ஒருமுறை திருவாரூர் சென்றிருந்தபோது பஸ் நிலையத்தில் பெரிய
குடும்பம் நின்றிருந்தது. அம்மா அப்பா, மனைவி, அவள் அம்மா, அப்பா, கூடப் பிறந்தவர்கள் என்று புதுத் துணிகளை அணிந்து முகத்தில் புன்னகையோடு
வழியணுப்ப வந்ததிருந்தார்கள். அவர்களின் சத்தமான பேச்சில் அதிரடியான உடல்மொழியில் அவர்கள்
மிக சந்தோசத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வர சற்று
தாமதமானதால் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பேருந்து வந்ததும் வேறுப்பக்கதில்
இருந்தெல்லாம் மக்கள் வந்து ஏறினார்கள். சென்னை செல்லும் பேருந்து. இந்த கூட்டதிலிருந்து
புதுமாப்பிள்ளை போன்றிருந்தவர் மட்டுமே ஏறினார். பின் அவர் வெளிநாடு செல்கிறார். டிரைவருக்கு
பின்சீட்டில் அவர் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் வண்டியைப் பிடித்துக்கொண்டு அருகில்
நின்று அங்கேயே அந்த புதுப்பெண் உட்பட, இனிமையாக பேசிக்கொண்டிருந்தார்கள். நடத்துனர் விசில் ஊதியதும் புதுப் பெண்ணின் கண்கள் கலங்கின, பின் வேகமாக விசும்ப ஆரம்பித்தார். புது
மாப்பிள்ளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. லேசாக சமாதானப்படுத்தினார். பொதுவாக
பெண்கள் சில இடங்களில் அழுதிடவேண்டும் இல்லையென்றால் மற்றவர்களின் பார்வைக்கு அவள்
அழுத்தகாரி என்று பெயர் வந்துவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால் அந்த பெண்ணின் விசும்பல், அழுகைகள் நிஜமாக சங்கடமாக இருந்தது. அத்தனை
பார்வையாளர்கள் மத்தியில் தடித்த தாலியை அணிந்த பெண் ஒருவளின் இந்த செய்கை அனைவரையும்
சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும். அந்த புதுமாப்பிள்ளை மிகவும் சங்கடத்தில் நெளிந்தார்.
ஒரு கட்டத்தில் போதும் என்றாகி முகத்தை வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். பேருந்து வேகமெடுத்து
போய்விட்டது. அவள் உறவுகள் சற்று தூரே நிற்கே புதுச்சேலையுடன் அங்கே நின்றிருந்தாள்
அந்த பெண். பிறகு அவளை அழைத்துச் சென்றிருக்கலாம்.
அந்த வலி இருவருக்குமானது மற்றவர்களுக்கு நிச்சயம் புரியாது
அல்லது மற்றவர்களுக்கு அதுஒரு பெரிய விஷயமாக தோன்ற வாய்ப்பில்லை. சங்கப் பாடல்களில்
ஆண்கள் பலவகையில் பெண்களை பிரிந்து செல்கிறார்கள். கலவிக்கு பின் பிரிந்த காதலன், பொருள் தேடிச் செல்லும் தலைவன் என்று செல்லும்
ஆண்கள் பெண்களை தவிக்க விட்டு செல்வதைப் பற்றி சொல்லியிருக்கும். தோழியிடம் தலைவி சொல்வது, தலைவி தோழியிடம் புலம்புவது, தோழி தலைவனை கண்டு வருவது என்று நிறைய
இருக்கும். எல்லாமே தலைவிக்கு ஏற்படும் பிரிவு துயரைப் பற்றிய் பேசுவதாக இருக்கும். சிலநேரங்களில் தலைவி
தனக்கு இருக்கும் துயரம் போன்றுதான் அவனுக்கு இருக்கும் என நினைத்துக் கொள்வாள். ஆனால்
ஆணின் துயரை எங்கும் அங்கு சொல்லப்படுவதில்லை. உண்மையில் ஆண்களின் துயரம் பெண்களின் துயரைவிட
பலமடங்கு பெரியது. அது அவனின் தன்மையால், வளர்ப்பால், வெளியே
தெரியாமல் மறைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆணும் நிச்சயம் தனிமையில் அழுதுக் கொண்டேதான்
இருப்பார்கள்.
இப்போதைய காலகட்டத்தில் ஆண் பிரிந்து வெளிநாடு செல்வதும்
இரண்டு ஆண்டுகளுக்குபின் மீண்டும் தாயகம் வந்து ஒருமாதம் இருந்து மீண்டும் செல்வதுதான்
நடந்துவருக்கிறது. திருமணம் ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் மீண்டும் வெளிநாடு
செல்ல வேண்டியிருக்கிறது. ராமநாதபுரம், திருநெல்வேலி, போன்ற மாவட்டங்களிலிருந்துதான்
அதிகம் வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள்.
திருமணம் ஆன ஒரு மாதத்தில் பிரிந்து செல்கிறவர் குழந்தை
பிறந்து ஒரு வயது ஆனபோதுதான் வருவார். அதுவரை செல்போனில் குழந்தையை கொஞ்சுவது பேசுவது
நடக்கும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இப்படிதான் இருந்தார். அவருக்கு பிறந்த இரண்டு
குழந்தைகளையும் அவர் நேரில் இரு வருடங்களுக்கு ஒரு முறைதான் பார்க்க முடியும். அப்பா
என்கிற ஒட்டுதல் இல்லாமலேயே வளர்கின்றன. அப்பாவை யாரோ ஒரு மனிதர் என்று நினைத்தே பழகிவருகின்றன அவரின் குழந்தைகள்.
இங்கிருக்கும் பெண்களுக்கு அவர்களுடன்கூட அவர்களின் உறவினர்கள்
இருப்பார்கள். அவர்களின் துணை அவர்களுக்கு ஆறுதலாக தோன்றும். ஆனால் ஆண்களுக்கு நண்பர்கள்
மட்டுமே உண்டு,
நாளெல்லாம் வேலை
செய்யவேண்டிய நிர்பந்ததில், பொதுவாக, இருப்பார்கள். பேச்சலராக இருக்கும் காலங்களில்
சுதந்திரமாக இருக்க நினைக்கும் ஆண்கள், திருமணம் ஆகி வயதானபின்
அவர்களுக்கு ஒரு பேச்சுதுணை, தன் வேலைகளை செய்துர வேண்டும் என நினைக்க தொடங்கிவிடுவார்கள். அந்த
நேரங்களில் அருகில் ஒருவரும் இல்லை என்பது பெரிய துயரமாகவே இருக்கும் பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
ஆணின் துயரை பொதுவாக கருத்தில் கொள்வதே யில்லை. எனக்கு தெரிந்து
விக்ரமாதியன் நம்பி எழுதிய பொருளவயின் பிரிவு கவிதைதான் கொஞ்சம் அதை பேசியிருக்கிறது.
சிறுகதை, நாவல், போன்ற
வகைகளில் அதிகம் பேசப்பட்டதேயில்லை.
நேரில் அவர்களுடன் பேசும்போது அந்த துயரை மறைத்தே நம்மிடம்
பேசுகிறார்கள். பதினைந்து ஆண்டுகளாக வெளியில் இருக்கும் ஒரு நபர் என்ன மாதிரியான மனநிலையில்
வாழ்கிறார் என்பது ஆச்சரியம்தான். ஆனால் பழகிவிடுகிறது. அதுவே வாழ்க்கை என்று ஆனபின்
எல்லா துயரத்தையும் மனதில் வைத்தே வாழப் பழகிக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment