இந்தியாவில் எதாவது புது சட்டம் வந்தால் அதற்கு பெரிய எதிர்ப்பு
இருந்துகொண்டே இருக்கும். பழைய ராஜா காலத்தில் சில மோசமான சட்டங்கள் போடப்பட்டதால்
அதை எதிர்க்கமுடியாத அந்த காலத்தை நினைத்துக் கொண்டு எதை அரசு சொன்னாலும் எதிர்ப்பது
என்று வழக்கமாகிவிட்டது என நினைக்கிறேன். நான் தில்லியில் இருந்தபோது ஹெல்மெட் அவசியம்
என்று இருந்தது. மிக அதிகமான மோசமான சாலைவிபத்துகள் அங்குதான் நிகழ்கின்றன. சர்தார்கள்
இதற்கு விலக்கு வேண்டும் என்று போராடினார்கள். டர்பன் கட்டியிருக்கும்போது ஹெல்மேட்
போட முடியாதே. அதற்குபின் கொஞ்ச காலத்தில் பின் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவேண்டும்
என்கிற சட்டம் வந்தது. அப்போது வேறு மாதிரியான விலக்கு வேண்டும் என்று போராடினார்கள்.
அதாவது சர்தார்களுக்கு பின்னால் அமர்ந்து வரும் அவர்களின் மனைவிகளுக்கு விலக்கு வேண்டும்
என்று.
இதைவிட வேறு காமெடி
இருக்குமா தெரியவில்லை. கொஞ்சநாளில் அவர்களுக்கும் விலக்கு கிடைத்தது.
பலர் ஹெல்மெட் அணிவதை சங்கடமாக, தண்டனையாக நினைக்கிறார்கள். இந்த வெய்யில்ல
எப்படி ஹெல்மெட்ட போட்டுகிட்டு போறது, தலைமுடியெல்லாம் இதனால உதிர்ந்திடும், சரியாவே தெரிய மாட்டேங்குது, போன்ற நொண்டி சாக்குகள் நிறைய இருக்கும்.
வெளிநாடுகளில் நின்ன சைக்கிளுக்குகூட அதற்கான ஹெல்மெட்களை
அணிகிறார்கள், அதுவும் குழந்தைகளுக்கும். இது
மாதியானவைகள் குழந்தை பருவத்திலிருந்தே வரவேண்டும் போல. பெரிய வண்டிகளில் சீறிபாய்ந்து
செல்லும் 200சிசி வண்டிகளுக்கும் அணிய தயங்குகிறார்கள்
என்பது ஆச்சரியம். சாதாரண வண்டியில் 25 கிமீ வேகம் சென்று கீழே விழுந்தாலே மரணம் அடைய வாய்ப்பிருக்கிறது.
எல்லா பைக் விபத்துகளிலும் முதலில் அடிபடுவது தலையில் தான் இருக்கும் என்பதை நாம் பலசமயங்களில்
பார்க்கலாம். முன் நெற்றி அல்லது பின்மண்டை இரண்டில் தான் அதிகம் காயம் ஏற்படும். என் நண்பர் ஒருவர் சிக்னலில் நின்றிருந்தவரை
பின்னால் வந்த மாநகர பேருந்து அடித்து உடலில் அடிப்பட்டும் ஹெல்மெட் அணிந்து தலையில்
அடிபடாததால் தப்பித்தார்.
ஆனால் உடலில் வேறுபாகங்களில் அடிபட்டு இறந்துவிட்டால் என்ன
செய்வது என்று ஒரு விதண்டாவாதம் உண்டு.
நிச்சயம் அதற்கு யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. பெரிய
விபத்துகளில் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அணியாவிட்டாலும் ஒன்றுதான். ஆனாதை இதைவிட
மற்றொன்றும் கூறப்பட்டது. ஹெல்மெட்டை அணியாமல் ஹண்டில் பாரில் மாட்டி சென்ற ஒருவர்
ஒருதிருப்பத்தில் ஹெல்மெட் மாட்டியதால் திருப்பமுடியாமல் மீடியனில் மோதி இறந்துவிட்டார்.
ஆகவே ஹெல்மெட்டை தடை செய்யவேண்டும் என்று வழக்காடப்பட்டது. தமிழகத்திலேயே பல சமயங்களில்
கட்டாயம் ஆக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் கூறப்படும் ஒரு விஷயம் இருக்கும், அது ஹெல்மெட் கம்பெனிகளிடம் அரசு பணம்
வாங்கிவிட்டது என்று.
முன்பு லாரிகளால் இரவில் அதிக விபத்துகள் ஏற்ப்படுகின்றன
என்று தெரிந்தது அப்போதைய முதல்வர் எம்ஜியார் லாரிகளும் முகப்பில் மஞ்சள் வண்ணம் பூசவேண்டும்
என ஒரு சட்டம் கொண்டுவந்தார். தூரத்தில் வரும் போது இரவிலும் லாரியை அடையாளம் காண எளிதாக
இருந்தது. ஆனால் கூடவே ஒரு பேச்சு இன்று இருக்கிறது, எம்ஜியார் பெயிண்ட கம்பெனிகள் கிட்ட பணத்தை வாங்கிட்டார்
என்று.
இது என்ன மாதிரியான
மனநிலை என்று புரிந்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு சினிமா வெற்றிப் பெற்றால் அதுல செலவே
இல்லைங்க என்பார்கள். ஒரு படத்தின் பிரம்மாண்டமான ஒரு காட்சிக்கு கொடுத்த காசு இதுக்கே
சரியாயிடுச்சு என்பார்கள். இதே மனநிலைதான் எல்லாவற்றிற்கும் என நினைக்கிறேன்.
விகடனில் இதைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. எல்லாரையும்
நிறுத்தசொல்லு நான் நிறுத்துறேன் என்பதுமாதிரியான கட்டுரை. ரோடுகள் சரியில்லை, கார்கள் அதிகம், ஆட்டோக்கள் அதிகம் இதெல்லாம் குறைக்க
வேண்டும் பின் ஹெல்மெட் கட்டாயத்தை கொண்டுவரலாம் என்று இருந்தது. போக்குவரத்து போலீஸ்காரருக்கு
அதிக வருமானம் இதனால் கிடைக்கும் அதுதான் பயன் என்பவர்களும் உண்டு. உண்மையில் கட்டாயம்
இல்லாதபோதும் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களை போலீஸார் பேப்பர்களை காட்ட சொல்லி கேட்பதில்லை.
ஏனெனில் அவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
கடைசியாக புல் தடுக்கி விழுந்து இறப்பதுவும் உண்டு, மலையிலிருந்து விழுந்து பிழைத்தவரும் உண்டு.
விபத்துகளில் சில காயமடையாமல் பிழைப்பதால் ஹெல்மெட்டே கூடாது வேண்டாம் என்பவர்கள் சில
காரணங்களுக்காக அவர்களுக்கு அணிய விருப்பமில்லை என்பதுதானே தவிர அதில் இருக்கும் பாதுகாப்பைப்
பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக சின்னசின்ன பின்னடைவுகளைப் பற்றி பெரிதாக்கி பேசுகிறார்கள். நடக்க கால்களுக்கு செருப்பு எப்படி
தேவையோ அப்படி இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் தேவை.
No comments:
Post a Comment