Wednesday, October 23, 2019

விடியுமா - கு.ப.ரா. சிறுகதை வாசிப்பனுபவம்


பிரிவை மனித மனம் எப்படி எடுத்துக் கொள்கிறது என பல்வேறு வரையறைகளின் வழியாக பொருள் கொள்ள முடியும். அது தத்துவங்களின் வழி. ஆனால் உண்மை அகத்தின் மொழியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மனம் ஒரு நேரடி துயர நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பல்வேறு வகைகளில் கூட்டி தொகுத்து சொற்களாக வைத்துக் கொள்கிறது. சொற்களை முன்னும் பின்னுமாக மாற்றி வேறு பொருள் அதற்கு உண்டா என சோதிக்கிறது. மற்றவர்களுடன் அது குறித்து பேசி தனக்கு தேவையானவைகளை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறது.

தன் இச்சைகளின் மீதான மனதின் கட்டுபாடு பொறுத்து சொற்களில் அது விரும்புபவைகளை சேர்த்து வைத்துக் கொள்கிறது. மேலும் மேலும் சொற்களையும் அது விரும்பும் சம்பவங்களையும் அடுக்கி உண்மைகளை அல்லது தன் விருப்பு வெறுப்புகளை மூடி வைத்துக் கொள்கிறது. நிஜமும் கற்பனையும் கலந்து அடுக்கி வைத்திருக்கும் சொற்களையும் சம்பவங்களையும் நாம் விலக்கி உணர்ந்து கொள்ளும் போது எல்லாம் மர்மமாக தோன்றுகிறது. உறவுகளில் மரணம் நிகழும் சமயங்களில் மனம் உறைந்துவிடுகிறது. அது போடும் வேடத்தை அதுவே கண்டுணரும் சமயம் மிகப் பிற்பாடே புரிந்துக் கொள்ளமுடியும். ஆழ்மனம், வெளிமனதை வேடம்போடமட்டுமே பயன்படுத்துகிறது.

கு..ராஜகோபலன் உறவுகளின் கதைகளை நிரம்ப எழுதியவர். கனகாம்பரம் கதையில் மனைவியின் முன் கணவனும் நண்பனும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிற புரிதலை சின்ன மனஅதிர்வாக சொல்லியிருப்பார்.

விடியுமா கதை வேறு வகை. அம்மாவீட்டிற்கு வந்த பெண் இரண்டு நாள் முன் எல்லாம்நலம் என்று கடிதம் எழுதிய கணவனைப் பற்றி 'சிவராமையர் டேஞ்ஜரஸ்' என்று ஒரு சென்னை பொது மருத்துவமனையிலிருந்து தந்தி வருகிறது. அடித்துபிடித்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு தன் தம்பியுடன் செல்கிறாள். ஒரு நாள் இரவு நடக்கிறது கதை. அவள் மனசங்கடங்கள், அவசங்கள், குழப்பங்கள், என்று எல்லாவற்றையும் யோசிக்கிறாள். அவள் தம்பியும் அவ்வாறே. தூங்க முடியவில்லை இருவராலும்.

தந்திவரும்வரை மகிழ்ச்சியாக இருந்த நேரங்கள் மாறிவிட்டன. அந்த காலநேரத்தை நோக்கி மனம் அலைபாய்ந்துக் கொண்டேயிருக்கிறது. இந்த அவசம் விரைவில் நீங்க வேண்டும். எப்போதும்போல வாழ்க்கை இனிமையாக செல்லவேண்டும். எல்லா குறைகளையும் ஏற்றுக் கொண்டு எப்போது போல வாழவேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம். இதுதானே மனித இயல்பும். கண்டிப்பாக எல்லா நல்லபடியா தீரும் என நம்பிக்கை கொள்கிறார்கள்.

ரயில் வண்டி வாழ்க்கைபோல தறிகெட்டு ஓடிக்கொண்டேயிருக்கிறது. காலையில் சென்னை வந்துவிடுகிறது. வீட்டிற்கு சென்று உடை மாற்றிக் கொண்டு பொது மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு கணவர் சிவராமையர் இறந்துவிட்டிருக்கிறார். கவலைகள், குழப்பங்கள், அவசங்கள் என்னென்ன உண்டோ எல்லா தீர்ந்து மனம் ஆறுதல் கொள்கிறது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை படித்ததில்லை. இப்பகிர்வு அவரது கதைகளை வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. நன்றி.