன்ல செத்துபோயிடுச்சி' என்றான். அவன் சொன்ன விதத்தாலே அந்த செய்தி தூக்கிவாரிப்போட்டது. போனவாரமாக இருக்கலாம், குணசேகரன் உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் மனைவியை வண்டியின் பின்னால் வைத்து கிருஷ்ணன் கோயில் தெரு வழியாக டாக்டர் வீட்டிற்கு அழைத்து சென்ற சித்திரம் நினைவிற்கு வந்தது. அவர் மனைவி நாற்பது வயது பெண்மணி, எப்போது சோர்ந்து இருப்பது போன்று அமைதியாக காணப்படும் முகம். சிரிக்கும்போதுகூட சிரிக்கலாமா என்று யோசித்துவிட்டு சிரிப்பதுபோல இருக்கும். யாரிடமும் அதிர்ந்துகூட பேசுபவரல்ல அவர். அப்படிப்பட்டவரும் நேர்ந்த சோகம் சற்று அதிக அதிர்ச்சியாக இருந்தது. பதற்றம் வெளிப்படுத்தாமல் ‘என்ன ஆச்சு’ என்றேன். 'சரியா விவரம் தெரியல, இன்னிக்கு தொம்மங்குடி சைடுல பொண்டாட்டியோட டூவீலர்ல போயிருக்காரு, பின்னாடி வந்த பஸ்சு பிரேக் பிடிக்காம அவங்க மேல மோதிருக்கு போல, அதுல ரெண்டு பேருக்கும் அடி, அவருக்கு கொஞ்சம் அடி, அந்தம்மா மண்டையில அடிப்பட்டு அப்படியே ஸ்பாட்லே காலி’. சொல்லும்போது எந்த சொல்லும் மாறிப் போய்விடக்கூடாது என்கிற பயம் இருப்பதுபோல சரியாக மிக நிதானமாக கைகளைக்கூட அடக்கமாக வைத்துக்கொண்டு பேசினார். 'தெரு ஜனமே ஆஸ்பிடலுக்குதான் போயிருக்கு, ஆனா பொழைக்க வைக்க முடியலையாம், சரி நா வாரேன்' என்று முக்கிய விஷயம் நினைவு வந்தவன்போல் அவசரமாக கிளம்பினான். அவன் போவதையே நெடுநேரம் ஏன் என்று தெரியாமல் கவனித்துவிட்டு உள்ளே சென்றேன்.

Monday, October 2, 2017

மினி பேட்டி -- பேசும் புதியசக்தி

செப்டம்பர்'17 பேசும் புதியசக்தி இதழில் என் மினிபேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டியை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக, கேள்விகள் எஸ்.செந்தில்குமார்.

Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)

Wednesday, August 9, 2017

தஞ்சைக் கூடல் ஜூலை மாதக் கூட்டம் (29/7/17)



எப்போதும் போன்றதொரு பதட்டம் இந்தமுறையும். பதட்டத்தின்படி எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. இடத்திற்கு போனதும் எல்லாம் மறைந்து கொஞ்சம் இயல்பிற்கு திருப்பியது. பிரசன்ன கிருஷ்ணன் முன்பே வந்திருந்தார். அவர் திருச்சியில் இருந்து பஸ் பிடித்து இடந்தேடி வந்துவிட்டிருந்தார். இலக்கியம் ந்ம்மை எப்படியெல்லாம் அழைத்துச் செல்கிறது. அவர் பெங்களூருவில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் வியாகுலனும், மா.கோவிந்தராஜுவும் வந்துவிட்டார்கள். இலக்கியமும் நடைமுறை வாழ்க்கையும் மாறிமாறி பேச்சில் கலந்திருந்தது. ஹரணி, கவிஜீவன், ராகவ் மகேஷ் வந்ததும் பேச்சில் சுவாரஸ்யங்கள் கூடின. அதே வேகத்தில் கூட்டத்தை தொடங்கிவிடவேண்டும் என்கிற எண்ணத்தோடு அறிமுக பேச்சை தொடங்கினேன். ராகவ் மகேஷின் நண்பர்களான ரா.பிரபு, கணேஷ்ராவ் இருவரும் வந்திருந்தார்கள். தமிழம்மா அன்பரசி டீச்சர் முதல் முறையாக வந்திருந்தார். பார்க்கும் ஒவ்வொரு சமயமும் வர்வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Monday, November 14, 2016

வலிகள் நிறைந்த வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும்

கதைகள் சாமத்தில் முனகும் கதவு - கே.ஜே.அசோக்குமார்   
ஹரணி

மூன்று முறை சந்திப்பில் எனக்கு அறிமுகம் கே.ஜே.அசோக்குமார். சிறுகதை எழுதியுள்ளதை அப்புறம்தான் சொன்னார். தொகுப்பு வெளிவந்திருப்பதையும் அதற்குப் பின்னர்தான் சொன்னார். அப்புறம் அதன் அறிமுகவிழா குறித்துப் பேசியபின் தாங்கள் அதுகுறித்து பேசவியலுமா எனக் கேட்டார். பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு புத்தகத்தைத் தாருங்கள் படிக்கவேண்டும் என்றேன். புத்தகம் வாங்குவதில் சற்று தாமதம் நேர்ந்தது. பின்னர் கிடைத்து அதுகுறித்துப் பேசுவதற்கு முன்னதாகப் படித்துமுடித்துவிட்டேன்.


Wednesday, October 12, 2016

சிறுகதை: முகங்கள்




சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும் ஒரளவிற்கு கவனித்தேன் என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நிச்சயம் இந்த அளவிற்கு மோசமாக இருக்காது என நினைக்கிறேன்.. முகங்களை கவனிப்பதென்பது வெறுமனே கவனிப்பது மட்டுமல்ல. நான் நினைப்பது அதன் வளர்ச்சியின்/வளர்ச்சியின்மையின் பரிமாணங்களை பற்றி நம் அபிப்ராயங்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கின்றன என்பதை கவனிப்பதுதான்.

Wednesday, August 19, 2015

கீழே நிற்கும் மனிதர்கள்

நம்மிலும் குறைந்த நிலையில் உள்ள மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த மாதிரியான குணமுடையவர் என்பதை காட்டிக் கொடுத்துவிடும் என்பார்கள். பொருளாதார நிலையில் நம்மைவிட குறைந்தவர்கள், நம்மைவிட குறைந்த பதவியில் உள்ளவர்கள், நம்மைவிட விலை குறைந்த உடைகளை அணிபவர்கள், நம்மைவிட கறுப்பானவர்கள், நம் சாதியைவிட குறைந்த படிநிலையிலுள்ள‌ சாதியை உடைவர்கள் என்று பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருப்போம், அவர்களை நாம் எப்போது ஒரு மாற்று குறைந்தவர்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ அல்லது அப்படி நிஜமாகவே நடிக்கிறோமா என்பதை சொல்லமுடியாது. அதே எல்லாவகையான மேல்படியில் உள்ளவர்களை சந்திக்கும்போது மனதில் வைது கொண்டிருப்பதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு ஒன்று, இந்த சூழலுக்கு எதிரான அதாவது நம் சமூகம் அது குறித்து முன்பே கட்டமைத்து வைத்திருக்கும் ஒன்றிற்கு எதிராக, நடக்கும் போது நாம் சர்வநிச்சயமாக செய்வது 'இது மாதிரி உலகத்துல இன்னும் நடந்துகிட்டுதான் இருக்குதா, என்ன உலகம் இது' என்பதாகத்தான் இருக்கும்.

Tuesday, August 11, 2015

இரவு - ஜெயமோகன்

இரவும் பகலும் வேறுவேறு உலகங்கள் என்கிற எண்ணம் ஏன் வருகிறது. பகலில் இருக்கும் உலகமும் இரவில் தெரியும் உலகமும் முற்றிலும் வேறாக இருப்பதுதான். அது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே உலகம் இரவில் தோன்றும் எண்ணங்கள் பகலில் தோன்றும் எண்ணங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இரவில் நமக்கு தோன்றும் மென்மையான விஷயங்கள் பகலில் அதே விஷயங்கள் நமக்கு கடினமானதாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. அதே வேளையில் பகலில் நமக்கு தோன்றாத பல்வேறு அகங்காரங்களும் வன்மமும் இரவில்தான் வெளிப்படுகின்றன‌.

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம்: அஞ்சலி

சில நாட்களுக்கு முன்பே அப்துல் கலாம் அவர்களின் தலையலங்காரம் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் முகநூலில். அவருடைய தலையலங்காரம் அவரின் சிறுவயதிலிருந்து தொடர்ந்து வருவதை பல புகைப்படங்களில் காணமுடிகிறது. ஒரு படம்கூட அந்த ஸ்டைல் இல்லாமல் இல்லை. காதுகள் சற்று படர்ந்திருக்கலாம் அதை மறைக்க அப்படி செய்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அவர் தன் வாழ்வில் எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவு இன்றி இருப்பதாக தெரிகிறது. அவரது ஆசிரியர்கள், நண்பர்கள், அவரது தனிப்பட்ட கொள்கை, அவரது பேச்சுகள் என்று எல்லாமே வெளியே தெரியும்படி இருக்கிறது. ஒரு முஸ்லீமாக இருந்து இந்து ஆசிரியரின் சீடராக தான் பெற்ற கல்வி அறிவைப் பற்றியும் அதன் பின்னால் தன் வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்களை சொல்லியிருகிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது கீதையின் வரிகளை மீடியாவில் சொன்னபோது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.


Wednesday, July 15, 2015

வாசக எழுத்தாளர் இடைவெளி

வாசகர் எழுத்தாளர்களின் இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது போலிருக்கிறது. முன்பு எழுத்தாளர்க‌ள் கடித தொடர்பில் தான் பத்திரிக்கை ஆசிரியர்களுடன் பேச வேண்டியிருந்தது. ஒவ்வொரு படைப்பையும் எழுதிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. தொடர்ந்து எழுதுபவர்கள் மட்டும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்து போவர்களாக இருந்தார்கள். அந்தமாதிரியான சூழலில் எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் பெரிய பரிச்சயம் இருக்க வாய்ப்பு இருந்ததில்லை. எழுத்தாளரை காண அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பதே ஒரு வாசகருக்கும் பெரிய வேலையாக இருந்தது. அதுவும் மிக பிரபல்யமாக இருக்கும் எழுத்தாளருக்கு மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் சாதாரண எழுத்தாளர்கள் தங்களை மறைத்துக் கொள்ளவும், வெவ்வேறு பெயர்களில் எழுதவும் விரும்பினார்கள்.

Monday, July 13, 2015

வாசிப்பு எப்படி இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் புத்தகம் பற்றி பேச்சு வந்தவுடன் எங்கங்க படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக இருக்குது என்பார். படிக்கிறதுக்கு நாமதான் நேரத்த உருவாக்னும் என்றால், நீங்க சொல்றது சரிதான் ஆனா நேரமே அமைய மாட்டேங்குதே என்று மீண்டும் அதேயே கூறுவார். பலபேருக்கு படிக்க ஆசை இருக்கிறது மனைவியின் தொல்லை, மக்களின் தொல்லை என்று பல அவர்களுக்கு இடையூராக அமைக்கின்றன. வாசிப்பை சில நாட்கள் மட்டும் தீவிரமாக செய்துவிட்டு மற்ற நாட்க‌ளில் சும்மா இருப்பார்கள். பொதுவாக நிலைத்தன்மை (consistency) இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பது, மீண்டும் சில நாட்களில் வேறு ஒன்றை புதியதாக ஆரம்பிப்பது நடந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஒரு தொடர் செயல் அதை ஒரு ரிலே ரேசாகத்தான் நினைக்கவேண்டும். ஒன்றை படித்தப்பின் அதன் தொடர்ப்புடைய மற்றொன்றை படிக்க வேண்டியிருக்கும். பின் அதன் தொடர்ச்சி. இப்படி தொடர் சங்கிலியாக செல்லவேண்டியிருக்கும். அப்படி வாசிக்கும்போது தான் வாசிப்பு ஒரு முழுமையை பெறும். மனதிற்குள் தொடர் விவாதத்தில் இருப்பவர்களால் தொடர்ந்து வாசிப்பை விடாமல் நிகழ்த்தமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களும் வெகுஜன வாசிப்பை தொடரமுடியும். அத்தோடு ஒரு வாசிப்பு அடுத்த கட்ட வாசிப்பை தொடங்கிவைக்க வேண்டும். அதாவது அதைவிட தீவிரமான, அதிக நேரத்தை கோருகின்ற ஒரு புத்தகத்தை வாசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த வாசிப்பு.

Thursday, June 25, 2015

ஒரு நகரத்தின் குழந்தைகள்

இந்த விடுமுறையில் என் மகனை அழைத்துக்கொண்டும் என் மனைவியுடன் அவளின் உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஒரு முதிய தம்பதிகள் இருவர் மட்டும் இருக்கும் இல்லம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு குழந்தைக இல்லையா என்றான் மகன். எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த பெண்மணி இருக்காங்கபா, நாலு பசங்க இருக்காங்க இந்த போட்டோவுல பார்த்தா தெரியும் என்றார். மேலே தொங்கவிடப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டி. எங்க அவங்ககெல்லாம் என்றான். வருவாங்க காட்றேன் என்றார். ஒரு மகன் மட்டும் உள்ளூரில் வேறு வீட்டில் இருக்கிறார். மற்றவர்கள் வேறு ஊரில் இருக்கிறார்கள். அவர்களுடம் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குபின் அவரின் முதல் மகன் அங்கு வந்தார். இவன் தான் என் மகன் என்று அறிமுகப்படுத்தியதும், இல்ல சின்ன குழந்தைக இல்லையா என்றான் என் மகன். ஒருவீட்டில் பிள்ளைகள் என்று இருந்தால் அவர்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.
நான் இருக்கும் புனே நகரத்தில் அம்மா அப்பா இரு குழந்தைகள் மட்டுமே கொண்ட குடும்பங்கள்தான் எல்லா வீடுகளிலும் என்பதை அவன் கூறியதும் அவதானிக்க முடிந்தது. தினமும் அவன் வெளியே சென்று அவனுடம் விளையாடும் அந்த குழந்தைகளுக்கு கிட்டதட்ட ஒரே வயதுதான். 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள்.

Monday, June 22, 2015

பொருள்வயின் பிரிவு

ஒருமுறை திருவாரூர் சென்றிருந்தபோது பஸ் நிலையத்தில் பெரிய குடும்பம் நின்றிருந்தது. அம்மா அப்பா, மனைவி, அவள் அம்மா, அப்பா, கூடப் பிறந்தவர்கள் என்று புதுத் துணிகளை அணிந்து முகத்தில் புன்னகையோடு வழியணுப்ப வந்ததிருந்தார்கள். அவர்களின் சத்தமான பேச்சில் அதிரடியான உடல்மொழியில் அவர்கள் மிக சந்தோசத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வர சற்று தாமதமானதால் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பேருந்து வந்ததும் வேறுப்பக்கதில் இருந்தெல்லாம் மக்கள் வந்து ஏறினார்கள். சென்னை செல்லும் பேருந்து. இந்த கூட்டதிலிருந்து புதுமாப்பிள்ளை போன்றிருந்தவர் மட்டுமே ஏறினார். பின் அவர் வெளிநாடு செல்கிறார். டிரைவருக்கு பின்சீட்டில் அவர் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் வண்டியைப் பிடித்துக்கொண்டு அருகில் நின்று அங்கேயே அந்த புதுப்பெண் உட்பட, இனிமையாக பேசிக்கொண்டிருந்தார்கள். நடத்துனர் விசில் ஊதியதும் புதுப் பெண்ணின் கண்கள் கலங்கின, பின் வேகமாக விசும்ப ஆரம்பித்தார். புது மாப்பிள்ளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. லேசாக சமாதானப்படுத்தினார். பொதுவாக பெண்கள் சில இடங்களில் அழுதிடவேண்டும் இல்லையென்றால் மற்றவர்களின் பார்வைக்கு அவள் அழுத்தகாரி என்று பெயர் வந்துவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.

Friday, June 19, 2015

ஹெல்மெட் அவசியமா?

இந்தியாவில் எதாவது புது சட்டம் வந்தால் அத‌ற்கு பெரிய எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். பழைய ராஜா காலத்தில் சில மோசமான சட்டங்கள் போடப்பட்டதால் அதை எதிர்க்கமுடியாத அந்த காலத்தை நினைத்துக் கொண்டு எதை அரசு சொன்னாலும் எதிர்ப்பது என்று வழக்கமாகிவிட்டது என நினைக்கிறேன். நான் தில்லியில் இருந்தபோது ஹெல்மெட் அவசியம் என்று இருந்தது. மிக அதிகமான மோசமான சாலைவிபத்துகள் அங்குதான் நிகழ்கின்றன. சர்தார்கள் இதற்கு விலக்கு வேண்டும் என்று போராடினார்கள். டர்பன் கட்டியிருக்கும்போது ஹெல்மேட் போட முடியாதே. அதற்குபின் கொஞ்ச காலத்தில் பின் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவேண்டும் என்கிற சட்டம் வந்தது. அப்போது வேறு மாதிரியான விலக்கு வேண்டும் என்று போராடினார்கள். அதாவது சர்தார்களுக்கு பின்னால் அமர்ந்து வரும் அவர்களின் மனைவிகளுக்கு விலக்கு வேண்டும் என்று. இதைவிட வேறு காமெடி இருக்குமா தெரியவில்லை. கொஞ்சநாளில் அவர்களுக்கும் விலக்கு கிடைத்தது.
பலர் ஹெல்மெட் அணிவதை சங்கடமாக, தண்டனையாக நினைக்கிறார்கள். இந்த வெய்யில்ல எப்படி ஹெல்மெட்ட போட்டுகிட்டு போறது, தலைமுடியெல்லாம் இதனால உதிர்ந்திடும், சரியாவே தெரிய மாட்டேங்குது, போன்ற நொண்டி சாக்குகள் நிறைய இருக்கும்.

Thursday, June 18, 2015

சதுரங்ககுதிரை

சதுரங்கத்தில் இருக்கும் குதிரை பாய்ந்து மூன்று கட்டங்களை இடம் அல்லது வலமாக தாவிச் செல்லும். அதனால் அது எப்படி முன்னேறுகிறது என்பதை நம்மால் சில சமயம் கணிக்க முடியாமல் போய்விடும். இரண்டு குதிரைகள் இருந்துவிட்டால் போதும், மற்ற எந்த காய்களை இழந்திருந்தாலும், நாம் வென்றுவிட முடியும். சதுரங்கத்தில் அந்த காய்களை இழக்கும்போது மிக முக்கியமான ஒரு போர் தந்திர முறையை நாம் இழந்துவிடுகிறோம். ஆனால் இதெல்லாம் சதுரங்கத்தில் மட்டுமே தான். நிஜவாழ்வில் அந்த காய்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. திருமணமாகாத பேச்சலர்கள் இந்த சதுரங்க குதிரைகளை போன்றவர்கள்தான். ஆம் அவர்கள் வெளியிடங்களில் தங்கள் வேலைகளில், தங்கள் பழக்க வழக்கங்களில், நண்பர்களிடத்தில் மிக முக்கிய ஆளுமையாக இருந்தாலும் உறவுகளிலும், பெண்கள் உடனாக நட்பிலும் ஒரு பொது விழாவிலும் அவர்கள் செல்லாகாசாகதான் இந்திய, தமிழக சூழலில் மதிப்பிடப்படுகிறார்கள்.
என் உறவுக்காரப் பெண் சிறுவயது முதல் என்னுடன் நட்பாக இருந்தவர், அவளுக்கு திருமணம் ஆனதும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அதுவரை எங்களிடையே இருந்த வாழ்க்கை குறித்த, புத்தகங்கள் குறித்த, புதிய தொழில்நுட்பங்களை குறித்த பேச்சுக்கள் அப்படியே நின்றுவிட்டன. பல நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. எங்களிடையே மிக நீண்ட தூரத்தை மெதுவாக உருவாகிவந்ததை மிக ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். பேசுவதற்கு பலசந்தர்பங்கள் வந்தும் அவள் தவிர்த்திருக்கிறாள் என்பது மேலும் புதிராக இருந்தது.

Wednesday, June 17, 2015

குழந்தை விடுமுறைகள்

குழந்தைகளுக்கு விடுமுறை கொண்டாட்டங்கள் அவர்களின் வயதிற்கு ஒரு முக்கியமான நிகழ்வு. தங்களை புதுப்பித்துக்கொள்ள புதிய உலகைப் பற்றி அறிந்துகொள்ள, புதிய பொருட்களும் அது இயங்கும் விதங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த விடுமுறை தினங்கள் பயன்படுகின்றன. நான் பள்ளியில் படித்தப்போது விடுமுறை வந்தததும் முழு நாளும் தெருவில் தான் இருப்போம். எதாவது ஒரு வீட்டில் கும்பலாக கொஞ்ச நேரம் இருப்போம் பின் வேறுஒருவீடு பின் மற்றொரு பொது பகுதி என்று எல்லா இடத்திலும் அலைந்து திரிந்திருக்கிறோம்.

Tuesday, June 9, 2015

கன்யாகுமரி - ஜெயமோகன்

சினிமா, கலை, இலக்கியம் போன்ற துறைகளில் இருக்கும் ஜாம்பவான்கள் நாம் கவனித்துக் அவர்களைப் பற்றி அவர்களின் வளர்ச்சியைப் பற்றி சிலாகித்துக் கொண்டு இருக்கும்போதே அவர்களின் விழ்ச்சியையும் கண்டிருப்போம். பெரிய அதிர்ச்சியை ஏற்படித்தியிருக்கும். சில நேரங்கள் அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அதுதான் அவர்கள் உயரம் என்று நினைத்திருக்கலாம். பலபேர் ஒரு சின்ன உயரம் அடைந்ததும் அதற்குமேல் செல்லமுடியாமல் கீழே இறங்கவும் வழி தெரியாமல் பரிதவிப்பதை ஒவ்வொரு சமயமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவரால் நாம் நினைத்திருந்த ஒரு உச்சத்தை அடைய முடியாமல் போனதற்கு அவர்களின் அகங்காரமும் ஒரு காரணம் என்பதை அறிந்திருக்க ஞாயமில்லை. படைப்பாளியின் படைப்பு திறன் என்பது அவனின் அகங்காரத்திற்கு எதிரானது. தன்னால் படைக்கமுடிந்ததைவிட ஒருபோதும் தாண்டி சென்றுவிடமுடியாது.
அகங்காரம் என்பது மனதில் இருக்கும் ஒரு சின்ன கர்வம் மட்டுமல்ல, தன் படைப்புஆழத்தை தொடமுடியாமல் போகசெய்யகூடிய இடையில் வரும் ஒரு மந்திர கண்ணாடியும் தான். அக்கண்ணாடியில் தன் முகத்தை கண்டும் தன் அழகைக் கண்டும் திருப்தியடைந்துவிட்ட ஒரு பரிதாபகரமான கலைஞனைதான் நாம் இப்படி நினைத்துக்கொள்கிறோம். இங்கே இன்னோன்றையும் சொல்லிவிடவேண்டும். தன்னகங்காரம் சின்ன எழுத்தாளனுக்கும் தேவையானது. அதுவே அவனை எழுத தூண்டும் ஒரு சக்தியாகவும் இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் மேல் கொள்ளும் அதே அகங்கார துவேசம் அவனையே அழித்துவிடுகிறது.

Saturday, June 6, 2015

பின் தொடரும் முதுமை


படிப்பிற்காக தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து போர்சனில் இருந்த 50 வயது நபர் காலையில் எழுந்ததும் பல்விளக்கிவிட்டு முதலில் செய்யும் வேலை முகத்துக்கு சேவிங்கும் தலைக்கு டையும் அடிப்பதுதான். ஒரு நாள் தவறாமல் செய்வார். அவருக்கு அதில் எந்த அலுப்போ சங்கடமோ இருந்ததாக ஞாபகமில்லை. ஏன் தினமும் செய்கிறீர்கள் என்றால், இல்லன்னா பார்க்க அசிங்கமா இருக்குமே என்பார். ஒரு அவருக்கு தீவிரமாக உடல்நிலை சரியில்லாதபோதுதான் தெரிந்தது நிஜமாக எவ்வளவு பயங்கரமாக இருக்கிறார் என்று. இரு நாட்களில் எல்லா தலை தாடை முடிகளும் வெள்ளையாகி வேறுநபர் போலவே இருந்தார். தோற்றத்தில் தெரிந்த முதுமையை விரட்ட எவ்வளவு பாடுபடுகிறார் என்று தெரிந்தது.

எல்லோருக்கும் முதுமை குறித்து ஒரு பயம் இருப்பதாக நினைக்கிறேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது அந்த முகத்தில் தெரிவது சந்தேகத்தின் ரேகைகள்தாம். நான் ஒன்றும் வயதானவனாக/ளாக தெரியவில்லையே கேட்டுக்கொள்ளும் வினாதான் அந்த பார்வை. கண்ணாடி மறந்து இரண்டு நாள் அலைச்சலில் இருந்துவிட்டு மீண்டும் பார்க்கும் எவருக்கும் ஏற்படும் பீதியை தவிர்க்க முடிவதில்லை. சலூன் கடைகளில் மாறாத கண்களோடு நம்மைக் கண்டு முடிவெட்டிக் கொள்ளாத நபர்களே இல்லை என்று ஒரு முறை அனுபவ கட்டுரைகளில் சுஜாதா சொல்லியிருந்தார். நம் முகத்தில் தெரியும் - நாம் நினைத்த - அழகும் அதன் வசீகரமும் இன்னும் தொடர்கிறதா என்கிற பயம்தான் அது என நினைக்கிறேன்.

என் தெருவில் இருக்கும் ஒரு நபர் காலையில் இன்-செய்த நல்ல உடைகளும் வழுக்கையை மறைக்க உயர்ந்த வகை தொப்பியும் அணிந்து சாலையில் செல்வார். நாள் மாறினாலும் இந்த இமேஜை மாற்றாமல் தினமும் அவர் தொடர்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் வருடாவருடம் அவர் முகத்திலும் நடையிலும் முதிர்ச்சியும் தள்ளாட்டமும் வெளிப்படுவதை, அவர் அறியாவிட்டாலும், அவரால் தடுக்க முடியவில்லை. அவர் செய்வது அந்த வயதிற்கு சற்று அதிகம் என்று தோன்றினாலும், இப்படிதான் இளமையிலிருந்து பயிற்றுவிக்க ப்படுகிறோம் என தோன்றுகிறது. உற்சாகமாக மனதை வைத்துக்கொள்ள நல்ல உடைகளை அணிவதும் இளமை தோற்றத்துடன் எப்போது காட்சியளிப்பது அவசியம் என்றும் வழியுறுத்துகிறோம்.