Thursday, June 18, 2015

சதுரங்ககுதிரை

சதுரங்கத்தில் இருக்கும் குதிரை பாய்ந்து மூன்று கட்டங்களை இடம் அல்லது வலமாக தாவிச் செல்லும். அதனால் அது எப்படி முன்னேறுகிறது என்பதை நம்மால் சில சமயம் கணிக்க முடியாமல் போய்விடும். இரண்டு குதிரைகள் இருந்துவிட்டால் போதும், மற்ற எந்த காய்களை இழந்திருந்தாலும், நாம் வென்றுவிட முடியும். சதுரங்கத்தில் அந்த காய்களை இழக்கும்போது மிக முக்கியமான ஒரு போர் தந்திர முறையை நாம் இழந்துவிடுகிறோம். ஆனால் இதெல்லாம் சதுரங்கத்தில் மட்டுமே தான். நிஜவாழ்வில் அந்த காய்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. திருமணமாகாத பேச்சலர்கள் இந்த சதுரங்க குதிரைகளை போன்றவர்கள்தான். ஆம் அவர்கள் வெளியிடங்களில் தங்கள் வேலைகளில், தங்கள் பழக்க வழக்கங்களில், நண்பர்களிடத்தில் மிக முக்கிய ஆளுமையாக இருந்தாலும் உறவுகளிலும், பெண்கள் உடனாக நட்பிலும் ஒரு பொது விழாவிலும் அவர்கள் செல்லாகாசாகதான் இந்திய, தமிழக சூழலில் மதிப்பிடப்படுகிறார்கள்.
என் உறவுக்காரப் பெண் சிறுவயது முதல் என்னுடன் நட்பாக இருந்தவர், அவளுக்கு திருமணம் ஆனதும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அதுவரை எங்களிடையே இருந்த வாழ்க்கை குறித்த, புத்தகங்கள் குறித்த, புதிய தொழில்நுட்பங்களை குறித்த பேச்சுக்கள் அப்படியே நின்றுவிட்டன. பல நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. எங்களிடையே மிக நீண்ட தூரத்தை மெதுவாக உருவாகிவந்ததை மிக ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். பேசுவதற்கு பலசந்தர்பங்கள் வந்தும் அவள் தவிர்த்திருக்கிறாள் என்பது மேலும் புதிராக இருந்தது.

என் திருமணம் நடந்தது அவளுடனாக பேச்சுங்கள் தொடர்ந்தன, மீண்டும் ஒத்த கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளமுடிந்தது. எங்களிடையேயான தூரம் குறைந்து முன்பு பேசாத/பகிராத‌ வேறு சில விஷயங்களும்/கருத்துகளும் பேசப்பட்டன. இது ஒருவகையில் வேடிக்கையாகத்தான் தோன்றியது.
திருமணமாகதவனுக்கு நம் சூழலில் எந்த மதிப்பு இல்லை. அவன் சொல்லும் எந்த கருத்திற்கும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப‌டுவதில்லை. அவனை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது. அங்கிருக்கும் பெண்களுடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுவிடும் என்கிற பயம் இருக்கும். (ஆனால் திருமணமாக பெண்கள் சேர்ந்திருக்க வீடு வாடகைக்கு கிடைத்துவிடும்).
திருமணமாகதவன் ஒரு குடும்ப விழாவிற்கு வரும்போது அங்கு பேசப்படும் ரகசியங்கள் அவனுக்கு தவிர்க்கபடும். அவனை எந்த முக்கிய செய்திகளும் அவன் அறிய தருவதில்லை என்பதை கவனிக்கலாம். பேச்சுகளின்போதுகூட சாப்பிட்டாச்சா சம்பிரதாயத்தோடு சரி, அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.
இந்த நுண்ணிய விஷயத்தைதான் சதுரங்ககுதிரை என்கிற நாவலாக தந்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.
நாராயணன் அப்பா இல்லாத அம்மா மட்டும் இருக்கும் ஏழ்மை சூழ‌ந்த மனிதன். அவன் தாய்மாமன் தான் அவனை படிக்க வைத்து எல்லாம் செய்கிறார். வேலைக்கு மும்பை சென்ற சமயத்தில் அம்மா இறந்துவிடுகிறாள். அவருக்கு இருக்கும் சிறிய நிலம் மாமாவிடம் இருக்கிறது. தன் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார் என நினைக்கிறான், ஆனால் அவர் வேறு ஒருவருக்கு செய்துவிடுகிறார். யாரும் பொறுப்பு எடுக்காததால் நாராயணன் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறான். ஊரில் உள்ளவர்கள் அவனுக்கு வயதுஆக ஆக திருமணம் செய்ய நினைக்கிறார்கள். எல்லாவற்றையும் தட்டிக் கழித்தே வருகிறான். தன் உடன் வேலைசெய்யும் நண்பர்களும் அவனை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்கள். மறுத்துவருகிறார். 50 வயது சம்யத்தில் தன்கூட வேலை செய்யும் ஒரு முதிர்கன்னியை திருமணம் செய்ய சகநண்பர்கள் அவனிடம் வேண்டுகிறார்கள். அவன் நினைக்கும் போது அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்காமல் போய்விடுகிறது.
வேலை விஷயமாக வெவ்வேறு இடங்களில் செல்லும்போதெல்லாம் அவன் பார்ப்பது திருமணத்தின் பாதிப்புகளைதான். தன‌க்கு திருமணமாகி இருந்தால் இப்படி இருந்திருக்குமா? என்கிற சிந்தனைகள். மனைவி கணவன் அனுசரித்தல், தகப்பன் மகன் சண்டை, பிணக்கு, ஆணுக்கு வரும் நோய்கள், மனைவியின் உதவிகள் என்று ஒவ்வொரு நாளும் சந்திப்பவைகளை அவனின் எண்ண ஓட்டத்தை பாதித்து ஒரு சாதாரண நடைபிணமாக வாழ்வது போன்ற வாழ்க்கையாக நினைக்கிறான். ஆனால் தான் சந்தோஷமாக இருப்பதாகவே ஒவ்வொரு சமயமும் நினைத்துக் கொண்டும், மற்றவர்களிடம் பேசிக் கொண்டும் இருக்கிறான். தன்னுடன் திருமணமாகத நண்பர்கள் ஒரு கட்டத்தில் சட்டென திருமணம் செய்து கொள்வதை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
திருமணமாகதவனின் வாழ்க்கை பாதிப்புகளை எல்லோரும் ஒருசமயத்தில் அனுபவித்திருப்போம். திருமணமாகாமல் வாழ்க்கையை தொடர்வது எத்தனை கொடியது அதற்கு சதுரங்க குதிரை சாட்சி.

No comments: