Monday, March 9, 2015

சைக்கிள்


என் அப்பா சைக்கிளில்தான் ஆபிஸ் சென்றுவருவார் ஞாயிற்றுக் கிழமைகளில் அதை குரங்குபெடல் போட்டு பழகுவேன். இப்படி பழகிபழகி வண்டியின் சீட்டை வளைத்துவிட்டேன். வளைந்த சீட்டுடன் ஓட்டும்போது ஏற்படும் குண்டி எரிச்சலுடன் வந்து என்னிடம் கத்தியிருக்கிறார். சரிசெய்துவிட்டு வர என்னை அனுப்புவார். ஆனால் மறந்துபோய் மீண்டும் குரங்குபெடல் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தேன். எடுக்ககூடாது என்று எச்சரித்திருந்ததும் அவருக்கு தெரியாமல் எடுத்து சென்று சத்தம்போடாமல் வீட்டு சுவரோரம் சாய்த்துவைத்துவிடுவேன். நான் எடுக்கிறேனா என்று பார்க்க ஆணியில் சாவியைதான் பார்ப்பார். ஆனால் அந்த சாவி திறந்ததும் எடுத்துவிடலாம். ஆகவே ஆணியில் மாட்டிவைத்து விடுவதால் அவரால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
கொஞ்ச நாளில் குரங்குபெடல் நண்பர்கள் சேர்ந்து சைக்கிள் ரேஸ் விட்டோம். எந்த வாகனம் கற்றுக்கொண்டாலும் ரேஸ்தான் விடவேண்டும் போல. வேகமாக ஓட்டிச் சென்று நம் திறமையை காட்டவேண்டும் இல்லையென்றால் கற்றதனால் ஆய பயன் என் என்று கேட்டுவிடுவார்கள்.

நாலு தெரு ரோட்டையும் சுற்றி வருவது என்று போட்டி. மூன்று நண்பர்கள் அதில் ஒருவன் கொஞ்சம் முன்பே பழகிவிட்டதால் சற்று வேகமாக செல்வான் என தெரிந்தது. அவனை விட்டு விடலாம் இரண்டாமவனைத்தான் வெல்ல வேண்டும். கடைசியாக வருவது பெரிய இழுக்கு அல்லவா.
போட்டியில் இரண்டாமவன் வேகத்திற்குகூட ஓட்ட முடியவில்லை. எவ்வளவு மிதித்தாலும் தடதடவென்று ஆடியதே தவிர ஓடவில்லை. ஆனால் நான் விடுவதாய் இல்லை. துரத்திக்கொண்டு சென்றேன். முதலாவது செல்பவன் எப்போதோ போய்விட்டான். மூன்றாவது தெரு திருப்பம் வரப்போகிறது அதற்குள் அவனை பிடித்துவிடவேண்டும்.  அவ்வப்போது திரும்பி குறும்பாக பார்த்து சென்றதுவேறு கோபமாக இருந்தது. அந்த‌ வெறியில் பின்னாலேயே பறந்தேன். அந்த வேகத்தில் மூன்றாம் தெரு திருப்பத்தில் திரும்பமுடியவில்லை. அதிகப்படியாக திருப்பினால் வண்டி விழுந்துவிடும் போலிருந்தது. ஏற்கனவே பலமுறை விழுந்து முட்டியை பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
எதிர் ரோட்டில் மெதுவாக பழைய சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த போஸ்ட் மேன் என்னை பார்ப்பதாக தெரியவில்லை. அவர் வீட்டுக்கவலையில் இருந்திருப்பார் போன்றிருந்தார். கடைசியாக வளைக்க முயற்சித்தும் பலனளிக்காமல் அவரை இடித்துத் தள்ளினேன்.
அவருக்கு அடிபடவில்லை. ஆனால் கையில், தோள்பையில், கேரியரில், வைத்திருந்த போஸ்ட்களேல்லாம் பறந்து அந்த நாற்சந்தியில் சிதறியது. அன்று பொங்கல் தினம் என்பதாலும், இமெயில், எஸ்எம்எஸ் வசதி இல்லாத காரணத்தாலும் ஒருவீடுகூட பாக்கியில்லாமல் எல்லாவிடுகளுக்குமான கடிதங்கள் வாழ்த்துக்கள் அவரிடம் நிறைய இருந்தன.
அவர் ஒரு ஆர்டரில் அடுக்கி இருந்தார் அது சிதறிப்போனதால் மீண்டும் அவைகளை அடுக்கித்தான் எடுத்துச் செல்லவேண்டும். என் மேல் அவருக்கு எல்லையில்லா கோபம் இருந்தது. அவரின் முகத்தில் தெரிந்த சிடுசிடுவும், உதட்டு சுளிப்பும் காட்டிக் கொடுத்தன. ஆனால் எதுவும் என்னிடம் சொல்லவில்லை. அவருக்கு வாழ்த்துகளை எடுத்துக்கொடுத்துவிட்டு முன்சக்கரம் நெளிந்துபோன வண்டியை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டேன். பின்னால் வந்து கிண்டல் அடித்த குரங்குபெடல் நண்பர்களை கண்டுக் கொள்ளவே யில்லை. அவரிடம் சாரி எதாவது சொல்லி வந்திருக்கலாம் என்று அப்புறம் தோன்றியது.
வளைந்துபோன சக்கரத்தை நாளை காலை அலுவலகம் செல்லும்போது பார்த்தால் யாரோ செய்துவிட்டார்கள் என்று சொல்லி தப்பித்து விடலாம் என்று தோன்றியது. கரும்புகளை எடுத்துக்கொண்டு கொல்லைக்கு சென்று அமர்ந்துக் கொண்டேன்.
அரைமணியில் வந்து அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் போஸ்ட்மேன். பொங்கல் சமயங்களில் அவர் வருவதைப் எதிர்ப்பார்த்தும் வந்ததும் ஓடிச் சென்று வாழ்த்துக்களை வாங்குவதும் அந்த தினத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும். நீ வராதப்பவே நினைச்சேன் என்று முறுக்கிய கையுடன் கொல்லைக்கு வந்தார். அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். மாலை போனபோது என்னை போலீஸ் பிடித்து கொடுக்க போவதாக மிரட்டினார் எப்போதும்போல. அன்று மாலை ரிப்பேருக்கு கொண்டு சென்ற வண்டியை மீண்டும் எடுத்துவரவில்லை.
கொஞ்ச நாளில் வீட்டிற்கு எடுத்துவந்த அவர் அப்புறம் சைக்கிளை எடுக்கவே விடவில்லை. புதுச் சாவி போட்டு பத்திரமாக பையிலேயே வைத்துக் கொண்டார். சைக்கிள் பக்கம் போனாலே சந்தேகமாக பார்த்தார். வாடகைச் சைக்கிள் எடுத்து சீட்டில் உட்கார்ந்து பழகியிருந்தேன். அவரசமாக செல்லவேண்டும் என்றாலும் சைக்கிளை என்னிடம் கொடுக்காமல் நடந்துபோகச் சொன்னார்.
என் முதல் சைக்கிளை ஆறாவது முடித்தபோது வாங்கிக்கொடுத்தது என் தாத்தாதான் (அம்மாவின் அப்பா). ரொம்ப நாள்வரை நான் செய்தது அவருக்கு எரிச்சலாக இருந்தது என்னுடம் பேசுவதை தவிர்த்து, சைக்கிள் எடுத்து ரிப்பேர் செய்துவிடுவேனா என்று பயந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். என் புது வண்டியில் ப்ரேக் இல்லாமல் வண்டி ஓட்டுவதாகவும், ரோட்டில் வேகமாக செல்வதாகவும், அம்மாவிடம் குறைப்பட்டுக் கொள்வார்.
ஒரு திருமணவிழாவில் அவசரமாக ஒருவரை அழைத்துவர வேண்டி இருந்தது உடனே இருசக்கர வாகனத்தில் சென்று எடுத்துவரவேண்டும் முகூர்த்தம் நேரம் நெருங்கியிருந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் வண்டியை அவன்கிட்ட கொடுக்க என்று என்னை அழைத்துவரச் செய்தார். நான் வண்டியில் செல்லும்போது நல்லா வண்டி ஓட்டுவான் என்று சொல்வது கேட்டது. ஒருவேளை அது வேறு ஒருவரின் வண்டி என்பதால் அப்படி சொன்னாரா தெரியவில்லை.

No comments: