Tuesday, March 31, 2015

வாசிப்பு

 வாசிப்பு தினம் பத்துபக்கமாவது இருக்க வேண்டும் என்பார்கள். நூறு பக்கங்கள்கூட தினம் படிப்பவர்கள் உண்டு. ஆனால் எல்லாமே வாசிப்பு ஆகிவிடாது என்று தோன்றுகிறது. ஆழமான வாசிப்பைதான் வாசிப்பு என்று கொள்ளவேண்டும். நான் தினம் தினத்தந்தி படிக்கிறேன், வாரப்பத்திரிக்கைகளைப் படிக்கிறேன், இணையத்தில் பலபக்கங்களை படிக்கிறேன் என்பதெல்லாம் வாசிப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது.
தினப்படி செய்கையாக, ஊன்றி நம் வரம்பிற்கு அல்லது நம் வரம்பை தொடும் அளவிளாவது படிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாவல் அல்லது ஒரு அபுனைவாக இருக்கும் ஒரு முழுமையான நூல் ஒன்றை தினம ஒரு பத்து பக்கமாவது வாசித்து அதன் தொடர்ச்சியை அடுத்த நாளும் வாசிப்பதாக இருக்கவேண்டும். சிலர் ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் முடித்துவிட்டு பின் பல நாட்கள் வாசிக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதுவும் ஒருவகை வாசிப்பு என்றாலும் அதில் தொடர்ச்சி இல்லாத வகையில் சிறந்த வாசிப்பாக சொல்லமுடியவில்லை. தினமும் கம்பராமாயணத்தை வாசிக்க்கும் ஒரு நண்பரை எனக்கு தெரியும். அதில் சில கவிதைகளை வாசித்துவிட்டு அதன் தொடர்ச்சியை அடுத்த நாள் வாசிப்பார். அந்த தினத்தின் மற்ற நேரங்களில் கம்பராமாயணம் குறித்து எழுதப்பட்டிருக்கும்/விவாதித்திருக்கும் நூல்களை வாசிப்பார்.
ஆனால் வாசிப்பு பொதுவாக எளிதாக அமைவதில்லை. சிறுவயது முதல் வாசிப்பு கொஞ்சமேனும் இருந்தால் அல்லது அதில் ஒரு போதை இருந்தால் மட்டுமே நடுவயதில் வாசிப்பின் அடுத்தடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லமுடிகிறது. தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் உடையவர்கள் மிகக்குறைவு. அவர்கள் தொடர்ந்து எதாவது வாசிப்பது என்பது பல இடையூறுகளுக்கு இடையே தான் நிகழ்த்த வேண்டியிருக்கும். இதனால் உனக்கு என்ன பயன்? காசை ஏன் புத்தகம் வாங்கி வீணாக்குகிறாய்? இதை படிப்பதற்கு பாடபுத்தகத்தை படிக்கலாமே? என்று பல்வேறு தாக்குதல்களை ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கும். எல்லா மனங்களிலும் வாசிப்பு என்பது வெட்டிவேலை அல்லது ஒரு கெட்ட காரியம் என்கிற எண்ணம் வளர்ந்தே வருகிறது. இன்றைய தேதியில், புத்தகக் கண்காட்சி, புத்தக விற்பனை எளிதாகி இருக்கும் நிலையிலும் இந்த எண்ணம் தான் உண்டு.
சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டு தோழிக்கு அவள் அப்பா காமிக்ஸ் வாங்கிக் கொடுத்ததை நான் என் அப்பாவிடம் கேட்க நாலுஅடி அடித்து பாடப்புத்தகதை படிக்க சொன்னார். தினம் அவள் வீட்டில் சென்று படிக்க வேண்டியிருந்தது. பழைய புத்தகங்களை அப்படி படித்துக் கொண்டிருந்தேன். அவளைவிட நானே அதிகம் படித்திருந்தேன். பின் பூந்தளிர், கோகுலம் போன்ற புத்தகங்களை கடையிலிருந்து என் அப்பாவிற்கு தெரியாமல் வாங்கி படிக்க வேண்டியிருந்தது.
கல்லூரி படிக்கும்போது சக நண்பர்களுடன் அதிக திட்டுகளை வாங்க வேண்டியிருந்தது. தேவையற்ற வேலைகளை செய்வதாக கூறி ஏசியபடியே இருந்தார்கள். சனி, ஞாயிறுகளில் தினமனியில் வரும் இலக்கியமலருக்காக ஹாஸ்டலிலிருந்து காலையில் 2 கிமீ இருக்கும் தூரம் இருக்கும் கடைக்கு செல்வேண்டியிருக்கும். ஒரு நண்பன் நான் கூடவருவதாக் கூறி ஒரு நாள் வந்தான், வாங்கிவந்த நான்குபக்கத்தை பார்த்து வெறுத்து போய்விட்டான். பெண்களுக்கு புத்தகம் வாங்குவதும் படிப்பதும் அவ்வளவாக பிடிக்காதவைகள். அதற்கு பதில் சீட்டு போட்டிருந்தால் இன்னேரம் கழுத்துல நாலு பவுன் தொங்கும் என்பார்கள். இதையெல்லாம் தாண்டிதான் ஒருவர் படிக்க வேண்டியிருக்கிறது.
வாசிப்பு மாதிரியான ஒரு இனிமையான விஷயம் இல்லை என்று சொல்லலாம். அதை உணராமல் தான் ஒவ்வொருவரும் பேசிவருகிறார்கள். முன்பு வாசிப்பை வெறுத்தவர்கள் கூட தன் பிள்ளைகளுக்கு வாசிப்பை பழக்கமாக்க வேண்டும் என நினைப்பவர்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில் டிவியின் முன்னால் அமர்ந்துவிடும் குழந்தையை புத்தகம் கொடுத்து அதில் ஒரு இன்பத்தை அளிக்க முயற்சிப்பது வீண்வேலையாகத்தான் முடியும்.
கொஞ்ச நாள் முன்பு ஒரு பேச்சு அரங்கத்தில் தன் மகன் புத்தகம் வாசித்து அதில் ஒரு செக்ஸ் குறித்த சந்தேகம் கேட்டதால் புத்தகம் வாங்குவதை நிறுத்திவிட்டதாக கூறினார். குழந்தைகள் டிவி பார்த்துக்கூட அந்த மாதிரியான கேள்விகளை கேட்கும் அப்போது டிவியை அவர்கள் முழுமையாக வீட்டிலிருந்து எடுத்துவிடுவதில்லை. அவர்களுக்கு பிடித்த டிவியை எடுப்பதைவிட புத்தகத்தை நிறுத்துவது எளிதாக இருக்கிறது. டிவியைவிட அதிக கற்பனைவளத்தை புத்தகங்கள்தான் அளிக்க முடியும். இளம்வயதில் டிவியில்லாமல் புத்தகம் வாசித்து வளரும் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாக, கற்பனைதிறம் மிக்கவர்களாக இருப்பதை காணமுடியும்.
வாசிப்பு இளமையில் தூண்டப்படாதவரை அதற்கு அடுத்தடுத்த வயதுகளில் ஒரு எல்லையை தாண்டிச் செல்லமுடியாது. வாசிப்பின் பல்வேறு படிநிலைகளில் முதலில் இருக்கும் படிகளை மட்டுமே கடக்க முடியும்.
அதிக புத்தகக் கண்காட்சிகள் வந்தாலும் மேலோட்டமான் அபுனைவுகளே அதிகம் விற்பனையாகின்றன. மிக இளவயதில் கதைகளும், சின்ன வாசிப்புகளின் தொடக்கம் இல்லாமல் பெரியளவில் வாசிப்பை கொண்டுச் செல்லமுடியாது.

No comments: