குழந்தைகளுக்கு விடுமுறை கொண்டாட்டங்கள் அவர்களின் வயதிற்கு
ஒரு முக்கியமான நிகழ்வு. தங்களை புதுப்பித்துக்கொள்ள புதிய உலகைப் பற்றி அறிந்துகொள்ள, புதிய பொருட்களும் அது இயங்கும் விதங்களைப் பற்றி அறிந்து கொள்ள
இந்த விடுமுறை தினங்கள் பயன்படுகின்றன. நான் பள்ளியில் படித்தப்போது விடுமுறை வந்தததும் முழு நாளும்
தெருவில் தான் இருப்போம். எதாவது ஒரு வீட்டில் கும்பலாக கொஞ்ச நேரம் இருப்போம் பின்
வேறுஒருவீடு பின் மற்றொரு பொது பகுதி என்று எல்லா இடத்திலும் அலைந்து திரிந்திருக்கிறோம்.
என் மகன் நந்தன் போன ஆண்டைபோல தன் விடுமுறைக்கு எங்கள் ஊரான
கும்பகோணம் தஞ்சாவூருக்கு சென்றிருந்தான். புதிய நண்பர்கள் அவனுக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி
அவனுக்கு. அப்பா நான் வரவில்லை, இரண்டு நாளில் திரும்பிவிட்டேன்
என்பதுகூட அவனுக்கு பெரியதாக படவில்லை. போன ஆண்டைபோல இந்த ஆண்டும் என்னை மறந்து மகிழ்ச்சியாக
கொண்டாடியிருந்தான்.
ஊருக்கு அழைத்து செல்லும்போதே அப்பாவை தேடக்கூடாது, வேண்டும் என அழக்கூடாது,
உடனே வரமுடியாது
என்றெல்லாம் சொல்லியிருந்தேன். அவன் அம்மாவிடம் பேசும்போதெல்லாம் அவன் உங்களை தேடுவதேயில்லை
என்பது பதிலாக இருந்தது. அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது என்று முன்பே இருவரும்
பேசி வைத்திருந்ததால் அப்படி எதுவும் நடக்காமல் போனது சின்ன வருந்தம்தான்.
தஞ்சையில் அம்மா வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் இருந்த
அவன் வயதொத்த ஒரு சிறுமி அவனுக்கு பிரண்ட் ஆனாள். பின் அவளின் பிரண்ட் அவளின் பிரண்ட்
என்று எட்டு சிறுமிகள் அவனுக்கு நண்பர்களாக ஆனார்கள். சிறுவர்கள் நண்பர்களாக இல்லை
என்பது வருத்தமாக இருந்தாலும் அவர்களின் விளையாட்டை மறைந்திருந்து பார்ப்பது அந்த அழகுதான். சிறிது நேரம் ஓடிபிடித்து, சிறிந்து நேரம் நோண்டி,
பின் கண்ணாம்பூச்சி
ஆட்டங்கள் முடிந்ததும் அமர்ந்து விளையாட்டுகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு
விளையாட்டு இருக்கும். கல்யாணம், டீச்சர், விளையாட்டுகள் பொதுவாக இருக்கும். இவைகள் நம் காலத்தில் விளையாட்டது
போலிருந்தாலும் இன்றும் சிறப்பானதாகவே தோன்றுகிறது.
கல்யாண விளையாட்டில், ஒரே சிறுவன்
என்பதால் அவன் தான் மாப்பிள்ளை, மாலைகள் கொடியில் தொங்கும் துண்டுகள்
இருக்கும் ஒரு அய்யர் இருப்பார், பொதுவாக சின்னதாக இருக்கும் பெண்தான்
மணமகளாக இருப்பாள். மாலைகள் மாற்றப்படும், தாலி கட்டப்படும், பின் பந்தி நடைபெறும். அதற்குபின் அவர்களுக்கு தெரியவில்லை. ராத்திரி
ஆயிடுச்சு எல்லாம் தூங்குங்க என்று நிற்கும். பின் எழுந்ததும் முதலில் மாப்பிள்ளை தான்
அதிகாரம் செய்வார். நீ போய் சமையல் செய், நீ போய் பாத்திரம் கழுவு என்பார்.
திருமணம் முடிந்ததும் ஆண்களுக்கு அதிகாரம் வந்துவிடுகிறதா? தெரியவில்லை. அது முடிந்த கொஞ்ச நேரத்தில் வளைகாப்பு ஆரம்பித்துவிடும்.
நெற்றியில் குங்குமம், கையில் வளையல் என்று மாறி மாறி
நடந்து முடியும் மீண்டும் பந்தி. பின் குழந்தை பிறந்ததா தெரியாது. ஆனால் ஐந்து வயது பிள்ளைகளுக்கு
இதுவரைதான் வரும்போல. இன்னும் கொஞ்சம் வளந்ததும், குழந்தையும்
அதை கவனிப்பது நடப்பதாக விளையாட்டுகள் இருக்கும். ஆண் குழந்தைகள் சேரும்போது முரட்டுதனமாக ஓடுவதும் குதிப்பதும்
நட்க்கும். ஆனால் பெண் குழந்தைகள் சேரும்போது பொதுவாக இந்த மாதிரி கல்யாணம், டீச்சர் விளையாட்டுகளே நடக்கிறது. இது
தவறு இல்லைதான். அவர்களின் உடல் மன ரீதியான விஷயங்களிலேயே அவர்கள் கவனம் கொள்கிறார்கள்.
இரு குழந்தைகளும் சேர்ந்து விளையாடும்போது பொதுவான அம்சங்களோடுதான்
விளையாடுகிறார்கள். அப்போது ஆண் குழந்தைகள் ஓடுவது குறைந்தும் பெண் குழந்தைகள் ஒரே
இடத்தில் அமர்வதும் மாறி, ஒரு நடுவாந்திர
விளையாட்டை அப்படி ஒன்றாக மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும்போது, அவர்களின் டிவி பார்க்கும் நேரம், நொறுக்கு தீனி, சோம்பல் வெகுவாக குறைந்து ஒவ்வொரு நாளையும்
புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்கிறார்கள். அந்த நாட்களில் நாம் அளிக்கும் வேறு எந்த பெரிய
பரிசு பொருட்களும் அவர்களுக்கு பெரியதாக தெரிவதில்லை. பள்ளி வீடு என்று தினப்படி நிகழ்வுகளுக்குபின்
ஒரு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தொடர்ந்து தங்களை ஒத்த குழந்தைகளுடன் விளையாட அவர்களின்
கற்பனைகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நம் சூழலில் நாம் அளிக்கும் ஒரு பரிசாகத்தான் இந்த விடுமுறை
நாட்களைதான் நினைக்கவேண்டும்.
No comments:
Post a Comment