Showing posts with label காலச்சுவடு. Show all posts
Showing posts with label காலச்சுவடு. Show all posts

Thursday, August 7, 2025

யாக்கையும் அகதேடல்களும்



நண்பருக்கு
,

 உங்களது ' யாக்கை' நாவல் வாசித்து முடித்தேன் தற்போது. ஒரே வாசிப்பில் முடிக்க முடியாமல், காலம் எடுத்து படிக்க வேண்டிய கனமான கருப்பொருளுடன் இருந்தது. கதையின் ஊடாக வரும் விவரணைகளில். எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வரிகளில் ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது‌. மனித வாழ்க்கையை உடல் எந்தளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.அறியாமையில் வைத்திருக்கிறது. அகத்தேடலுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உடலை புறத்தேடல்களும்..புற சூழ்நிலைகளும் புரிந்துகொள்ளாத குடும்ப உறவுகளும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களும் எந்தளவுக்கு சீர்குலைக்கின்றன என்பதை சுப்பிரமணியின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. 

Saturday, May 24, 2025

யாக்கை ‍பற்றி - சுமி ஹரி

மனித மனம் விசித்திரமானது. எப்போது, எதற்காக,எதை யோசிக்கும் என்று யாராலும் முன்கூட்டியே தீர்மானித்து விட முடியாது.சூழ்நிலை தான் பெரும்பாலும் அப்படியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றாலும், சில சமயம் மனதுக்குள் தோன்றும் சலிப்பு, வெற்றிடம் என ஏதோ ஒன்று வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்து விடும்.
 

கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் ஏற்படும்போது, தன்னை அந்த குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறான் சுப்ரமணியன். அவன் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டேயிருக்கிறது.இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு சிறு வயதிலிருந்து அவன் நேரிட்ட அனுபவங்கள், அதனால் வந்த பாதிப்பால் ஆன்மீகம்,தனக்கான குரு அதில் கிடைக்கும் அமைதி என தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறான் சுப்பிரமணியன். 

Tuesday, April 15, 2025

முன்னுரை - யாக்கை நாவல்


 சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.

வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல‌ இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த‌ வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.

Saturday, December 2, 2023

ரமணிகுளம் கடிதம் -‍ பா.ராஜேந்திரன்



அன்புள்ள அசோக்குமார்

உங்கள் ‘ரமணிகுளம்’ நாவலைப் படித்தேன்.

நான் காலச்சுவடில் ரமணிகுளத்தை பெற்று படிக்க ஆரம்பித்த சில நாட்களில் நூல் தொலைந்து விட, மீண்டும் ஒருமுறை வாங்கி விட்ட இடத்தில் இருந்து படித்து முடித்துவிட்டேன்.

அருமையாக இருந்தது. தொய்வற்ற வாசிப்பு தந்தது.

  • ஒரு புறம் நகரத்தின் வளர்ச்சியால் காடு தோட்டம் ஆகி தோட்டம் தரிசாகி மனைகளாகி, மனைகள் வீடுகளாகி, வீடுகள் அடுக்ககங்கள் ஆகி அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
  •  அதே காலகட்டத்தில் மூன்று தலைமுறை மனிதர்களின் குணங்கள் உறவுகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள்.
  •  குடும்ப உறவுகள் சிதைவது.

Monday, July 1, 2019

இடம்பெயர்வின் துயரம்: காஃப்காவின் நாய்க்குட்டி



1

பெருநகரத்தில் தனித்துவிடப்படவனின் சஞ்சலங்கள் போன்ற தீராத மனவாதை பிறிதொன்றில்லை. ஓய்வில்லாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து கள்ளவழிகளில் ஐரோப்பிய நகரங்களில் வாழும் மனிதர்கள் அடையும் பெரும் கலக்கங்கள் விவரிக்கவியலாத தனிமனித கலக்கங்கள். மற்ற நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே முடியாத அனுபங்களை என்ன செய்ய முடியும். அவைகளை எங்கே கொண்டு கொட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் இருக்கும் இந்த துக்கம், மனிதர்கள் தங்களின் அடையாளமாகவே ஆகிப்போனததன் அடையாளமற்ற வாழ்க்கையை என்ன செய்வது.

Monday, October 29, 2018

பொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை


1
மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையும் தருகின்ற ஒரு இடத்தை விட்டு மனிதர்கள் பிரிந்து செல்லமுற்படுவதில்லை. பிறப்பிலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை விட்டு எளிதில் சென்றுவிடமுடியாத மனிதர்களாக தங்களை வைத்துக் கொள்வதில் ஆழ்ந்த நம்பிக்கைகளும், வெறுப்புகளையும் ஒரு சேர கொண்டவர்கள். அவர்கள் நகரத்தில் ஒதுக்கப்பட்ட யாரும் எளிதில் உள்நுழையாத, யாருக்கும் தெரியாத பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் மீதான நம்பிக்கைகளை அவர்களே இழந்தவர்கள். தங்களிடமிருந்து பிரிந்து வேறு ஒரு மனித கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையையும் இழந்தவர்கள். அவர்களது மொழியும், பழக்கங்களும் தனியே வரையரை செய்யப்பட்டவையாக உருவாக்கிவிட்டபின் அதுவே அவர்களின் பலமாகவும், பலவீனமாகவும் மாறிவிட்டிருக்கின்றன.

Friday, October 6, 2017

விவேக் ஷான்பாக்கின் நிர்வாணம் கதை



விவேக் ஷான்பாக்கின் கதை எப்போதும் மேலதிகமான ஒன்றை உணர்த்திக் கொண்டிருக்கும். எதிர்பாராத வாழ்க்கை சூழல், உறவு சிக்கல்களின் அந்தரங்க முடிச்சு, திருப்பங்களின் அதிர்வு என்று பலகோணங்களை அவர் கதைகள் கொண்டிருக்கும். கன்னட எழுத்தாளர்களான எஸ்.எல். பைரப்பா, யூ.ஆர். அனந்தமூர்த்திக்கு பின் விவேக் ஷான்பாக்கை வைக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்து இனி வர இருக்கும் அவரது நாவல்கள் அதை உறுதி செய்யலாம். வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் சிறந்த கதைகளாக வேங்கைசவாரி, கோழியை கேட்டா மசாலா அறைப்பது, அடுத்தவர் குடும்பம் போன்ற கதைகளை சொல்லலாம். இந்த மூன்று கதைகள் இல்லாமல் ஜாமீன் சாஹிப், காரணபூதம், நம் வழியில் நாம், சரவணா சர்வீஸ், சில்லறை, சுதீரின் அம்மா போன்ற கதைகள் கிடைக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சில ஆர்வலர்களின் முயற்சியால் அவரது இந்த 9 கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கே.நல்லதம்பி மொழிபெயர்த்த நிர்வாணம் (காலச்சுவடு, செப் 17) என்கிற கதையும் சேர்கிறது. மற்ற கதைகள் எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் வந்திருக்கின்றன. இந்தக் கதை நேரடியாக கன்னடத்திலிருந்து மொழியெயர்க்கப் பட்டிருக்கிறது.

Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)

Monday, August 7, 2017

தீராத திருநாள் (குமார நந்தன்) கதைப் பற்றி - எஸ். பிரசன்னகிருஷ்ணன்


ஜம்பு, ஒரு திருவிழா நடக்கும் ஊரின் உணவகத்துக்கு தோசை மற்றும் புரோட்டா மாஸ்டரின் தட்டுப்பாட்டால் அங்கு செல்கிறான். மற்ற மாஸ்டர்கள் வேறு சில கல்யாண நிகழ்வுகளுக்கு உள்ளூரிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். ஜம்பு கடந்த நான்கு நாட்களில் பிழிந்தெடுத்த துணியை போன்ற உழைப்பினால் இன்று முழுநேர ஒய்வு எடுக்கலாம் என்று காத்திருந்தான். ஆனால் காலையில் வந்து கேட்ட இள வயது முதலாளியின் பேச்சை தட்டமுடியாமல் சென்று விட்டான். கூடுதல் கூலி என்ற ஒப்பந்தம் இவனை உந்தியது. அலை போல் மக்கள் கூட்டம் உணவகத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். திருவிழா என்பதால் இடைவெளியின்றி ஜம்புவின் பணி தொடர்ந்து தேவைப்பட்டது. மதியம் பொதுவாக எடுக்கும் ஒய்வு கூட அறவே கூடாதென்று அந்த இள வயது முதலாளி கூறிவிட்டான். இவனுக்கும் மெஷின் போன்ற உடலியக்கம் பழகிவிட்டது. அந்தியில் ஊரில் விழாவுக்கான கலை உருவாகி இவன் கண்ணில் தென்பட்டது. இரவு ஒருவழியாக மக்கள் வரத்து நின்று போயி, வேலைகளை முடித்து, கூலி வாங்கி கடை ஆட்களுடன் குடித்தும் உணவருந்திவிட்டும், அருகே ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனியாக செல்கிறான். போன இடத்தில் எதிர் பாரா வண்ணம் சில முகம் தெரியா நபர்களுடன் மேலும் குடியில் மூழ்குகிறான். நிகழ்ச்சியின் இடையில்  குழம்பிய நிலையில் இவனிருக்கும் போது, மக்கள் கூட்டம் கூட்டமாக தெறித்து ஓடுகின்றனர். காக்கி சட்டை காரர்களின் வாகனங்கள் அங்குமிங்கும் ஒலி எழுப்பிய படி அலைந்து கொண்டிருந்தன. இவன் பயத்தினால் உந்தப்பட்டு நடைவேகத்தை கூட்டி கடையின் அருகில் வந்து படுத்து கொள்கிறான். பின்புறத்தில் லத்தியினால் பலமாக விழுந்தது ஒரு அடி. மைதானத்தில் கொலை நடந்ததற்கு அவன் தான் காரணம் என்று பழி சுமத்தப்படுகிறான். தலை கால் புரியாமல் காக்கி சட்டையின் மிரட்டலுக்கு இணங்கி அவர் பின்னால் சென்றான். வேறு ஏதோ ஒரு நபருடன் நீண்ட நேரம் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டிருக்கிறார். காக்கி சட்டையின் அலட்சியத்தை பயன்படுத்தி, வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அந்த வழியாக சென்ற ஒரு பேருந்தில் ஏறிவிடுகிறான்.

Monday, March 16, 2015

குர்தியரின் துப்பாக்கி

 ஈழப் போராட்டத்தை நினைவுறுத்துவது போலிருக்கிறது குர்தியரின் போராட்டம். ஈராக் நாட்டில் இருக்கும் குர்து இன பிரச்சனை தங்களுக்கான உரிமையும் தங்களுக்கு தேவையான தனி நாட்டையும் நிலைத்தையும் பெறுவதற்கு 1970லிருந்து போராடிவருகிறார்கள். அவர்களது இந்த போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. தொடர்ந்து ஈராகின் தாக்குதலால் மக்கள் பல்வேறு இடங்களில் சிதறி சொந்தங்களை, வீடுகளை, நிலங்களை இழந்து வாழ்கிறார்கள். ஈரான், சிரியா, துருக்கியை அண்டை நாடுகளாக கொண்ட அவர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.  தங்கள் வளமையான பகுதிகளை இழந்து வெப்ப பகுதியில் நாய்களைப் போல வாழவேண்டியிருக்கிறது. தங்கள் மொழி, இன அடையாளங்களை இழந்து ஈராக்கியருடன் சேர்ந்துக் கொண்டால் நலமாக வாழலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட பாதிப் பேர் வாழ்க்கிறார்கள். அப்படி ஏற்காதவர்கள் என்னேரமும் கண்காணிப்பிலும் எப்போது சாவை எதிர்கொண்டவர்களுமாக இடம்விட்டு இடம் பெயர வேண்டியிருக்கிறது.
ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்கிற சின்ன நாவல் அல்லது தன்வரலாறு எவ்வாறு மக்கள் அவதியுற்றார்கள் எனபதை விளக்குகிறது. காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிப்பெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. சந்தேகத்தின் பேரில் ஆசிரியரின் மாமாவை கைது செய்து கால்களைக் கட்டி ஜீப்பில் இழுத்துச் சென்று கொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது.