வாசகர் எழுத்தாளர்களின் இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது போலிருக்கிறது.
முன்பு எழுத்தாளர்கள் கடித தொடர்பில் தான் பத்திரிக்கை ஆசிரியர்களுடன் பேச வேண்டியிருந்தது.
ஒவ்வொரு படைப்பையும் எழுதிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. தொடர்ந்து
எழுதுபவர்கள் மட்டும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்து போவர்களாக இருந்தார்கள்.
அந்தமாதிரியான சூழலில் எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் பெரிய பரிச்சயம் இருக்க வாய்ப்பு
இருந்ததில்லை. எழுத்தாளரை காண அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பதே ஒரு வாசகருக்கும்
பெரிய வேலையாக இருந்தது. அதுவும் மிக பிரபல்யமாக இருக்கும் எழுத்தாளருக்கு மட்டுமே
கிடைக்க கூடியது.
இதனால் சாதாரண எழுத்தாளர்கள் தங்களை மறைத்துக்
கொள்ளவும், வெவ்வேறு பெயர்களில் எழுதவும்
விரும்பினார்கள்.
ஆனால் இன்று நிலைமை வேறுமாதிரியானது. சின்ன, பெரிய எழுத்தாளர்கள் தாங்களே இணையத்தில் பத்திரிக்கையை (ப்ளாக்கை) தொடங்கிக் கொள்ள முடியும். எழுத்தாளர்களாக
இருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை, சிறந்த வாசகர்களாக இருந்தாலே
போதுமானது. வாசகர்கள் தங்களுக்கு பிடித்த செய்திகளை, தங்கள்
சொந்த படைப்புகளை,
முந்தைய படைப்புகளைகூட, அதில் வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. யாரையும் சார்ந்திருக்க வேண்டிய
அவசியமில்லை. கிட்டத்தட்ட வாசகர்கள் அனைவருமே எழுத்தாளர்களாக அவதாரமெடுக்கும் காலமாக
மாறிவிட்டது. எழுத்தாளர்களின்
படைப்புகளை வாசகர்களும், வாசகர்களின்
படைப்புகளை எழுத்தாளர்களும் படிக்க வேண்டியிருக்கிற்து. எழுத்தாளர்களும் வாசகர்களும் இன்று ஒரே
தளத்தில் இருக்கிறார்கள்.
அத்தோடு வாசகர்கள் அனைவரிடமும் ஒரு கிராப்ட் இருக்கிறது. என்ன எழுத வேண்டும்
என்கிற புரிதலும் அவர்களிடம் உண்டு என்பதை அவர்கள் எழுதும் ப்ளாகுகளை படிப்பதிலிருந்து
புரிந்துக் கொள்ளலாம். சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம், தினப்படி செய்திகள் அதை சார்ந்து அவற்றின் மீதான தங்களின் தாக்கங்கள், நாஸ்டால்டியா கட்டுரைகள், என்று தொடர்ந்து எழுத முடிகிறது. ஒரு வாசக/எழுத்தாளர்
தனக்கு குழந்தை வளர்ப்பைப் பற்றி எழுத அதில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை தொகுப்பாக
பல கட்டுரைகளாக எழுதி விடுகிறார்.
குழந்தை வளர்ப்பை பற்றி எல்லா தரவுகளையும் தந்துவிடவேண்டும் என்கிற முனைப்பு அவரிடம்
இருக்கிறது. வலைதளங்களில்
தொடர்ந்து இப்போது முகநூலில் நேரடியாக எழுதும் பழக்கமும் வந்துவிட்டது.
சாதாரணமாக காலையில் (அல்லது மாலையில்) தொடர்ந்து எழுதிவரும் வாசக எழுத்தாளர்கள் அல்லது வலைதள எழுத்தாளர்கள
அறிவேன். இவர்களிடம் பெரிய விஷயங்களை எதிர்ப்பார்க்க முடியாதுதான். ஆனால் தினமும் கொஞ்சம்
தகவல்களை புதிய புனைவுகளை தங்கள் வாசிப்பு திறனுக்கு தக்கபடி படிக்க ஆர்வம் கொள்ளும்
வாசகர்களுக்கு இவர்களின் வலைதளங்கள் உதவி புரிகின்றன.
எழுத்தாளர்களின் பாடு வேறுமாதிரியான திண்டாட்டமாக இருக்கிறது. இன்றைய சூழலில் ஒரு எழுத்தாளர் பத்திரிக்கையில்
மட்டுமல்ல, வலைதளங்களில் எழுதினால் மட்டும்
போதுமானதாக இல்லை. தினமும் தனக்கென உள்ள வலைதளத்தில் எதாவது கிறுக்குவது ஒரு மாததிற்கு
ஒரு முறை வாசகர்களை சந்திப்பதும் சில முக்கிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதும் அந்த நிகழ்வுகளை
பற்றி மீண்டும் வலைதளங்களில் எழுதுவதோடு நில்லாமல், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம்
இருக்கிறது.
வாசகர்களும் எழுத்தாளர்களாக ஆகிவிட்டதால் எழுத்தாளர்கள்
தங்களை, தங்களைப் பற்றி பிரஸ்தாபிக்க சில
முயற்சிகளைச் இப்படி செய்யத்தான்
வேண்டியிருக்கிறது போலும். அப்படி செய்யாத ஒரு சமயத்தில்
பிரபலமாக இருந்த எழுத்தாளர்கள் இப்போது யாரும் கண்டுகொள்ளப்படாத காணாமல் போய்விட்டவர்களை
நாம் அறிந்தே இருக்கிறோம். சுஜாதா ஒரு கட்டுரையில் சொன்னது நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில்
ஒவ்வொருவரும் வாழ்வில் 15 நிமிடங்களாவது
பிரபல்யமாக இருப்பார்கள் என்று.
கடைசியாக ஒன்று, வலைதளங்கள் அளிப்பது சராசரிகளைதான். சராசரி எழுத்துகள், சராசரி சிந்தனைகள். இந்த நீர்த்துபோனதை
புரியாதவர்கள் மீண்டும் சராசரிக்குள்ளேதான் உழலவேண்டியிருக்கும். ஆனால் வாசக எழுத்தாளர் இடைவெளி
குறைந்திருப்பதை மனதில் கொள்ளத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment