Tuesday, March 31, 2015

வாசிப்பு

 வாசிப்பு தினம் பத்துபக்கமாவது இருக்க வேண்டும் என்பார்கள். நூறு பக்கங்கள்கூட தினம் படிப்பவர்கள் உண்டு. ஆனால் எல்லாமே வாசிப்பு ஆகிவிடாது என்று தோன்றுகிறது. ஆழமான வாசிப்பைதான் வாசிப்பு என்று கொள்ளவேண்டும். நான் தினம் தினத்தந்தி படிக்கிறேன், வாரப்பத்திரிக்கைகளைப் படிக்கிறேன், இணையத்தில் பலபக்கங்களை படிக்கிறேன் என்பதெல்லாம் வாசிப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.
தினப்படி செய்கையாக, ஊன்றி நம் வரம்பிற்கு அல்லது நம் வரம்பை தொடும் அளவிளாவது படிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாவல் அல்லது ஒரு அபுனைவாக இருக்கும் ஒரு முழுமையான நூல் ஒன்றை தினம ஒரு பத்து பக்கமாவது வாசித்து அதன் தொடர்ச்சியை அடுத்த நாளும் வாசிப்பதாக இருக்கவேண்டும். சிலர் ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் முடித்துவிட்டு பின் பல நாட்கள் வாசிக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதுவும் ஒருவகை வாசிப்பு என்றாலும் அதில் தொடர்ச்சி இல்லாத வகையில் சிறந்த வாசிப்பாக சொல்லமுடியவில்லை. தினமும் கம்பராமாயணத்தை வாசிக்க்கும் ஒரு நண்பரை எனக்கு தெரியும். அதில் சில கவிதைகளை வாசித்துவிட்டு அதன் தொடர்ச்சியை அடுத்த நாள் வாசிப்பார். அந்த தினத்தின் மற்ற நேரங்களில் கம்பராமாயணம் குறித்து எழுதப்பட்டிருக்கும்/விவாதித்திருக்கும் நூல்களை வாசிப்பார்.
ஆனால் வாசிப்பு பொதுவாக எளிதாக அமைவதில்லை. சிறுவயது முதல் வாசிப்பு கொஞ்சமேனும் இருந்தால் அல்லது அதில் ஒரு போதை இருந்தால் மட்டுமே நடுவயதில் வாசிப்பின் அடுத்தடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லமுடிகிறது. தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் உடையவர்கள் மிகக்குறைவு. அவர்கள் தொடர்ந்து எதாவது வாசிப்பது என்பது பல இடையூறுகளுக்கு இடையே தான் நிகழ்த்த வேண்டியிருக்கும். இதனால் உனக்கு என்ன பயன்? காசை ஏன் புத்தகம் வாங்கி வீணாக்குகிறாய்? இதை படிப்பதற்கு பாடபுத்தகத்தை படிக்கலாமே? என்று பல்வேறு தாக்குதல்களை ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கும். எல்லா மனங்களிலும் வாசிப்பு என்பது வெட்டிவேலை அல்லது ஒரு கெட்ட காரியம் என்கிற எண்ணம் வளர்ந்தே வருகிறது. இன்றைய தேதியில், புத்தகக் கண்காட்சி, புத்தக விற்பனை எளிதாகி இருக்கும் நிலையிலும் இந்த எண்ணம் தான் உண்டு.

Friday, March 27, 2015

பெண்கள் சினிமா

ஒரு பெண்மணி எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தார். அவர் மாலை ஆனதும் எல்லா குழந்தைகளையும் கூப்பிட்டு கதை சொல்ல ஆரபித்துவிடுவார். டிவி வந்த இந்த காலத்திலும் அவர் கதை சொல்வதை விட்டதில்லை. அதில் பல சினிமா கதைகளும் இருக்கும். சிலநேரங்களில் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு வந்து அதை ஒரு நாவல்போல விரித்து அவரால் வரிக்கு வரி சொல்லிவிட முடியும். பெரிய உணர்ச்சிகள் எதுவும் இல்லை என்றாலும் ஒரு 3 மணிநேரம் கதையை 3 மணிநேரம் சொல்லுவார். கிட்டதட்ட ஒவ்வொரு சாட்டையும் சொல்வது மாதிரிதான் இருக்கும். அவரின் ஞாபக‌திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. பெண்களில் சிலர் உள்ளதை உள்ளபடி திருப்பிச் சொல்லும் வல்லமை உண்டானவர்கள். நான் சிறுவனாக இருந்த சமயத்தில் அக்கா ஒருவர் இப்படி கதைச் சொல்லுவார். சில காதல் காட்சிகளைத் தவிர மற்றவற்றை நாவல் படித்துக் காட்டுவதைப் போல சொல்லிக்கொண்டே செல்வார்.
பெண்கள் சினிமாவை எப்படி பார்க்கிறார்கள்? காட்சிகளாக மட்டுமே அவற்றை பார்க்கிறார்கள் அவற்றின் இடையே இருக்கும் உணர்ச்சிகளை அவர்கள் பார்ப்பதில்லை என்று தோன்றும்.

Thursday, March 26, 2015

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

தொலைக்காட்சியில் பார்த்தேனா சினிமாவில் பார்த்தேனா நினைவில்லை. ஒரு காட்சி மட்டும் நினைவிருக்கிறது. திருமணம் செய்த ஒருவரை விட்டு கொஞ்சம் கட்டுமஸ்தானாக இருக்கும் ஒரு கூடைப்பந்து வீரரை பிடித்துப்போய் மறுமணம் செய்து கொள்வாள் நாயகி. கொஞ்ச நாள் கழித்து அவர்களை காணவரும் முதல் கணவன் அவர்களின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைவார். இரண்டாவது கணவர் கால்களை இழந்திருப்பார். வறுமை தாண்டவாகிறது வீடு. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பார்கள். கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு செல்வார். கதை என்னவாக இருந்துவிட்டுபோகட்டும். எனக்கு அந்த வயதில் அதிர்ச்சியாக இருந்தது எப்படி ஒரு பெண் இரண்டாவது செய்துகொள்ளலாம் என்றுதான்.
அதுவரை ஆண்கள்தான் ஒரிரண்டு பேர் அதுவும் மிக அரிதாக மனைவி இறந்தபின்னால் குழந்தையை வளர்க்க வேறு வழியில்லாமல் அப்படி மறுமணம் செய்திருந்தார்கள். ஒரு பெண் கணவன் இறந்தாலும் திருமணம் செய்வதில்லை. அப்படி கணவன் உயிருடன் இருக்கும்போது எப்படி மறுமணம் செய்வார் என்று நினைத்தேன். அதே வேளையில் இது சினிமாவில் ஒரு புரட்சிக்காக அப்படி எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நிஜவாழ்க்கையில் எங்கும் பார்த்ததில்லையே. இன்று அப்படி இருவரும் மறுமணம் செய்துக் கொள்வதை வரவேற்கிறேன். உண்மையை சொல்வதென்றால் மறுமணங்களை நிஜவாழ்க்கையில் அரிதாகத்தான் காண்கிறோம். யாரோ ஒரு எங்கோ நடந்ததாக இருக்கிறது. நேரில் காண்பது மிகக்குறைவுதான். இன்று பல விவாகரத்துகள் நடந்து மறுமணம் செய்து கொள்வது அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட.

Monday, March 23, 2015

மந்திரக்கல்

காலையில் எழுந்த என் மகனுக்கு மந்திரக்கல்லின் ஞாபகம் வந்தது. தூங்குவதற்கு முன் என்ன விளையாட்டு விளையாடினானோ அது அடுத்த நாள் காலை எழுந்ததும் ஞாபகம்வந்து அதன் தொடர்ச்சியை விளையாட கிளம்பிவிடுவான்.
என் மந்திர‌கல்லு எங்கப்பா என்றான். மந்திரகல் என்பது ஜாக்கிசென் டிவி கார்டூன் தொடரில் வருவது. அதில் ஜாக்கியும், ஜூலியும் மந்திர கற்களை தேடுவதும் அதை எதிரிகளிடம் சென்றுவிடாமல் பாதுகாப்பதற்காக போராடுவார்கள். அதில் பல சங்கடங்கள், தோல்விகள், எதிர்பாராத சம்பவங்களும், அமானுஷ்யங்களும் நடைபெறும் இறுதியில் அதை கைப்பற்றி வெற்றி பெறுவார்கள். அல்லது அத‌ற்கு முன்னால் தொடரும் கிழே வந்து மறுநாள் அவைகளை தொடர்ந்து வேட்டையாடுவார்கள். அது ஒரே நேரத்தில் எல்லாம் கிடைத்துவிடாது. வேவ்வேறு இடங்களில் இருக்கும். ஒவ்வொன்றாக கிடைக்கப் பெறுவதுதான் சுவாரஸ்யம்.
எங்க வெச்சியோ அங்கபாரு என்றேன். இங்க தான் வெச்சேன் என்றான். சிட்அவுட் ஏரியா இருக்கும் பகுதியில் அவனின் விளையாட்டு சாமான்கள் இருக்கும். நேற்று கொஞ்சம் சுத்தம் செய்தபோது நான் தான் கிழே ஓரமாக இடந்த அவைகளை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டேன். அந்த படத்தில் அவைகள் எண்கோணவடிவத்தில் அழகாக இருக்கும். ஆனால் அவன் வைத்திருப்பவைகள் பாட்டில் மூடிகள்.

Friday, March 20, 2015

ஆதிக்கசாதியின் சிறுநீர்

நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விடுமுறைக்கு அதில் இருந்த இருவர் சேர்ந்த ஒரு கிராமத்திற்கு செல்லலாம் என்று முடிவானது. பசுமையான கிராம பயணம் செல்லவேண்டும் என்பது எங்களின் அனைவரின் விருப்பம். நான் படித்தது திருச்சியில். அங்கிருந்து ஒரு 300 கிமீ தொலைவில் இருந்தது அந்த கிராமம். பஸ்ஸைப் பிடித்து காலையில் இறங்கியதும் அங்கிருந்த கிராமமக்கள் எங்களை பிடித்துக்கொண்டார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் யாரை காணவேண்டும் என்று அன்புடன் விசாரித்தார்கள். சொன்னது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவரின் மகன், அவரின் பேரன் என்று சொல்லி அவர்களின் குடும்பத்தை சொன்னார்கள். அவர்கள் மட்டுமல்ல எல்லோரையும் தெரிந்தே இருந்தது. ஒவ்வொருவரின் பூர்வீகம் அவர்களின் கையில்தான். சிலர் வந்து நண்பர்களின் வீட்டிற்கு கூடவந்து விட்டு பேசிவிட்டு சென்றார்கள். அத்தனை அன்போடு அவர்கள் நடந்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சிறு நகரத்திலிருந்து வந்த எங்களுக்கு பக்கா கிராமமான ஊரில் ஏற்படும் எந்த அனுபவமும் புதிதுதான்.
மாலை எங்களை கிராம உலா அழைத்து சென்ற அந்த இருநண்பர்கள், ஏரி, ஊருணி, வயல்கள், தென்னந்தோப்பு என்று அனைத்தையும் காட்டினார்கள். வயல்களின் பசுமையை காணக்காண தீரவேயில்லை. தென்னந்தோப்பில் எங்களுக்காக சொல்லி புதிதாக இறக்கிய‌ இளநீர்களை தந்தார்கள்.

Thursday, March 19, 2015

பெண்க‌ள் ரசனை

நான் வேலை செய்யும் இடங்களில் பெண்கள் சினிமா பற்றி பேசும்போது உதிர்க்கும் வார்த்தைகள் இப்படி இருக்கும். 'நாம சினிமாவுக்கு போறதே அங்க போயி சந்தோஷமா இருக்கதான். அழுக, சோகம், தத்துவம்லாம் வெச்ச யார் பாப்பா'. வீட்டில் டிவி பார்க்கும்போது கொஞ்சம் பழைய சோகப்பாடல்களை வைத்தால் வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் அலறுவதை காணலாம். இந்த பேத்தாஸ் எல்லாம் வேண்டாம் என்பார்கள். சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், சிரிப்பு படக்காட்சிகள், வேடிக்கையான விளையாட்டு போன்றவைகள் இருக்கலாம். பழைய பாடல்கள் இருக்க கூடாது, அதுவும் சோகமாக, தத்துவமாக இருக்க கூடாது. அதே நேரத்தில் நீங்கள் தீவிரமாக விவாதிக்கும்/சண்டையிடும் விவாத நிகழ்ச்சிகள் அல்லது கேள்விகள் கேட்டு பெறும் அரசியல்வாதிகளின் இலக்கியவாதிகளின் பேட்டிகள் இருக்க கூடாது.
பொதுவாக சினிமா இயக்குனர்கள், விமர்சகர்கள் கூறுவது பெண்களுக்கும் குழந்தைகளுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால் அது வெற்றிப்படமாக இருக்கும் என்பார்கள். ஒரு படத்தின் மினிமம் கேரண்டியை தீர்மானிப்பது இந்த விஷயம்தான். யோசித்துப் பார்த்தால் சினிமாவில் பெண்களுக்கு ஆடவைக்கும் பாடல்களும், சிரிப்பு வெடிகளும்தான் இருக்கவேண்டும். பாடல்கள் கொஞ்சம் கவர்ச்சியாக அசிங்கமாக இருக்கலாம் ஆனால் சோகம், தத்துவம் இருக்ககூடாது.

Wednesday, March 18, 2015

மீனவர் கடல்

 கடல் அட்டை என்கிற உயிரினம் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அது கடலின் அடியில் மண்பகுதியில் வாழக்கூடியது. கடலில் வந்து விழும் மனித கழிவுகள், ரசாயனப் பொருட்கள் போன்ற நமக்கு தேவையற்றவைகலை உண்டு வாழ்பவை. அவைகள் இனப்பெருக்க காலங்களில் கடலின் மேல்தளத்தில் வந்து பெண் அட்டைகள் முட்டையிட வரும் அப்போது மட்டுமே அவைகளைக் காணமுடியும். அவைகளை பிடிப்பதையோ உண்பதையோ  தண்டனைக்குரியதாக ஆக்கி தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் சில மருந்துகளை தயாரிக்க அவைகள் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் எங்கோ ஒரு கோடியில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு தமிழகத்திலிருந்து அந்த அட்டைகள் ரகசியமாக கடத்தப்படுகின்றன. மேலே வரும் பெண் அட்டைகளை பிடிப்பதால் அவற்றின் இனங்களின் வளர்ச்சி பாதிக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் அழுத்தம் அதிகம் இருக்கிறது. படகுகளின் உரிமையாளர்கள் பெரிய அரசியல்வாதிகள்தான். ஆக மீனவர்கள் தப்பிக்கவே முடியாது. மீன்பிடிக்கையில் இலங்கை கடற்படையினரின் கெடுபிடி. இங்கே ஒன்றை சொல்லவேண்டும் 2009 வரை தமிழக இலங்கை மீனவர் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டத்தில்லை. அப்போதும் இந்த பிரச்சனைகள் இருந்தாலும் இருதரப்பிலும் சுமூகமாக்கிக் கொள்ளவே நினைத்தார்கள்.
இந்திய-பங்களாதேஷ், இந்திய-பாகிஸ்தான், இந்திய-இலங்கை கடற்ப்பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் பிரச்சனைகள் தாம். பிரபாகரனின் விழ்ச்சிவரை அமைதியாக இருந்த இலங்கை கடற்ப்படை, பின் மிக தீவிரமாக எல்லை தாண்டும் இந்திய படகுகளை பிடிக்க ஆரம்பித்தார்கள். அதுவரை சுதந்திரமாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிறகு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது.

Tuesday, March 17, 2015

சா.தேவதாஸ்

ஒரு மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி சந்திப்பில் சா.தேவதாஸ் அவர்களை சந்தித்தது நினைவிருக்கிறது. கிராமத்து வேலைகளில் பழக்கப்பட்டவர் போல கருத்த நெடிய உருவம். அதிகம் பேசாத மென்மையான பேச்சு. கேள்விகளுக்கு அதிகம் ஆம் இல்லை என்று மட்டுமே அதிகம் கூறினார். கூச்ச சுபாவம் என்று சொல்லமுடியாது அதேவேளையில் திடமான ஆழ்ந்த நம்பிக்கையில் இருப்பவர் போலிருந்தார். தொழிற்முறை மொழிபெயர்ப்பாளராக தன்னை அறிவதைவிட தான் விரும்பும் வாசிப்பின் தேவைக்கு செயல்படும் மொழிபெயர்ப்பாளராகவே அறிய‌விரும்புபவராக தெரிந்தார். அவர் மொழிபெயர்த்துள்ள நூல்கள் அனைத்தும் மிக கடின தேர்வுகள் தான்.
25 நூல்கள்வரை மொழிபெயர்த்துள்ளார். அந்த நூல்களுக்காக‌ அவர் எழுதியுள்ள முன்னுரைகள் அவர் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமை என்பதை நிரூபிக்கின்றன.
புலப்படாத நகரங்கள் (கால்வினோ), குளிர்கால இரவில் ஒரு பயணி (கால்வினோ), ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை (கால்வினோ), லியோனார்டோ டாவின்சி குறிப்புகள், அமர்தியா சென்-ஒரு சுருக்கமான அறிமுகம், செவ்விந்தியரின் நீண்ட பயணம், சூரிய நடனம், லடாக்கிலிருந்து கவிழும் நிழல், லூயி புனுவல், பீட்டர்ஸ்பர்க் நாயகன், அமெரிக்கன், காஃப்கா: கடிதங்கள், கதைகள், கட்டுரைகள், செவ்விந்தியரின் நீண்ட பயணம், இறுதி சுவாசம், ஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன், பாப்லோ நெரூடா நினைவுக் குறிப்புகள்
மொழிபெயர்ப்புகளைத் தவிர நேரடியான நூல்கள் பல எழுதியுள்ளார். அவைகளில் இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும், புதிர்களை விடுவித்தல் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதெமி விருது அவர் லடாக்கிலிருந்து கவிழும் நிழல் என்கிற நூலுக்காக பெறுகிறார். அவருக்கு எம் வாழ்த்துக்கள்.

முதற்கனல் - ஜெயமோகன்

மகாபாரத இதிகாசத்தை நாவலாக முழுமையாக எழுத நினைத்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆரம்ப நூலாக எழுதிதொடங்கியிருக்கும் புத்தக‌ம் முதற்கனல். அந்த பெயரே ஒரு கவித்துவமாக இருக்கிறது. நாவலின் உள்ளே பல புதிய சொற்களும் கவித்துவமான வார்த்தை, வாக்கிய, சொல்லாடல் என்று சிதறிக்கிடக்கும் எழுத்துப் பெருவெளியாக‌ விரிந்து கிடக்கிறது முதற்கனல். பெரும் கனவை நினைவுகூறும் பதபதைப்பும் சின்ன வயது நினைவுகளுடன் அவற்றை இணைக்க முயற்சிக்கும் ஒரு நிறைவும், கலையுடன்கூடிய‌ அழகுணர்ச்சியும் கொண்டு சமவெளி மலர்கூட்டங்களின் நறுமணம் போல மேலேழுந்து வருகிறது.. அவரது உச்சமான விஷ்ணுபுரத்தை தாண்டி இப்போது மற்றொரு உச்சத்தை தொட்டிருக்கிறார் என்று சொல்லலாம். அடுத்த பாகங்கள் வெளிவந்து அதை உறுதிப்படுத்தும் என நினைக்கிறேன்.

வெண்முரசு மொத்தமாக 10000 பக்கங்களை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மிகதீவிரமாக நவீன இலக்கியத்தில் இத்தனை பக்கங்கள் எழுதப்படும் நாவல் இதுவாகத்தான் இருக்கும். ராஜாஜியின் மகாபாரம் இரண்டாம்படி, உபபாண்டவம், இனி நான் உறங்கட்டும், யயாதி, நித்திய கன்னி, என்று மகாபாரதமும் அதை சார்ந்த நூல்களையும் படித்திருந்தாலும், சில தொலைகாட்சி தொடர்களை கவனித்திருந்தாலும் எந்த காவியத் தருணத்தையும் விடாமல் மகாபாரதத்தை முழுமையாக நவீன மொழியில் படிப்பது, படிக்கப்போவது இதுவே முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். வயதான கதைச்சொல்லியின் வாயிலிருந்து வரும் விதவிதமான இதுவரை கேட்டேயிராத அலங்கார வார்த்தைகள்போல இது இருக்ககூடும். அதன் தொடக்கத்தை முதற்கனலில் காணமுடிகிறது.

Monday, March 16, 2015

குர்தியரின் துப்பாக்கி

 ஈழப் போராட்டத்தை நினைவுறுத்துவது போலிருக்கிறது குர்தியரின் போராட்டம். ஈராக் நாட்டில் இருக்கும் குர்து இன பிரச்சனை தங்களுக்கான உரிமையும் தங்களுக்கு தேவையான தனி நாட்டையும் நிலைத்தையும் பெறுவதற்கு 1970லிருந்து போராடிவருகிறார்கள். அவர்களது இந்த போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. தொடர்ந்து ஈராகின் தாக்குதலால் மக்கள் பல்வேறு இடங்களில் சிதறி சொந்தங்களை, வீடுகளை, நிலங்களை இழந்து வாழ்கிறார்கள். ஈரான், சிரியா, துருக்கியை அண்டை நாடுகளாக கொண்ட அவர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.  தங்கள் வளமையான பகுதிகளை இழந்து வெப்ப பகுதியில் நாய்களைப் போல வாழவேண்டியிருக்கிறது. தங்கள் மொழி, இன அடையாளங்களை இழந்து ஈராக்கியருடன் சேர்ந்துக் கொண்டால் நலமாக வாழலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட பாதிப் பேர் வாழ்க்கிறார்கள். அப்படி ஏற்காதவர்கள் என்னேரமும் கண்காணிப்பிலும் எப்போது சாவை எதிர்கொண்டவர்களுமாக இடம்விட்டு இடம் பெயர வேண்டியிருக்கிறது.
ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்கிற சின்ன நாவல் அல்லது தன்வரலாறு எவ்வாறு மக்கள் அவதியுற்றார்கள் எனபதை விளக்குகிறது. காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிப்பெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. சந்தேகத்தின் பேரில் ஆசிரியரின் மாமாவை கைது செய்து கால்களைக் கட்டி ஜீப்பில் இழுத்துச் சென்று கொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது.

Friday, March 13, 2015

குண்டுவீச்சு மதவாதம்

இந்தியாவில் மதவாதம் எல்லா பக்கங்களிலிருந்து வளர்கிறா என்று சந்தேகம் வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு மசூதியில் குண்டு எறியப்பட்டது, அன்றே மு.க. அதை எரிந்த பாஜக ஆட்களை கைது செய்ய வேண்டும் என்றார். அவர்களுடன் கூட்டணியில் வேறு இருந்தார்கள் ஆட்சியிலும் இருந்தார்கள். மறுநாள் காலை அதை எறிந்தது மற்றொரு முஸ்லீம் என்று தெரிந்தது. அதற்கு அவர் மன்னிப்புகூட கேட்கவில்லை. பாஜக பெரிய அளவில் எந்த ஆர்பாட்டமும் செய்யவில்லை.
இவ்வளவு அப்பாவியாக இருக்கிறதே இந்த கட்சி என தோன்றியது. ஆனால் இன்று நிலமைவேறு. பஜாகவின் செயல்கள் முற்றிலும் தங்களின் சகிப்புதன்மையை இழந்து தீவிரவாத கட்சிகள் செயல்படுவதுபோல நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி வந்தது அவர்கள் நிலை மாறிவிட்டதா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே அந்த இடத்திற்கு வந்து விட்டார்களா தெரியவில்லை.
பஜாக இன்று தவிர்க்க முடியாத கட்சியாகிவிட்டது. முன்பு மேல்சாதிக் கட்சி என்று இருந்த இடத்திலிருந்து இன்று ஊழலை ஒழிக்கபோகும் முற்போக்கு கட்சியாக தன்னை முன்நிறுத்திக் கொண்டுவிட்டது. காங்கிரஸைவிட பெரியதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றாலும் அதன் போக்கில் முன்பிருந்த மென்மையான அணுமுறை மாறி ஒரு திமுக, அதிமுக, நவிநிமான், சிவசேனா மாதிரியான ஒரு ஆக்ரோஷமான கட்சியாக மாறிவிட்டது.

Wednesday, March 11, 2015

தாலி சங்கம்

என் உறவுகார பெண்மணி ஒருவர் இருந்தார் அவரின் கணவர் இறந்த கொஞ்ச காலத்தில் பெண்கள் பூக்கட்டும் நேரத்திலேல்லாம் அருகில் அமர்ந்திருப்பார். சிலவேளைகளில் ஒரு முழம்பூ தன் தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார். அவருக்கு பூவும் அதன் மணமும் எப்போது பிடித்தமானவைகள் அவற்றை அவரால் மறக்கமுடியவில்லை அவரின் இற‌ப்புவரை. இதுதான் பெண்களின் நிலையாக சொல்லலாம்.
பூ, பொட்டு, தாலி போன்ற வெளிஅலங்காரங்கள் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்று பெண்ணின் அவளின் மிக இளவயது முதல் சொல்லி வளர்க்கப்படுவது நம் நடைமுறை. அவைகள் இல்லாமல் ஒரு பெண் தன்னை முழுமை அடைந்ததாக நினைப்பதில்லை. பெரிய வசதியற்றவர்களாக இருந்தாலும் பெண் வயதிற்கு வந்ததும் செய்யும் சடங்குகள் மிக விமரிசையாக செய்ய வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ஒன்று அவர்களின் கெளரவம் மற்றொன்று தன் பெண் வளர்ந்தபின் ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டுவிடுவாள் என்பதும். ஆம் பெண்ணுக்கு இவையெல்லாம் சென்சிடிவ் விஷயங்களாக சமூகத்தால் அறிவுறுத்தப்படுகின்றன.
பெண்ணுக்கு இவ்வளவு வரதட்சனை அளிக்கப்பட்டிருக்கிறது என்ப‌தை பெருமையாக நினைக்கும் பெண்ணுக்கும் பெற்றோருக்கும் தாலி தேவையில்லை என்று சொல்லப்படுவதை எப்படி எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார்கள். மதநம்பிக்கைகூட இல்லை சமூகநம்பிக்கைதான் இது. இந்துமதத்திலிருந்து மாறிய கிருஸ்தவ பெண்களிடமும் தாலி சென்டிமெண்ட் இருக்கிறது. அவர்களும் தொடர்ந்து அணிவதையே விரும்புகிறார்கள். உலகம் முழுவது பெண்ணுக்கு திருமணமானவள் என்கிற அடையாளம் இடப்படுகிறது. சிலருக்கு மோதிரம், சிலருக்கு தாலி.

Tuesday, March 10, 2015

நிறுத்தம்

மாட்டுவண்டி, குதிரைவண்டி காலங்கள் எல்லாம் போய் பஸ்கள் வந்து அதுவும் போய் ஆட்டோ, டாக்ஸி என்று வந்துவிட்டது. ஆனால் மற்ற நான்கைவிட பேருந்துகளுக்கு பொதுவெளியில் நிறுத்துவதற்கு என்று சில இடங்கள் தேவைப்படுகின்றன. அங்கு நின்று மக்களை ஏறவும் இறங்கவும் வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே அவற்றிற்கான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஊர்களில் ரயிலடி ஸ்டாப், பூங்கா ஸ்டாப், தேரடி என்ற பெயர்கள் பொதுவானவையாக இருக்கும். அதைத் தவிர சினிமா தியேட்டர்களின் பெயர்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். எங்கள் ஊர் நிறுத்தங்களுக்கு டைமண்ட், செல்வம் என்று பெயர்கள் உண்டு.
கொஞ்சம் தேடிக் கண்டுகொண்டால் சுவாரஸ்யமான பெயர்களைக் கொண்ட நிறுத்தங்களும் அதற்காக காரணங்களில் இருக்கும் விநோதங்களையும் காணமுடியும். எங்களூருக்கு பக்கத்தில் புளியமர ஸ்டாப் என்று ஒரு நிறுத்தம் உண்டு ஆனால் பக்கத்தில் புளியமரம் எதுவும் இல்லை.
அப்பாவின் வேலைகாரணமாகவும் என் வேலைகாரணமாகவும் பலஊர்களுக்கு செல்ல சேர்ந்துள்ளது அதைதவிர சில ஊர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுக்காக செல்ல்வேண்டியிருந்தது. இருந்திருந்தாலும் பல நிறுத்தங்களின் பெயர்கள் நினைவில் இல்லை ஆனால் நினைவில் இருக்கும் பெயர்கள் மறக்க முடிந்ததில்லை.

நளபாகம்

காமமும் நாளபாகத்தில் சேர்த்திதான். காரம், புளிப்பு, உப்பு இந்த மூன்று அதன் விகிதத்தில் இருக்கவேண்டும். கொஞ்சம் அதிகம் குறைந்தாலோ வாயில் வைக்க முடியாது. அதுபோல காமும் எல்லாமும் சரிவிகிதத்தில் கல‌ந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. தி ஜானகிராமன் கதைகளில் காமமும், தளுக்கு, நவிசும் எல்லாம் இருக்கும். அம்மாவந்தாள், மரப்பசு, மோகமுள் அனைத்திலும் இதே தான் கதை. அதேபோல அவர் எழுதிய நளபாகமும் அப்படிப்பட்டதுதான்.
கனையாழி இதழில் தொடர்கதையாக இந்நாவலை எழுதியிருக்கிறார். அப்போதே, அதாவது என்பதுகளில், கடுமையாக‌ பேசப்பட்டுள்ளது. அதன் கதாநாயகன் காமேச்வரனின் தாக்கம் மக்களிடம் அதிகம் தெரிந்திருக்கிறது. காமேச்வரனின் பேச்சும், நடத்தையும், கம்பீரமும் மட்டுமல்ல கதையில் உள்ள முக்கிய திருப்பமும் அதிகம் பேசப்பட்டுள்ளது.

Monday, March 9, 2015

சைக்கிள்


என் அப்பா சைக்கிளில்தான் ஆபிஸ் சென்றுவருவார் ஞாயிற்றுக் கிழமைகளில் அதை குரங்குபெடல் போட்டு பழகுவேன். இப்படி பழகிபழகி வண்டியின் சீட்டை வளைத்துவிட்டேன். வளைந்த சீட்டுடன் ஓட்டும்போது ஏற்படும் குண்டி எரிச்சலுடன் வந்து என்னிடம் கத்தியிருக்கிறார். சரிசெய்துவிட்டு வர என்னை அனுப்புவார். ஆனால் மறந்துபோய் மீண்டும் குரங்குபெடல் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தேன். எடுக்ககூடாது என்று எச்சரித்திருந்ததும் அவருக்கு தெரியாமல் எடுத்து சென்று சத்தம்போடாமல் வீட்டு சுவரோரம் சாய்த்துவைத்துவிடுவேன். நான் எடுக்கிறேனா என்று பார்க்க ஆணியில் சாவியைதான் பார்ப்பார். ஆனால் அந்த சாவி திறந்ததும் எடுத்துவிடலாம். ஆகவே ஆணியில் மாட்டிவைத்து விடுவதால் அவரால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
கொஞ்ச நாளில் குரங்குபெடல் நண்பர்கள் சேர்ந்து சைக்கிள் ரேஸ் விட்டோம். எந்த வாகனம் கற்றுக்கொண்டாலும் ரேஸ்தான் விடவேண்டும் போல. வேகமாக ஓட்டிச் சென்று நம் திறமையை காட்டவேண்டும் இல்லையென்றால் கற்றதனால் ஆய பயன் என் என்று கேட்டுவிடுவார்கள்.

Thursday, March 5, 2015

இந்தியாவின் மகள்

தில்லியில் இருந்த போது நான் உணர்ந்தது அந்த நகரம் பெரிய சின்ன சின்ன கிராமங்களின் தொகுப்பு என்று. ஆம் அப்படி தான், மிக எளிமையாக மக்கள் வாழ்கிறார்கள். செங்கல்வைத்து மட்டும் கட்டப்பட்ட வீடுகளில் சிமெண்ட் பூச்சு செய்வதே யில்லை. மிக வசதிபடைத்த வீடுகள் மிக குறைவாக இருக்கும். எல்லா மாநிலங்களிலிருந்தும் மக்கள் அங்கு வந்து வாழ்கிறார்கள். ஆகவே அது யாருடைய நிலம் என்கிற அடிதடி ஏற்படுவதில்லை. பீகார், உபி யிருந்து வருபவர்கள் தொடங்கி வங்காளம், வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் தென் இந்தியர்களை காணமுடியும்.
பீகார் உபி மக்கள் மிக படிப்பறிவு அற்ற வன்குணங்கள் கொண்டவர்கள் என்று அங்கிருக்கும் மக்களே கூற கேட்கலாம். பொதுவாக அந்த மாநிலங்களில் குற்றம் செய்துவிட்டு தப்பிப்பதற்காக தில்லி வருபவர்கள். மீண்டும் குற்றங்கள் செய்துவிட்டு பக்கதில் உள்ள காசியாபாத், வசந்தவிகார் போன்ற பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். ஏனெனில் இரண்டும் வேவ்வேறு மாநில பகுதிகள். முதலாவது உபியும், இரண்டாவது ஹரியானாவாகும். போலீஸ் உடனே வந்து பிடிக்க முடியாது அங்கு வரும்போது வேறு பகுதிக்கு சென்றுவிடுவார்கள்.

Wednesday, March 4, 2015

பசு மாமிசம்

ஒருமுறை சென்ரல் பக்கத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளுக்கு சென்றிருந்தபோது, சின்ன சிம்னி விளக்கு வைத்த ஒரு தள்ளுவண்டியில் இருந்த பெரிய அண்டாவில் இருந்து பிரியாணியை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சின்ன ப்ளேட் ஐந்து ரூபாய்தான் இருந்தது. நிறைய மாமிசமும், பிரியாணி சாதமும் இருந்தது. அங்கு பெரிய கூட்டம் சுற்றி நின்று அதை வாங்கி உண்டுகொண்டிருந்தார்கள். ஒருவர் அவசரமாக உணவருந்திக் கொண்டிருந்தார். குறைவான விலையில் எப்படி தரமுடிகிறது என ஆச்சரியமாக இருந்தது. மட்டன் பிரியாணிக்கு பேமஸான கடையா இது இவ்வளவு கூட்டம் இருக்கே என்றேன் அவரிடம். உணவருந்திக் கொண்டிருந்தவர் ஒரு நிமிடம் நிறுத்தி ஆமாங்க ஆனா இது பீப் பிரியாணி என்றார்.
மாமிசத்திற்க்காக மிருகங்களை கொல்வது உலகெங்கும் நடந்துவரும் ஒரு நிகழ்வு. அதில் சந்தேகமே இல்லை. அமெரிக்க ஐரோப்பாவில் மாடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் என்று எல்லா பெரிய விலங்குகளையும் உண்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பன்றி தவிர ஆடு, மாடு, ஓட்டகம் என்று அனைத்தையும் உண்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற தெற்கு ஆசியா நாடுகளில் எல்லா வகை பெரிய, சிறிய விலங்குகளை சகட்டுமேனிக்கு உண்கிறார்கள், இதைதவிர மீன்வகைகள், பூச்சிவகைகள், சிறிய விலங்குகள் (நாய், பூனை) என்று எல்லாவற்றையும் அவர்களால் உண்ணமுடியும்.

Tuesday, March 3, 2015

காதல் என்பது


திடீர் பயணமாக சென்னை சென்றிருந்தேன். பல்வேறு சிந்தனைகளோடு மக்கள் எலக்டிரிக் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பேருந்தில் இருக்கும் அவசரம் நெரிசல் இல்லாமல் இதில் பயணம் செய்ய முடிகிறது. திரிசூலத்திலிருந்து தாம்பரம் சென்றபோது பக்கத்தில் ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. காதல் ஜோடிதான். அவர்களைப் போன்றவர்களின் சேட்டைகளால்தான் அமைதியான ரயில் பயணம் இனிக்கிறது என நினைக்கிறேன். இருவருக்கும் 20 வயதுக்குள் இருக்கும். பெண் முஸ்லிம் கருப்பு பர்தா அணிந்திருந்தார் ஆகவே அவர் என்படி இருந்தார் என தெரியவில்லை. ஆண் முஸ்லிம்போலத்தான் இருந்தார். லேசாக தாடிபோல இருந்ததால் அப்படி தோன்றியது. கைகளை கோர்த்தும், தலையில் தட்டியும், வார்த்தை விளையாட்டுகளும் என்று அந்த 15 நிமிடத்தில் நடந்தது. எதிர் சீட்டில் காலை வத்தவளை வைக்காதே என்று அறிவுறுத்தினார் காதலன். வச்சா, வச்சா என்று சீண்டிக் கொண்டிருந்தாள் காதலி. மெதுவாகத்தான் பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அவர்களை கவனிப்பதை யாரும் விரும்பாமல் இல்லை. அவர்களை ஓரக்கண்ணால் பார்பவர்களை கவனிப்பது ஒரு அலாதியான இன்பமும் இருக்கிறது.

Monday, March 2, 2015

கள்ளம் தஞ்சை ப்ரகாஷ்

தமிழில் மிகக் குறைந்த வாசகர்களால் வாசிக்கப்படும் அற்புத நாவல்கள் பல உள்ளன. முதல் பதிப்போடு முடிந்துபோய் கிடைப்பதே அரிதாக இருக்கும். அப்படி ஒரு நாவலான கள்ளம் நாவலை வாசித்துவிட்டேன் என்பது பெருமைப்படும் விஷயம்போலத்தான் தெரிகிறது.
கள்ளம் நாவலை அதன் ஆசிரியரான தஞ்சை ப்ரகாஷ் சொல்ல அவரின் சிஷ்யர் ஒருவரான சுந்தர்ஜி ப்ரகாஷ் எழுதியது என்பதை அதைப் படிக்கும்போது யாராலும் நம்பமுடியாது. அத்தனை அழகாக மிக நேர்த்தியாக முழு ப்ரக்ஞையுடன் எழுதியது போலிருக்கிறது.
நான் படித்த பல நாவல்களை அவற்றின் அடர்த்தியின்மையால், பக்கங்களை நிரப்ப எழுதப்பட்டதுபோல் நான் உணர்ந்திருக்கும் நாவல்களை பாதியிலேயே விட்டிருக்கிறேன். அல்லது கடைசிப் பக்கத்திற்குச் சென்று பக்க எண்ணைக் கொண்டு இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என யோசித்திருக்கிறேன். ஆனால் கள்ளம் படிக்கும்போது நேர்மாறான அனுபவமே ஏற்பட்டது.