Monday, March 23, 2015

மந்திரக்கல்

காலையில் எழுந்த என் மகனுக்கு மந்திரக்கல்லின் ஞாபகம் வந்தது. தூங்குவதற்கு முன் என்ன விளையாட்டு விளையாடினானோ அது அடுத்த நாள் காலை எழுந்ததும் ஞாபகம்வந்து அதன் தொடர்ச்சியை விளையாட கிளம்பிவிடுவான்.
என் மந்திர‌கல்லு எங்கப்பா என்றான். மந்திரகல் என்பது ஜாக்கிசென் டிவி கார்டூன் தொடரில் வருவது. அதில் ஜாக்கியும், ஜூலியும் மந்திர கற்களை தேடுவதும் அதை எதிரிகளிடம் சென்றுவிடாமல் பாதுகாப்பதற்காக போராடுவார்கள். அதில் பல சங்கடங்கள், தோல்விகள், எதிர்பாராத சம்பவங்களும், அமானுஷ்யங்களும் நடைபெறும் இறுதியில் அதை கைப்பற்றி வெற்றி பெறுவார்கள். அல்லது அத‌ற்கு முன்னால் தொடரும் கிழே வந்து மறுநாள் அவைகளை தொடர்ந்து வேட்டையாடுவார்கள். அது ஒரே நேரத்தில் எல்லாம் கிடைத்துவிடாது. வேவ்வேறு இடங்களில் இருக்கும். ஒவ்வொன்றாக கிடைக்கப் பெறுவதுதான் சுவாரஸ்யம்.
எங்க வெச்சியோ அங்கபாரு என்றேன். இங்க தான் வெச்சேன் என்றான். சிட்அவுட் ஏரியா இருக்கும் பகுதியில் அவனின் விளையாட்டு சாமான்கள் இருக்கும். நேற்று கொஞ்சம் சுத்தம் செய்தபோது நான் தான் கிழே ஓரமாக இடந்த அவைகளை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டேன். அந்த படத்தில் அவைகள் எண்கோணவடிவத்தில் அழகாக இருக்கும். ஆனால் அவன் வைத்திருப்பவைகள் பாட்டில் மூடிகள்.

வெவ்வேறு சமயங்களில் வாங்கிய குளிர்பானங்களின் மூடிகளை சேகரித்து ஒரு ஆறு மூடிககளை வைத்திருந்தான் போலும். அந்த இடத்தை சுத்தம் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என எங்கோ வைத்துவிட்டேன். எடுத்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் எங்கு வைத்தேன் என நினைவில்லை. இங்குதான் எங்கோ வைத்தேன் என்றேன். ஒரு பத்து நிமிடம் தேடி கிடைக்க வில்லை. அவள் அம்மா அதை எப்போதோ குப்பையில் போட்டுவிட்டேன் என்றாள். தினம் வாசலில் வரும் குப்பை வண்டியில் இன்னேரம் எங்கோ போயிருக்கும். நிஜமோ பொய்யோ அப்படி சொல்லி சீண்டிபார்ப்பதில் ஒரு ஆனந்தம் அவளுக்கு.
அவன் முகம் மாறஆரம்பித்தது சோர்ந்து ஒரு இடத்தில் கைகளை தலைக்கு வைத்து அமர்ந்து கொண்டான். எனக்கு கவலையாக போய்விட்டது. நாம் செய்த தவறை சரிசெய்ய நினைத்தேன். அது மந்திரகல்லுதானே எங்கேயாவது ஒழிச்சிக்கிட்டு இருக்கும். இல்லன்னா அத அந்த ராட்சத பூதம் எடுத்திருக்கும். இரு எங்க வைச்சிருக்குன்னு தேடி பார்ப்போம் என்றேன். கொஞ்சம் உற்சாகம் ஆகியவன், வீடு தேடும் படலத்தை தொடர தயாரானான்.
எங்களுக்குள் எப்போது ஒரு டீலிங்க் இருக்கும். எந்த நிகழ்ச்சியோ அல்லது நான் கூறும் கதையோ அதில் இருக்கும் முக்கிய பாத்திரங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். கதைகளில் வருபவைபோல அவன் தவளை என்றால் நாம் பாம்பு. அவன் புலி என்றால் நான் முதலை. டிவி பாத்திரங்களில் அவன் வேட்டைக்காரன் என்றால் நான் கரடி (கரடி சங்கம்), அவன் ஜூலி என்றால் நான் ஜாக்கி (ஜாக்கிசென்).
ஜூலி நீ அங்க தேடு நான் இங்க தேடுறேன். கிடைச்சோன்ன எனக்கு உடனே சொல்லு என்றேன். அங்கஇங்க என்று எல்லா இடத்திலேயும் தேட ஆரம்பித்தோம். டேபிள் கிழே, டிவி பக்கத்தில், பேப்பர் அடுக்கி வச்ச இடத்தில் என்று எல்லா இடத்திலேயும் தேட ஆரம்பித்தோம். பள்ளி ஆண்டு விழாவிற்கு கிளம்ப வேண்டும் இன்னும் தயாரகவில்லை என்பது ஜுலியின் தாயாரின் கோபம் ஆனால் அவருக்கு. தோரு என்ற குண்டனின் கதாப்பாத்திரமாக கொடுத்து டேய் போடா நகருடா என்று சொல்லி தப்பித்துக் கொண்டோம். அங்கிளின் பாத்திரம் மகளுக்கு கொடுத்து ஓம் ரீம் சொல்லச் சொல்லி பார்த்தோம். மறுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் நாங்களே சில மந்திரங்களை சொல்லி அரைமணி நேரமாக அழைந்து களைப்படைந்தோம்.
தோருவிற்கு அதிகம் கோபம் இப்போது வந்துவிட்டது. இன்னும் கிளம்பாமல் இருவரும் வெட்டியாக சுற்றிக் கொண்டிருப்பதாக திட்டிக் கொண்டிருந்தார். இன்று இனி கிடைக்காது என்று தோன்றிவிட்டது. ஆனாலும் அவனின் சந்தோஷம் திரும்ப வந்து விட்டதில் மகிழ்ச்சிதான் நாளைக் கிடைக்கலாம் அல்லது வேறு சில புதிய மூடிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டேன். தண்ணீர் குடித்துவிட்டு கிளம்புவோம் என ப்ரிஜ் பக்கம் வந்ததும் அதன் மேலே வைத்து நினைவு வந்து பார்த்தபோது அங்கேயே இருந்தது.
ஏ ஜூலி இங்க பாரு கிடைச்சுடுச்சு என்றேன். ஓடிவந்து வாவ் என்கிட்ட ஒன்னு இருக்கு இப்ப ஆஞ்சு கிடைச்சுடுச்சு. இனிமே நம்ம கையிலதான் இந்த நகரம் இருக்கபோவுது ஜாக்கி. நீ சாதிச்சிட்ட ஜாக்கி, நீ சாதிச்சிட்ட. இனிமே நமக்கு கவலை இல்ல, நாம் தைரியமா எதிரிங்க கூட சண்டை போடலாம். நீ சாதிச்சிட்ட ஜாக்கி வா போவலாம் என்றான்.
ஜாக்கிசான் மாதிரி குட்டிகரணம் அடிக்காமல், பல்டி அடிக்காமல், எதிரிகளுடன் அடித்து பிரண்டு கீழே விழிந்து முழிபிதுங்கி வலியால் கத்தாமல், எளிதாக வென்றுவிட்டதை நினைத்து மிகவும் மகிழ்ந்து
அப்படியெல்லாம் சொல்லாத ஜூலி என்றேன்.

No comments: