முன்பே இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் 2015 ஜனவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுவது என்கிற கொள்கையை எடுக்க
ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எழுதுவது என்பது திட்டம். ஆனால் அப்படி முழுமையாக நடைபெறவில்லை
என்றாலும் 135 போஸ்ட்கள் எழுதியிருக்கிறேன். சனி, ஞாயிறு தவிர தினம் ஒன்று என்று வைத்தால் சராசரியாக 250 எழுதியிருக்க வேண்டும். அதனினும் பாதியாக எழுதியிருந்தாலும் திருப்தியாக
இருந்தது. எழுதும் ஒவ்வொரு நாளும் ஒரு மனநிறைவை அடைந்தேன். முகம் தெரியா ஒரு மனிதருக்கு
செய்த உதவியால் அடைந்த மகிழ்ச்சி போல நிறைவாக இருந்தது அந்த நாள்.
சில நாட்களில் எழுத முடியாமல் போனதற்கு தொடர்ச்சியாக ஒரே
மாதிரியாக எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு கொண்டதால்தான். ஒரே மாதிரியான உள்ளடக்கம்
இருக்கும்போது தினமும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே
எனக்கு நானே அரசியல், குடும்பம், இலக்கியம், சினிமா என்று ஒவ்வொரு புது பகுதியிலிருந்து
எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.











