Friday, October 11, 2019

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் - காடு விமர்சனம்குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.

Sunday, September 29, 2019

காடு - வாசிப்பும் மறுவாசிப்பும் - கலைச்செல்வி


இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..) அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை, பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.) 

Wednesday, September 11, 2019

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - வாசிப்பனுபவம்தி.ஜானகிராமன் எழுத்துக்களில் இருக்கும் உரையாடல்தன்மை வாசகனை கட்டிபோட்டுவிடக்கூடியது. அவைகள் பேசிப்பேசியே காலத்தை கொண்டாட நினைக்கும் மனிதனின் வார்த்தைகள் என்பதால் இருக்கலாம். இடையூராது சளசளத்து ஓடும் நீர் போன்ற வார்த்தைகள். தோல்வியை மறைக்கும் லாவகமும், வெற்றியை ருசித்தேயிராத வரண்ட வண்டல்மண் போன்ற மனித புலம்பல்கள். அவர் எழுதிய கதைகளில் சிறந்த கதைகளாக பாயாசம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான், அக்பர் சாஸ்திரி, பிடிகரணை போன்றவைகளைச் சொல்லலாம். அவர் எழுதியவைகளில் அதிகம் பேசப்படாத சில கதைகளும் உண்டு. நுண்வாசிப்பில் மட்டுமே புரிந்துக் கொள்ளகூடியவையாகவும், ஆழ்மன மெளனங்களை வெளிப்படுபவையாகவும் இருக்கும் கதைகள் சில உண்டு. பசி ஆறிற்று, காண்டாமணி, சாப்பாடு போட்டு 40 ரூபாய் போன்ற கதைகள்.

Thursday, September 5, 2019

கானல் நதி விமர்சனம் - கலைச்செல்வி

எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை கூடுதலாக்கியது.

Tuesday, September 3, 2019

இசைவாகா வாழ்க்கை - கானல் நதி விமர்சனம்


இசை வாழ்க்கை என்பது ஒரு பழமையான வாழ்க்கை முறையோடு இயைந்துவிட்டது என்கிற எண்ணம் நம் மனதில் எங்கோ இருக்கிறது. கிராமபோன், அதன் இசைத்தட்டுகள், வால்வு ரேடியோக்கள், ஹார்மோனியம், பழைய வீணை ஆகியவைகளின் நினைவுகள் நம் அந்த உணர்வுகளை உறுதிப்படுத்துகின்றன. பழமையடையும்போது இசைக்கு திடமான ஒரு அழுத்த உணர்ச்சி கூடிவிடுகிறது போலும். இசை பழமை அடைய அடைய அது எளிமையடைகிறது, கூடவே இசையின் நுணுக்கங்கள் புரிபட ஆரம்பிக்கின்றன. புதிதாக இருக்கும்போது மெட்டின் மேல் குவியும் மனம் பழையதாகும்போது வார்த்தைகளின் மேல் குடிகொள்கிறதே அதுபோல.

Monday, August 5, 2019

கலங்கிய நதி வாசிப்பனுபவம்தில்லியில் இருந்த சமயங்களில் அறிந்த ஒன்று அங்குவாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தில்லிவாழ் மக்கள் எப்போதும் பொருட்படுத்தி அவர்களை மதித்து அவர்களுடன் இணக்கமாக மற்ற மக்களிடம் இருப்பது போல் இருந்ததில்லை என்பதுதான். அதாவது அவர்கள் இரண்டாம்தர மனிதர்களாகத்தான் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதிபோல் வாழ்வது ஒரு காரணம். அவர்கள் வாழ்ந்த இடம் மிக மோசமானதாக சூழல் தொடரும் இடமாக இன்றும் இருக்கிறது.

Thursday, August 1, 2019

கலங்கிய நதி விமர்சனம் - கலைச்செல்வி

 
ரமேஷ்சந்திரன் முடிந்தவரை நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரி. அவனின் மனைவி சுகன்யா. மகள் ப்ரியாவின் திடீர் இறப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அவன் அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அங்கு கோஷ் என்ற முதுநிலை பொறியாளரின் கடத்தலும், நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பெருஊழல் ஒன்றும், ரமேஷை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தான் கண்ட, கடந்த உண்மைகளை விபத்தில் அகப்பட்டு மருத்துவஓய்விலிருக்கும்போது புனைவாக்குகிறான்.