Monday, July 13, 2015

வாசிப்பு எப்படி இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் புத்தகம் பற்றி பேச்சு வந்தவுடன் எங்கங்க படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக இருக்குது என்பார். படிக்கிறதுக்கு நாமதான் நேரத்த உருவாக்னும் என்றால், நீங்க சொல்றது சரிதான் ஆனா நேரமே அமைய மாட்டேங்குதே என்று மீண்டும் அதேயே கூறுவார். பலபேருக்கு படிக்க ஆசை இருக்கிறது மனைவியின் தொல்லை, மக்களின் தொல்லை என்று பல அவர்களுக்கு இடையூராக அமைக்கின்றன. வாசிப்பை சில நாட்கள் மட்டும் தீவிரமாக செய்துவிட்டு மற்ற நாட்க‌ளில் சும்மா இருப்பார்கள். பொதுவாக நிலைத்தன்மை (consistency) இருப்பதில்லை. ஒரு புத்தகத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் விட்டுவிட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பது, மீண்டும் சில நாட்களில் வேறு ஒன்றை புதியதாக ஆரம்பிப்பது நடந்து கொண்டே இருக்கும்.
வாசிப்பு ஒரு தொடர் செயல் அதை ஒரு ரிலே ரேசாகத்தான் நினைக்கவேண்டும். ஒன்றை படித்தப்பின் அதன் தொடர்ப்புடைய மற்றொன்றை படிக்க வேண்டியிருக்கும். பின் அதன் தொடர்ச்சி. இப்படி தொடர் சங்கிலியாக செல்லவேண்டியிருக்கும். அப்படி வாசிக்கும்போது தான் வாசிப்பு ஒரு முழுமையை பெறும். மனதிற்குள் தொடர் விவாதத்தில் இருப்பவர்களால் தொடர்ந்து வாசிப்பை விடாமல் நிகழ்த்தமுடியும் என நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களும் வெகுஜன வாசிப்பை தொடரமுடியும். அத்தோடு ஒரு வாசிப்பு அடுத்த கட்ட வாசிப்பை தொடங்கிவைக்க வேண்டும். அதாவது அதைவிட தீவிரமான, அதிக நேரத்தை கோருகின்ற ஒரு புத்தகத்தை வாசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த வாசிப்பு.

வாசிப்பை எவ்வாறு கண்டடைவது என்பதைப் பற்றி எழுதிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

  1. முதலில் எந்த ஜானர்/இலக்கியவகை (genre) நமக்கானது என்று கண்டறியவேண்டும்.
  2. சின்ன வயதில் பலவற்றைப் படித்திருப்போம். ஆனால் இப்போது நாம் எதில் அதிக ஆர்வம் இருக்கிறது என்று கண்டறிந்து படிக்க முற்படவேண்டும்.
  3. புனைவு/அபுனைவு என்கிற பிரிவில் இலக்கியம், அறிவியல், வரலாறு, நுண்கலை என்று எந்த விஷயத்திலும் நம் ஆர்வம் இருக்கலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விஷயத்தில் ஆர்வம் இருக்கலாம். அது குறித்த புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிவிடவேண்டும்.
  4. ஆர்வம் இருக்கும் பிரிவுகளில் சில புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். நம் தீவிரம் பொறுத்து மேலும் சில புத்தகங்களை வாங்கவேண்டும். முதலில் நாம் விரும்பும் புத்தகம் நம் கையில் இருப்பதே நமக்கு அதை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டிவிடும்.
  5. வாசிக்க ஆரம்பித்ததும் ஒரு லிஸ்ட்/பட்டியல் நம் கையில் இருக்க வேண்டும். எதையெல்லாம் படித்திருக்கிறேன், எதையெல்லாம் இன்னும் ஆரம்பிக்க போகிறேன் என்கிற பட்டியல் நமக்கு உற்சாகத்தை அளித்துக் கொணடே இருக்கும்.
  6. படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் என்கிற பட்டியல் இருக்கவேண்டும். அதில் என்ன தேதியிலிருந்து என்ன தேதியில் இதை முடித்தேன் என்று இருக்கவேண்டும். இந்த பட்டியல் பின்னாலில் நமக்கு எந்த ஜானரில் அதிகம் ஆர்வம் இருக்கிறது எந்த ஜானரின் புத்தகங்களை அதிகம் இனி படிக்க வேண்டும் என காட்டிவிடும்.
  7. ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்ததும் நமக்கு புரியவில்லை என விட்டுவிடக்கூடாது. சில பக்கங்களை படித்ததும் மூடிவிட்டு வேறு புத்தகம் படித்துவிட்டு, புதியதாக அந்த பழைய புத்தகத்தை ஆரம்பிக்க வேண்டும். இது நம் வாசிப்பு திறனை பொருத்து அதை எப்போது வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
  8. பெரிய புத்தகங்களை படிக்கும் போது ஆரம்ப பகுதிகளில் அதிக பொறுமை காக்க வேண்டியிருக்கும். ஒரு 1000 பக்க நூலை படிக்கும் போது அதன் முதல் 10% அதாவது முதல் 100 பக்கம் மிக கடினமாக இருக்கும். 25% வரை அதாவது 250 பக்கம் வரை சற்று கடினம் குறைந்து இருக்கும். 500 பக்கங்களுக்குபின் நாம் படிக்க நினைக்கவில்லை என்றாலும் நம்மை அடுத்த 500 பக்கங்களை படிக்க வைத்து முடிக்க வைத்துவிடும் அந்த புத்தகம்.
  9. ஒரு புத்தகத்தை வேகமாக படித்து முடித்துவிட வேண்டும் என நினைப்பது தவறு. எவ்வளவு பொறுமையாக படிக்கிறோம் என்பது எவ்வாறு அதை குறித்து சிந்திக்கிறோம் என்பதும் முக்கியம். படித்து முடித்தபின் நம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு புத்தகம் எப்போதும் பயனற்றதுதான்.
  10. ஒரு புத்தகத்தை ஒரு முறை படித்ததும் அது போதும் என நினைப்பது தவறு. பல வாசிப்புகள் ஒரு புத்தகத்தின் மேல் நிகழலாம். பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் நிகழவேண்டும் என்பது அவசியம். மிக சிறந்த நாவலான போரும் அமைதியும் ஒரு முறை படித்து முடிவைத்துவிட முடியாது. நம் அனுபவமும் ஆர்வமும் நேரமும் பொறுத்தே அது அமையும்.
  11. சில புத்தகங்கள் ஒரு முறை மட்டும் வாசிக்க வேண்டியிருக்கும். சில புத்தகங்களை பல முறை வாசிக்க வேண்டியிருக்கும். சில புத்தகங்களை அடிக்கடி எடுத்து பார்க்க வேண்டியிருக்கும். இந்த புரிதல் இல்லாமல் புத்தகங்களை ஒரு தொடர்பில்லாமல் வாசிப்பது வீண்.

2 comments:

Anonymous said...

எங்கங்க படிக்க நேரமிருக்குது, அந்தவேல இந்தவேலன்னு எல்லாம் சரியாக இருக்குது!!!

கே.ஜே.அசோக்குமார் said...

சாப்பிட, தூங்க, குளிக்க நேரம் ஒதுக்கும்போது படிக்க நேரம் ஒதுக்க முடியாதா என்ன? ஒரு வேளையை தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் அது தினப்படி வேலையாக மாறிவிடும். முயற்சித்துப் பாருங்கள்.