இரவும் பகலும் வேறுவேறு உலகங்கள் என்கிற எண்ணம் ஏன் வருகிறது.
பகலில் இருக்கும் உலகமும் இரவில் தெரியும் உலகமும் முற்றிலும் வேறாக இருப்பதுதான். அது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே உலகம் இரவில்
தோன்றும் எண்ணங்கள் பகலில் தோன்றும் எண்ணங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இரவில் நமக்கு
தோன்றும் மென்மையான விஷயங்கள் பகலில் அதே விஷயங்கள் நமக்கு கடினமானதாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது.
அதே வேளையில் பகலில் நமக்கு தோன்றாத பல்வேறு அகங்காரங்களும் வன்மமும் இரவில்தான் வெளிப்படுகின்றன.
சில நேரங்களில் தோன்றும் கனவு முற்றிலும் நாம் கண்டிராத நம் பகல் உலகத்திலிருந்து வேறாக
இருக்கிறது. மனதிற்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் நம் கனவில் வேறுஒருவராக நாம் பார்த்தேயிராத
மனிதராக தோன்றுவதும் பகலில் எழுந்ததும் அது கனவல்ல நிஜம் என்று நம் மனம் நம்புவதையும்
எப்படி புரிந்துக் கொள்வது. பகலிலிருந்து இரவு ஏன் இத்தனை வேறுபடவேண்டும். பகலில் நாம் காணும்
காட்சிகள், செயல்கள், செய்கைகள், எல்லாமே இரவில் வேறு அர்த்ததத்தை கொண்டவைகள்.
எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வெளிச்சத்தில் ஒரு பெண்ணை நீர்வாணமாக பார்க்கும்போது
சற்று சங்கடமும் அருவருப்பும் ஏற்படவே செய்யும். ஆனால் இரவில் எல்லா பொருட்களுக்கும்
ஒரு அழகு வந்துவிடுகிறது. எத்தனை சுமாரான பெண்ணாக இருந்தாலும் இரவின் குறைந்த ஒளியில்
அவள் அழகாகவே தெரிவாள். இரவு அழகுகானதுபோலவே இருக்கிறது. இரவு காமத்திற்கானதும்கூட.
காமத்தை எப்போதும் இரவுடனேயேதான்
இணைக்க வேண்டியிருக்கிறது.
பகலில் நமக்கு ஆசை, கோபம், வேகம் என்று
நாம் விரும்பும் அத்தனையும் தேவையாக இருக்கிறது. இரவு வந்தது உடல் தளர்ந்து ஓய்வு கொள்ள
நினைக்கும்போது மேல் தோலை நீக்கியபின் தெரியும் சிவந்த சதைகள் போல ஆசை,கோபம், வேகம் போன்றவைகள் மறைந்து காமமும், வேட்கையும், அழகுணர்ச்சியும் என்று நாம் பகலில் நினைக்காத
அனைத்தும் வெளியே வந்துவிடுகின்றன.
தெளிவாக தெரியும் பகல் பொய்யாகவும் இருக்கிறது, இருளிலில் இருக்கும் இரவு உண்மையாகவும் இருக்கிறது. தெளிவாக பொய்
மறைக்கப்படுகிறது பகலில், பொய்யாக உண்மை மறைகிறது இருளில். பகலில் பல்வேறு உணர்ச்சிகளின்
மூலம் நம்மை மறைத்துக் கொள்கிறோம். இரவு இயற்கையாகவே மறைக்கப்பட்டதை அதன் இருளில் வெளிப்படுத்துகிறோம்.
சென்னையில் கொஞ்ச காலம் இரவு ஷிப்டில் வேலை பார்த்து இருக்கிறேன். இரவில் இயங்கும் பஸ்கள், கடைகள், மனிதர்கள் பகலில் இருக்கும் மனிதர்களின் தினசரி செய்கைகளிலிருந்து
வேறுபட்டு வேறு உலகத்தில் இருப்பதுபோலிருக்கும். வேறு கிரகத்திற்கு வந்துவிட்டதாக தோன்றியதும்
உண்டு. பகல் உலகத்தில் நடக்கும் எந்த
நிகழ்வுகளும் இரவு உலகத்துடன் சம்பந்தம் இருப்பதில்லை. இரவு உலகத்தில் இருக்கும் தகவல்கள், உலக நடப்புகள் வேண்டுமென்றே காலையில் நடப்பவைகளை கண்டு கொள்ளாமல்
முற்றிலும் புதியனவாக இருப்பதை கண்டிருக்கிறேன். இரவு வாழ்க்கை மிகவும் குதூகுலம் நிறைந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவதுபோன்றும்
தோன்றுவதுண்டு.
இதைத்தான் ஜெமோ மிகச் சரியாக இரவு நாவலில் சொல்லியிருகிறார். இரவில் தோன்றும் அதீத எண்ணங்கள்
போல இரவுநாவலும் அதீத வர்ணனைகளும், தத்துவ செறிவு நிறைந்து கிடக்கின்றது. ஒரேவேகத்தில் எழுந்து வந்தவிட்ட
சுனாமி அலைபோல பீரிட்டு வந்திருக்கிறது இரவு.
சென்னையிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக கொச்சி பக்கதில்
இருக்கும் ஒரு சிறுநகர் பகுதிக்கு செல்கிறான் சரவணன். மிக இனிமையாக செல்லவேண்டிய விடுமுறைநாட்கள்
பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதர்களால் தடம் மாறிப்போகிறது. அந்த வீட்டு மனிதர்களும்
அவர்களைத் தேடி வரும் மனிதர்களும் இரவில் மட்டுமே வாழ்பவர்கள். முதலில் அது நமக்கு சரிவராது என நினைக்கும் சரவணம், பிறகு மெல்ல அந்த குழுவுடன் ஐக்கியமாகிறான். அங்கு வரும் நீலியுடன்
பழக, இருவரும் காதல் கொள்கிறார்கள்.
ராக்ஷச காதல், ஒரு யட்சி கொள்ளும் காதல், அவள் பெயரும் நீலி. அவளின் அதீத வெளிபடுத்துதல்கள் அவனை காயப்படுத்துகின்றன.
ஒரு பெண் இப்படி இருக்க முடியாது என்பதை ஜீரணிக்க பல்வேறு மனஅவசங்களுக்கு ஆளாகிறான்.
தொடர்ந்து மனிதர்களையும் இயற்கையும் சந்தித்து,
உறவாடி தன்னை சமனப்படுத்துகிறான்.
இரண்டுமுறை அந்த குழுவிலிருந்து வெளியேறுகிறான். மீண்டும் வருகிறான். ஒரு கட்டத்தில் சட்டென ஒரே இரவில்
முழுவதும் மாறிவிடுகிறது. பிரசன்டனாவுடன் கமலாவிற்கு இருக்கும் கள்ளக் காதலை கவனித்த
முகர்ஜி கோபமுற்று அவர்களை கொன்றுவிடுகிறார். மரணம், கொலை, போலீஸ், மீடியா, என்று போய் மனிதர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சிதறியடிக்கப்படுகிறார்கள்.
தாமஸ் சரவணனை பார்க்கவரும் போது தெரிகிறது அவர் மீண்டும்
இரவு வாழ்வில்நீலியுடன் வாழ்வது.
கடைசியில் ஏற்படும் திருப்பங்கள் பொதுவாக வேண்டுமென்றே நடத்தப்பட்டதுபோல்
தெரிந்தாலும், கடைசி கட்டத்தை நோக்கியே கதை முழுவதும் ஒவ்வொரு அணுவும் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. மிக அசாதாரணமானவைகள் இரவு வாழ்க்கையில்
சாதாரணமாகிவிடும்.
முகர்ஜியின் மிகத்தீவிரமான நம்பிக்கை ஒன்றையே அதற்கு சாட்சியாக
சொல்லலாம். முகர்ஜியுடனாக சரவணனின் உரையாடல் தான் இரவு நாவலின் மையம். இரவு என்ற ஒன்றை
பல்வேறு குறியீடுகளுக்கு சொல்லமுடியும் என்றாலும் 'போராட்டம்/தீவிரம்' இப்படி ஏதோ ஒன்றோடுதான் ஒத்துபோகும் என நினைக்கிறேன். அகத் தேடல்களை, உடல்சிலிர்க்கும் ஆழமான உணர்ச்சிகளை, பயங்கர பயணத்தை கொண்ட தீவிரமான வாழ்க்கையைத்தான் இந்த இரவு பேசுகிறது. அதுதான் உண்மையான வாழ்க்கை என்று
பேசுகிறது.
சரவணன் சொல்லும் ஒருவரிதான் நான் இதன் மையமாக நினைக்கிறேன். ”இந்த பயணத்தில் என் நரம்புகள் ஒரு கணம் கூட தொய்வடையாது. சாதாரணமான
தருணம் என்பதே கிடையாது. ஒவ்வொரு காலடியும் ஒரு சவால். இதுதான் வீரனின் வாழ்க்கை”
சரவணன் நீலி காதல்,
முகர்ஜியின் தீவிரமான்
வாழ்க்கை நோக்கு, கமலாவின் மரணத்திற்குப்பின்னால் விஜயின்
உணர்ச்சிகள், நீலியின் மோகம், இன்ஸ்பெக்டரின் குரூரத்தினிடையே வாழும் அபத்தம் என்று எல்லாமே மிக
தீவிரமான உணர்ச்சிகளாகவே சொல்லப்பட்டிருக்கிறது ஒரு தனிமையை மட்டுமே துணையாகக் கொண்ட
பயங்கர இரவுபோல.
No comments:
Post a Comment