Wednesday, March 4, 2015

பசு மாமிசம்

ஒருமுறை சென்ரல் பக்கத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளுக்கு சென்றிருந்தபோது, சின்ன சிம்னி விளக்கு வைத்த ஒரு தள்ளுவண்டியில் இருந்த பெரிய அண்டாவில் இருந்து பிரியாணியை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சின்ன ப்ளேட் ஐந்து ரூபாய்தான் இருந்தது. நிறைய மாமிசமும், பிரியாணி சாதமும் இருந்தது. அங்கு பெரிய கூட்டம் சுற்றி நின்று அதை வாங்கி உண்டுகொண்டிருந்தார்கள். ஒருவர் அவசரமாக உணவருந்திக் கொண்டிருந்தார். குறைவான விலையில் எப்படி தரமுடிகிறது என ஆச்சரியமாக இருந்தது. மட்டன் பிரியாணிக்கு பேமஸான கடையா இது இவ்வளவு கூட்டம் இருக்கே என்றேன் அவரிடம். உணவருந்திக் கொண்டிருந்தவர் ஒரு நிமிடம் நிறுத்தி ஆமாங்க ஆனா இது பீப் பிரியாணி என்றார்.
மாமிசத்திற்க்காக மிருகங்களை கொல்வது உலகெங்கும் நடந்துவரும் ஒரு நிகழ்வு. அதில் சந்தேகமே இல்லை. அமெரிக்க ஐரோப்பாவில் மாடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் என்று எல்லா பெரிய விலங்குகளையும் உண்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பன்றி தவிர ஆடு, மாடு, ஓட்டகம் என்று அனைத்தையும் உண்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற தெற்கு ஆசியா நாடுகளில் எல்லா வகை பெரிய, சிறிய விலங்குகளை சகட்டுமேனிக்கு உண்கிறார்கள், இதைதவிர மீன்வகைகள், பூச்சிவகைகள், சிறிய விலங்குகள் (நாய், பூனை) என்று எல்லாவற்றையும் அவர்களால் உண்ணமுடியும்.

அவர்கள் வீட்டு விலங்குகளையே அவர்களால் எந்தவித சங்கடங்கள் இல்லாமல் உலகம் முழுவது உண்ண முடிகிறது. அதைப் பற்றிய குற்றவுணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.
ஆனால் இந்தியாவில் இது நேர்மாறானது. பசு என்பது புனிதமானதாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. பல மாநிலங்களில் பசு உண்பதை தடை செய்யப்பட்டுள்ளது. காளை, எருது, எருமைகளை உண்ண தடையில்லை.
அதேவேளையில், பசுக்களை, மாடுகளை உண்ணாமல், கொல்லாமல் விடுவதால் இந்தியாவில் அவற்றிற்கான தேவையான உணவையும் தயாரிக்க வேண்டிய இருக்கிறது. வயதடைந்த விலங்குகள் வெறுமே ரோட்டில் விடப்படுகின்ற இந்த விலங்குகளுக்கான‌ உணவை நாம் கொடுப்பது என்பது மற்ற உயிருள்ள உழைக்கும் விலங்குகளுக்கு தேவையான உணவை குறைப்பதற்கு சமம். பல்வேறு அமைப்புகளும், சில நூல்ஆசிரியர்கள், ஆய்வாள‌ர்கள் இதை கூறியிருக்கிறார்கள்.
விவசாயம் பொய்து சரியான மகசூலை பெறமுடியாத சூழ்நிலையில் இந்த மாதிரியான அடிமாடுகளை சமாளிப்பது பெரிய சுமைதான் மக்களுக்கு. அதேநேரத்தில் பசுவதை தடுப்பு சட்டமாக கொண்டுவரும்போது இன்னும் அது சிக்கலாக மாறிவிடுகிறது.
பசுக்களை கொல்லவும் முடியாது, ஆனால் அவற்றிற்கு உணவும் அளிக்க வேண்டும்.
இதேபோன்று வறுமையில் இருக்கும் அசைவ உணவு உட்கொள்ளும் மக்களுக்கு அவர்களுக்கு தேவையான புரதமும், கொழுப்பும் கொண்ட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மாமிசத்தை மறுத்து மற்ற மாமிசத்தையோ தானியங்களை அளிப்பதோ அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற அசைவ, சைவ உணவுகாரர்களையும் பாதிக்ககூடியது.
கேரளாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பீப் கறி மிகவும் பிரசித்திப் பெற்றது. அவர்களின் அன்றாட உணவுகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. இதேப் போன்று எல்லா மாநிலங்களிலும் பசுகறி தினப்படி உணவாக இல்லை. எப்போதாவது மட்டுமே உண்ணப்படுகிறது.
இந்த மாதிரியான சூழலில் மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் தடை சட்டம் கொண்டுவருவது ஏற்புடையதாக தெரியவில்லை.
பசு புனிதமான விலங்காக இருந்தாலும் அவற்றை கொல்வது பாவமாக கருதப்பட்டாலும் இந்து மதத்திலேயே ஒரு சாரார் அதை உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். விதர்பா போன்ற பின் தங்கிய பகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் இந்த சட்டம் சில‌ பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.
இங்கிருக்கும் என் நண்பர்களிடம் இதுப் பற்றி கேட்டபோது பாதிக்கு மேற்பட்டவர்கள் தடையை ஆதரித்து பேசினார்கள்.
இது ஒருவகையில் தற்காலிக முடிவுதான் என்று நினைக்கிறேன். மேல்மட்ட நிலை மக்களும், கீழ்மட்ட நிலை மக்களும் பசுகறிகளை உண்பவர்கள். ஆனால் நடுவில் இருக்கும் மத்தியதர மக்கள் பசுவை இன்றும் புனிதமாகவே கருதுகிறார்கள். அவர்களின் வெளிப்பாடு இந்த பசுவதை சட்டத்திற்கான ஆதரவு.

No comments: