Wednesday, August 19, 2015

கீழே நிற்கும் மனிதர்கள்

நம்மிலும் குறைந்த நிலையில் உள்ள மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த மாதிரியான குணமுடையவர் என்பதை காட்டிக் கொடுத்துவிடும் என்பார்கள். பொருளாதார நிலையில் நம்மைவிட குறைந்தவர்கள், நம்மைவிட குறைந்த பதவியில் உள்ளவர்கள், நம்மைவிட விலை குறைந்த உடைகளை அணிபவர்கள், நம்மைவிட கறுப்பானவர்கள், நம் சாதியைவிட குறைந்த படிநிலையிலுள்ள‌ சாதியை உடைவர்கள் என்று பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருப்போம், அவர்களை நாம் எப்போது ஒரு மாற்று குறைந்தவர்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ அல்லது அப்படி நிஜமாகவே நடிக்கிறோமா என்பதை சொல்லமுடியாது. அதே எல்லாவகையான மேல்படியில் உள்ளவர்களை சந்திக்கும்போது மனதில் வைது கொண்டிருப்பதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு ஒன்று, இந்த சூழலுக்கு எதிரான அதாவது நம் சமூகம் அது குறித்து முன்பே கட்டமைத்து வைத்திருக்கும் ஒன்றிற்கு எதிராக, நடக்கும் போது நாம் சர்வநிச்சயமாக செய்வது 'இது மாதிரி உலகத்துல இன்னும் நடந்துகிட்டுதான் இருக்குதா, என்ன உலகம் இது' என்பதாகத்தான் இருக்கும்.


வண்டிக்கு லிப்ட் கேட்கும் ஒருவர், ஹோட்டலில் இருக்கும் சர்வர், வீட்டு வாசலில் பொருட்களை விற்க நம்மை நாடி வரும் மனிதர்களை நாம் எந்த‌ கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம். தனக்கு சொந்தமான ஒரு இடத்தை ஒருவருக்கு வாடகைவிடுவதற்கு, தன் மகனுக்கு ஒரு குடும்பத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு என்று பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள‌ மனிதர்கள் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சற்று மேல் நிலையில் இருக்கும்போது நம்மிடம் வெளிப்படும் கம்பீரமும், கவனமின்மையும், அகங்காரமும், பொதுவாக கவனம் கொள்ளப்படுவதில்லை அதாவது கண்டுகாணாமல் விட்டுவிடப்படுகிறது. மேற்ச்சொன்ன அதே சூழ்நிலை மாறியிருக்கும்போது நம் கம்பீரம், கவனமின்மை, அகங்காரம் இன்னபிற செய்கைகள் மிக கவனமாக ஒளித்துவைக்கப்படுகிறது. அப்போது அவைகள் வெளிப்படுகிறதா எனபதை மேல் நிலை மனிதர்கள் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். சற்று வெளிப்பட்டாலோ அல்லது அதிகம் வெளிப்பட்டாலோ எத்தனை அகங்காரம் பிடித்தவன் இவன் என்று அங்கேயே கோடிட்டி காட்டப்படும்.
மேல் நிலையில் இருக்கும்போது வெளிப்பட்டால் அது கெளரவமாகவும், கீழ் நிலையில் இருக்கும்போது அது வெளிப்பட்டால் அது அகங்காரமாகவும் கொள்ளப‌டும். அதாவது அந்த விஷயமே அப்போதுதான் கண்களுக்கே தெரியும்.
ஒவ்வொருவரும் தன் படிநிலைகளில் உயர்ந்த இடத்திலேயே எப்போது இருக்க முடிவதில்லை. முதலில் சின்ன வேலை, பின் சற்று பெரிய வேலை, பிறகு பதவி உயர்வு, என்று மாறித்தான் வரவேண்டியிருக்கும். அதுவும் பல்வேறு சரிகட்டுகளுடன் அதை அடையவேண்டியிருக்கும். இப்போது அது முடிந்திருக்காது தொடர்ந்தபடிதான் இருக்கும்.
நாம் அறிந்த இந்த நடைமுறை வாழ்வை கொஞ்சமும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் தான் வெற்றியை அடைந்ததாக கருதப்படுவதாக நினைக்கிறேன்.
ஒரு பொது இடத்தில், ஒரு குடியிருப்பு பகுதியில், அலுவலக நண்பர்கள் சந்திப்பில், உறவினர்கள் சந்திப்பில் என்று எந்த மக்கள் குழுமத்திலும் தனக்கான இடத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவன் அந்த வெற்றியை அடைந்தவனாக கருதப்படமாட்டான். தொடர்ந்து நீங்கள் போராடியபடி இருக்கவேண்டும். உங்கள் இடத்தை மேற்ச் சொன்ன எல்லா இடத்திலும் பிரஸ்தாபித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்யதெரியாதவர்கள் அந்த இடத்தை அடைந்ததால் எந்த பயனும் இல்லை. சோற்றுக்கல்வி நமக்கு அளித்த முக்கியமான கொடைகளில் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.