Wednesday, March 11, 2015

தாலி சங்கம்

என் உறவுகார பெண்மணி ஒருவர் இருந்தார் அவரின் கணவர் இறந்த கொஞ்ச காலத்தில் பெண்கள் பூக்கட்டும் நேரத்திலேல்லாம் அருகில் அமர்ந்திருப்பார். சிலவேளைகளில் ஒரு முழம்பூ தன் தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார். அவருக்கு பூவும் அதன் மணமும் எப்போது பிடித்தமானவைகள் அவற்றை அவரால் மறக்கமுடியவில்லை அவரின் இற‌ப்புவரை. இதுதான் பெண்களின் நிலையாக சொல்லலாம்.
பூ, பொட்டு, தாலி போன்ற வெளிஅலங்காரங்கள் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்று பெண்ணின் அவளின் மிக இளவயது முதல் சொல்லி வளர்க்கப்படுவது நம் நடைமுறை. அவைகள் இல்லாமல் ஒரு பெண் தன்னை முழுமை அடைந்ததாக நினைப்பதில்லை. பெரிய வசதியற்றவர்களாக இருந்தாலும் பெண் வயதிற்கு வந்ததும் செய்யும் சடங்குகள் மிக விமரிசையாக செய்ய வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ஒன்று அவர்களின் கெளரவம் மற்றொன்று தன் பெண் வளர்ந்தபின் ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டுவிடுவாள் என்பதும். ஆம் பெண்ணுக்கு இவையெல்லாம் சென்சிடிவ் விஷயங்களாக சமூகத்தால் அறிவுறுத்தப்படுகின்றன.
பெண்ணுக்கு இவ்வளவு வரதட்சனை அளிக்கப்பட்டிருக்கிறது என்ப‌தை பெருமையாக நினைக்கும் பெண்ணுக்கும் பெற்றோருக்கும் தாலி தேவையில்லை என்று சொல்லப்படுவதை எப்படி எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார்கள். மதநம்பிக்கைகூட இல்லை சமூகநம்பிக்கைதான் இது. இந்துமதத்திலிருந்து மாறிய கிருஸ்தவ பெண்களிடமும் தாலி சென்டிமெண்ட் இருக்கிறது. அவர்களும் தொடர்ந்து அணிவதையே விரும்புகிறார்கள். உலகம் முழுவது பெண்ணுக்கு திருமணமானவள் என்கிற அடையாளம் இடப்படுகிறது. சிலருக்கு மோதிரம், சிலருக்கு தாலி.

வடஇந்தியாவில் தாலி பெரியதாக நினைக்கப்படுவதில்லை. சில சமூகங்களில் தாலியே இல்லை. அப்படியே இருந்தாலும் சில பொதுவிழாக்களில், நிகழ்ச்சிகளில் மட்டுமே அணிகிறார்கள். அதுகூட கட்டாயம் இல்லை. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் தாலி, குங்குமம், மெட்டி முக்கியமான அடையாளங்கள்.
தாலி அறுதெறியப்படவேண்டியவை என்று கூறி பொதுஇடத்தில் கருப்புசட்டை அணிந்து தாலி அறுப்பு செய்யும் போது அது பொதுமனதில் தீவிரமான எதிர்வினையையே உண்டுபண்ணுவதை கவனித்திருக்கிறேன். பெண்கள் இதை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிகழ்வாக பார்ப்பதேயில்லை, மாறாக தங்களை தங்கள் உடமைகளை அபகரிக்க‌ வந்தவர்களாகவே நினைக்கிறார்கள். முன்பு ஒரு முறை இதுமாதிரி நடந்தபோது அதன் புகைப்படத்தை காட்டி சில பெண்மணிகளிடம் கேட்டபோது சீறித்தள்ளினார்கள். அதை தேர்தெடுப்பது தங்கள் உரிமையாகவே நினைத்தார்கள். அடிமைத்தனமாக யாரும் சொல்லவேயில்லை. திருமணமாகத சில இளம்வயது பெண்கள் மட்டும் தாலி விஷயத்தை எதிர்ப்பவர்களாக தெரிந்தது. ஆனால் அவர்கள்கூட எல்லோரும் செய்ய வேண்டும் என்று பொதுப்படையாக கூறினார்கள்.
சில பத்திரிக்கைகள் காதல் இன்று எப்படி, இன்றைய பள்ளிகளில் காமம், இன்றைய கல்லூரிகளில் கலாச்சரம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், சிறப்பிதழ்களும் திடீரென வெளியிடுவதுபோல காட்சி ஊடகங்களுக்கு இந்த மாதிரியான செய்திகளின் மீது விவாதத்தை உருவாக்குவது நடைபெறுகிறது. தாலிமீதும் சமூக செயல்பாட்டின் மீதும் விவாத‌ங்களை வைப்பதும் அது குறித்து பேசவேண்டும், சிலவற்றை மாற்றம் செய்யவேண்டும் என்று நினைப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் மக்கள் நம்பிக்கைகள் என்று சில மதங்களை தாண்டி தொடர்ந்து வருபவை உண்டு. அவைகளை குறித்து கேள்வி எழுப்புவதற்குமுன்பு அது குறித்த விவாதங்களை முதலில் முன் வைப்பதே சிறந்தது. குறிப்பாக அந்த விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்தாதவையாக இருக்க வேண்டும்.
மற்றொன்றையும் இங்கு சொல்லவேண்டும். பிரங்க் (சேட்டை) செய்வதும் அவர்களின் நடவடிக்கைகளை படம் எடுத்து வெளியிடுவது உலகம் முழுவதும் நடக்கிறது. சில அமைப்புகள் செய்யும், கனடா, யுஎஸ், யுகே, சீங்கபூரில் நடந்தவைகள் பல நாம் யூடியூபில் காணலாம். அதைதவிர தனியார்கள் சிலர் இதை ஒரு வேளையாக செய்கிறார்கள். இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூருவில் நடந்தவைகளை யூடியூபில் காணலாம். சில டிவி நிகழ்ச்சிகள் நடத்திய பிரங்க் சென்னையிலும் நடத்தப்பட்டது. ஆனால் ஒன்றுகூட மற்றவைகளின் அருகில்கூட செல்லமுடியவில்லை. நாம் ஒரு கிண்டல் அடிக்கிறோம், பணத்தை பிடிங்குகிறோம், சிலரை வெறுப்பேற்றுகிறோம் அவ்வளவுதான் முடிகிறது.
ஒருவரை அதிகமாக திட்டு, ஓட்டி, காலாத்தால் அது ஜோக் என நினைக்கிறோம். ஆரோக்கியமாக ஒருவரை சிரிக்கவைத்து நம்மையும் சிரிக்க வைத்த ஒரு நிகழ்ச்சிகூட தமிழில் இல்லை. சகிப்புதன்மையுடன் செய்யமுடிந்த‌ பிரங்குகள் சாத்தியம் ஆகாதபோது, தாலி மாதிரியான சென்சிடிவ்வான விஷயங்களில் சகிப்புதன்மையை எதிர்ப்பார்ப்பது சற்று அதிகம் என தோன்றுகிறது.
இன்று அதுகுறித்து பேசுபவர்கள் எதிர்ப்பவர்கள், தாலியை கட்டியவர்கள் அல்லது கட்டப்படவர்கள். மற்றவர்களுக்கு அவர்கள் எப்படி அறிவுறுத்துவது என்று கேள்வியும் எழும்.
தாலி கட்டுவதற்கு எதிராக செயல்பட வேண்டும் என நினைத்தால் முதலில் தாலி கட்டாதவர் சங்கம் ஒன்று உருவாவதுதானே வழி. அதை எதிர்ப்பவர்கள் முதலில் தாலியை தூர எறிந்து இந்த சமூகத்தில் உலாவவேண்டும். அவர்கள் தங்களுக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தி அதன்படி வாழவேண்டும். அதுதான் தாலிக்கு முதல் எதிர்ப்பாக இருக்கும்.

No comments: