Tuesday, March 10, 2015

நிறுத்தம்

மாட்டுவண்டி, குதிரைவண்டி காலங்கள் எல்லாம் போய் பஸ்கள் வந்து அதுவும் போய் ஆட்டோ, டாக்ஸி என்று வந்துவிட்டது. ஆனால் மற்ற நான்கைவிட பேருந்துகளுக்கு பொதுவெளியில் நிறுத்துவதற்கு என்று சில இடங்கள் தேவைப்படுகின்றன. அங்கு நின்று மக்களை ஏறவும் இறங்கவும் வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே அவற்றிற்கான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஊர்களில் ரயிலடி ஸ்டாப், பூங்கா ஸ்டாப், தேரடி என்ற பெயர்கள் பொதுவானவையாக இருக்கும். அதைத் தவிர சினிமா தியேட்டர்களின் பெயர்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். எங்கள் ஊர் நிறுத்தங்களுக்கு டைமண்ட், செல்வம் என்று பெயர்கள் உண்டு.
கொஞ்சம் தேடிக் கண்டுகொண்டால் சுவாரஸ்யமான பெயர்களைக் கொண்ட நிறுத்தங்களும் அதற்காக காரணங்களில் இருக்கும் விநோதங்களையும் காணமுடியும். எங்களூருக்கு பக்கத்தில் புளியமர ஸ்டாப் என்று ஒரு நிறுத்தம் உண்டு ஆனால் பக்கத்தில் புளியமரம் எதுவும் இல்லை.
அப்பாவின் வேலைகாரணமாகவும் என் வேலைகாரணமாகவும் பலஊர்களுக்கு செல்ல சேர்ந்துள்ளது அதைதவிர சில ஊர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுக்காக செல்ல்வேண்டியிருந்தது. இருந்திருந்தாலும் பல நிறுத்தங்களின் பெயர்கள் நினைவில் இல்லை ஆனால் நினைவில் இருக்கும் பெயர்கள் மறக்க முடிந்ததில்லை.

சேலம் ஊருக்கு ஒருவரை பார்க்க சென்றபோது சிங்கமெத்தையில் இறங்கி வரச்சொன்னார். சிங்கமெத்தை என்பது நிறுத்ததின் பெயர். பலமுறை கேட்டு உறுதி செய்துக் கொண்டபின்னே பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் மெதுவாகவே இதைக்கூறியதாக நினைவு. அவரும் சரியாக உள்வாங்கிக்கொண்டு நிறுத்தம் வந்ததும் என்னை புதியவன் என புரிந்து இறக்கிவிட்டார்.
நடுவில் பல கற்பனைகள் சிங்கம் போன்ற உறுதியான மெத்தை, மெத்தை தயாரிக்கும் கம்பெனி, சிங்கம் மார்க் உடைய மெத்தைகள், என்று பலவாறு நினைத்திருந்தேன். இறங்கியது அங்குமிங்கும் சுற்றிபார்த்துக்கொண்டேன் எதுவும் தெரியவில்லை. சாதாரண குடியிருப்புகள். அழைக்க வந்த நண்பரிடம் அதுப்பற்றி கேட்டது மேலே காட்டினார். இரண்டு சிங்கள் இருபக்கம் உடைய பால்கணி தெரிந்தது. குழப்பமாக பார்த்தபோது, மெத்த என்றால் மாடி என்று பொருள். (தெலுகு வார்த்தை) சிங்கம் கொண்ட மாடி உள்ள நிறுத்தம் என்று பெயர் பெற்றுவிட்டது.
வேலூரில் ஒரு இடத்திற்கு குட்டமேடு என்று பெயர். சின்ன மேடு இருக்கும்போல ஆகவே அந்த பெயர் என நினைக்க தோன்றும். அந்த இடத்தில் முன்பு ஏரி இருந்திருக்கிறது சுற்றிலும் உள்ள மேடுகளில் ஒருபகுதிக்கு குட்டமேடு என்று பெயர் வந்திருக்கிறது. ஏரி போய் ரோடு வந்து பேருந்து நிறுத்தம் வந்தும் குட்டமேடு அங்கேதான் இருக்கிறது.
தெருப்பெயர்களில் சில நிறுத்தங்கள் இருக்கும். அந்த தெருப்பெயர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டும் தமிழ்ப்படுத்தப்பட்டும் மாறும்போதும் அந்த பழைய பெயர்களே இருக்கும். இது நிறைய சென்னைநகர நிறுத்தங்களில் இருக்கும். உதாரணமாக மின்ட் ஸ்டாப்பிங் சொல்லலாம். அதேபோல் நிறுத்தம் இருக்கும் இடத்தில் முன்பு இருந்த காரணப்பெயர்தான் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கும். முன்பு கட்டிடம் எடுக்கப்பட்டு புதுப்பெயர் வைத்திருந்தாலும் பேச்சுவழக்கில் பழைய பெயர்தான் நீடிக்கும். உதாரணமாக ஈராஸ் ஸ்டாப்பிங்.
என்ன தான் புதுப்பெயர்கள் சூட்டப்பட்டாலும் பழையப்பெயர்களை அவ்வளவு எளிதில் மக்கள் விட்டுவிடுவதில்லை.
அதேப்போல் பெயர்களை தேர்தெடுப்பதில் மக்களின் விருப்பம்தான். என்னதான் அரசாங்கம் நிறுத்தங்களுக்கு பெயர்களை வைத்தாலும் அவர்கள் தங்களுக்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கல். சென்னை ஓஎம்ஆரில் பல நிறுத்தங்கள் பெயர்கள் அங்கங்கே எழுதப்பட்டிருந்தாலும் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது மக்கள் வேறுபெயர்களை தான் சொல்கிறார்கள்.
நிறுத்தத்தின் பக்கத்தில் எது பெரியதாக தெரிகிறதோ அதைத்தான் வைக்கவேண்டும் என நினைக்கிறார்கள். பொதுவாக அது பக்கத்தில் இருக்கும் கோவிலின் பெயராக இருக்கிறது. உச்சிபிள்ளையார் கோயில், பெரியபாளையத்தம்மன், வேம்புலி அம்மன் என்று சில பெயர்களை சொல்லலாம். இதன் பக்கத்தில் எவ்வளவு பெரிய கட்டிடம் இருந்தாலும், எந்த பிரபலமான நிறுவனம் இருந்தாலும் அந்த பெயர்களை மக்கள் சூட்டுவதில்லை. சின்னூன்டாக இருக்கும் இந்த கோயில் பெயர்கள்தான் செல்லுபடியாகும்.
இந்த நிறுத்தப்பெயர்களை வைத்து சின்ன வரலாறு எழுதிவிடமுடியும் என நினைக்கிறேன். அது மறுவிவந்த பழைய பெயர்களை கொண்டு ஒரளவிற்கு அந்த ஊரின் அந்த பகுதியின் முன்பு இருந்த நிலைகளையும் தற்போது அது எவ்வாறு மாறி வந்திருக்கிறது என்கிற செய்தியையும் அறிந்துக் கொள்ள முடியும். இது குறித்து சிலர் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்கள். அது ஊர்களின் பெயர்களின் காரணங்களை ஆராய்வதாக இருக்கிறது. ஆனால் நிறுத்தங்களை ஆராயும்போது மேலும் அந்த ஊரை, பகுதியை நன்கு அறிந்துக் கொள்ளமுடியும். அது குறித்து புத்தகங்கள் வெளிவந்திருந்தால் நன்றாக இருக்கும்.

No comments: