Friday, March 20, 2015

ஆதிக்கசாதியின் சிறுநீர்

நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விடுமுறைக்கு அதில் இருந்த இருவர் சேர்ந்த ஒரு கிராமத்திற்கு செல்லலாம் என்று முடிவானது. பசுமையான கிராம பயணம் செல்லவேண்டும் என்பது எங்களின் அனைவரின் விருப்பம். நான் படித்தது திருச்சியில். அங்கிருந்து ஒரு 300 கிமீ தொலைவில் இருந்தது அந்த கிராமம். பஸ்ஸைப் பிடித்து காலையில் இறங்கியதும் அங்கிருந்த கிராமமக்கள் எங்களை பிடித்துக்கொண்டார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் யாரை காணவேண்டும் என்று அன்புடன் விசாரித்தார்கள். சொன்னது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவரின் மகன், அவரின் பேரன் என்று சொல்லி அவர்களின் குடும்பத்தை சொன்னார்கள். அவர்கள் மட்டுமல்ல எல்லோரையும் தெரிந்தே இருந்தது. ஒவ்வொருவரின் பூர்வீகம் அவர்களின் கையில்தான். சிலர் வந்து நண்பர்களின் வீட்டிற்கு கூடவந்து விட்டு பேசிவிட்டு சென்றார்கள். அத்தனை அன்போடு அவர்கள் நடந்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சிறு நகரத்திலிருந்து வந்த எங்களுக்கு பக்கா கிராமமான ஊரில் ஏற்படும் எந்த அனுபவமும் புதிதுதான்.
மாலை எங்களை கிராம உலா அழைத்து சென்ற அந்த இருநண்பர்கள், ஏரி, ஊருணி, வயல்கள், தென்னந்தோப்பு என்று அனைத்தையும் காட்டினார்கள். வயல்களின் பசுமையை காணக்காண தீரவேயில்லை. தென்னந்தோப்பில் எங்களுக்காக சொல்லி புதிதாக இறக்கிய‌ இளநீர்களை தந்தார்கள்.
ஒரு சேரிவழியாக வீட்டிற்கு வந்த போது அந்த வீடுகளில் குழந்தைகளோடு வாசலில் அமர்ந்திருந்த‌ பெண்கள் சட்டென எழுந்து நின்று கொண்டார்கள். குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு வேறு பக்கம் பார்க்க நின்றார்கள். அன்னிச்சையாக நடந்ததுபோலிருந்தது. ஒரு வீட்டிலிருந்து கடந்தபோது அங்கிருந்த பெண் எழுந்து நிற்கவில்லை. உண்மையாக அவர் கவனித்திருக்கவில்லை. ஆனால் இரு நண்பர்கள் அவ்வளவு தூரம் ஆயி போச்சா என்று தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு நபரை பார்த்து சொல்வது போல் சொன்னார்கள். அதைக் கேட்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து குழந்தையை வாரி எடுத்து நின்றுகொண்டார்.
அங்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர்களின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தபோது அவர்கள்கூறி தான் தெரிந்தது அந்த பெண்கள் தலித்கள் என்று. அவர்களின் கணவர்கள், மற்ற பெண்களும் வேலைக்கு சென்றிருப்பார்கள். குழந்தைகளை வைத்துள்ள பெண்கள் மட்டும் வீடுகளில் இருக்கிறார்கள். அவர்களை இப்படியே விடக்கூடாது ரொம்பவும் துளிர்த்துவிடுவார்கள் என்று அந்த இருநண்பர்களும் கூறியதோடு அவர்களைப் பற்றி வேறு சில கதைகளும் அங்கே கூறினார்கள். பொதுவாக அது அவர்களின் வாழ்க்கைமுறையும், தான்தோன்றிதனமாக அவர்கள் செலவழிப்பதையும் பற்றிய இருந்தது.
அந்த விடுமுறை பயணம் முடித்து வந்தபின்னும் அந்த நினைவு தொடர்ந்து. எத்தனை அராஜகமாக மரியாதையை பிடுங்கி கொள்கிறார்கள். எந்த இடத்திலும் அதற்கு விட்டுகொடுத்தல், சமரசம் இல்லாமல் உயர்சாதி என்ற காரணத்தால் தலித்துகளை அடக்கி வைக்க நினைக்கிறார்கள்.
அவனை எதுவும் கேட்டுட முடியாது, சாதிபெயர சொல்லி திட்டிட்டேன் சொல்லி கம்ளெயிண்ட் பன்னிடுவான் என்றும், அரசு வேலை இடஙகளில் அடிக்கடி சொல்வதை காணலாம். அதில் பாதி உண்மை இருக்கலாம், ஆனால் ஒன்று சொல்ல அப்பாவியாக இருக்கும் தலித்துகளை சாதிபெயரை சொல்லி திட்டவும் தானே செய்கிறார்கள். அரசு, தனியாரில் உயர் பதவிகளில் தலித்துகள் வருவதை வேறு ஆதிக்க சாதிகள் கொஞ்சமும் விரும்புவதில்லை. அதைச் சொல்லியே வெறுப்பை உமிழ்ந்து காலம் கெட்டுவிட்டதாக சொல்லி திரிவதை காணலாம்.
நான் படித்த கல்லூரியில் ஒரு தலித் ஆசிரியர் இருந்தார். அவர் தலித் என்று தெரிந்தது அவருக்கு உண்டாக மரியாதையை, மற்ற ஆசிரியர்களுக்கு அளிப்பதுபோல், அளிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். ஏன் மிக அமைதியான, அப்பாவி போன்று நடந்து கொள்ளும் அவரிடமும் அவருக்கு பின்னாலும் எழுந்த கிண்டல்களே அதிகம். அவர் கிளாஸ் நடத்துவதை கொஞ்சமும் பொருட் படுத்தாமல் மாணவர்கள் நடந்துகொண்டது இன்றும் நினைவிருக்கிறது.
எங்களுடன் படித்த தலித் மாணவன் ஒருவன் அவன் அந்த வகுப்பில்தான் படிக்கிறானா என்று ஆசிரியர்களுக்கே தெரியாத அளவிற்கு இருந்தான். அவனிடமே ஒரு ஆசிரியர் கேட்டார் நீ இந்த கிளாஸ் தானா என்று. அந்த அளவிற்கு தன்னை மற்றவர்களிடமிருந்து சுருக்கிக் கொண்டிருந்தான். என் பணி இடங்களில் எல்லாம் தலித்துகளின் நிலை இதுதான். சிலர் கொஞ்சம் தைரியமாக கேள்விகள் கேட்டாலே அவனை மட்டம் தட்டவே நினைத்தார்கள்.
நான் வேலை செய்த ஒரு இடத்தில் ஒருவருக்கு போலீஸ் வேலை கிடைத்தது. தன‌க்கு அரசு வேலை கிடைத்துவிட்டது நான் ராஜினாமா செய்துள்ளேன் என்று என்னிடம் சொன்னபோது, அவர் சும்மா சொல்வதாக நினைத்தேன். ஏனெனில் அவர் என்னைவிட உயரம் சற்று கம்மியாக இருந்தார். அதுக்கு 170 செமீ வேணுமே என்றேன். நான் எஸ்சி சார் என்றார். வாழ்த்துகளை சொல்லி கைகுழுக்கி அனுப்பியது. அங்கிருந்த மற்ற வேலையாட்களுக்கு இருந்த வெறுப்பும் கோபமும் பன்மடங்கு இருந்ததை கவனித்தேன்.
ஏன் அவர்கள் மேல் கோபம் வருகிறது? அவர்கள் முன்னேறுகிறார்கள் என்பதாலா? அல்லது நம்மை பின்தள்ளுகிறார்கள் என்பதாலா? அல்லது இரண்டும் தானா?
இது கூட்டு சமூக மனநிலை. எதிரியாக சிறுவயதில் சித்தரிக்கப்பட்டவன் பெறும் எந்த உயர்வும் பாதிக்கிறது. சட்டங்கள் தடுத்தாலும் ஒரு கட்டத்தில் எதிர்க்கவே நினைக்கிறார்கள். அதன் உச்சம் கிருஷ்ணகிரி மாவட்ட கருவனூரில் திருவிழாவிற்கு வந்த தலித் இளைஞர்களை அடித்து வாயில் சிறுநீர் கழித்தது.

அடித்ததோடு நில்லாமல் தண்ணீர் கேட்டவருக்கு சிறுநீர் கிடைத்திருக்கிறது. ஒரு வேளை பசி என்று சொல்லியிருந்தால் மலம் கிடைத்திருக்குமோ என்னவோ. ஆனால் வெட்கப்பட வேண்டிய விஷயம். இன்னும் சாதிவெறியின் ஆட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ம‌றுக்க முடியவில்லை. சட்டக் கல்லூரியில் நடந்த தாக்குதலை போன்று இதுவும் ஒரு பெரிய கும்பலால்தான் நட‌ந்திருக்கும். அந்த ஆதிக்கசாதியின் வெறியை நாம் எப்படி தணிக்கப் போகிறோம். படிப்பறிவு சதவிகிதம் உயர்ந்தாலும் இது குறையவே இல்லை. மீண்டும் நாம் ந‌ம் மற்ற உலகத்து கொண்டாட்டங்களில், கேளிக்கைகளில் இந்த அசிங்கத்தை மறைத்துக்கொள்ளதான் போகிறோமா?

No comments: