Tuesday, March 10, 2015

நளபாகம்

காமமும் நாளபாகத்தில் சேர்த்திதான். காரம், புளிப்பு, உப்பு இந்த மூன்று அதன் விகிதத்தில் இருக்கவேண்டும். கொஞ்சம் அதிகம் குறைந்தாலோ வாயில் வைக்க முடியாது. அதுபோல காமும் எல்லாமும் சரிவிகிதத்தில் கல‌ந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. தி ஜானகிராமன் கதைகளில் காமமும், தளுக்கு, நவிசும் எல்லாம் இருக்கும். அம்மாவந்தாள், மரப்பசு, மோகமுள் அனைத்திலும் இதே தான் கதை. அதேபோல அவர் எழுதிய நளபாகமும் அப்படிப்பட்டதுதான்.
கனையாழி இதழில் தொடர்கதையாக இந்நாவலை எழுதியிருக்கிறார். அப்போதே, அதாவது என்பதுகளில், கடுமையாக‌ பேசப்பட்டுள்ளது. அதன் கதாநாயகன் காமேச்வரனின் தாக்கம் மக்களிடம் அதிகம் தெரிந்திருக்கிறது. காமேச்வரனின் பேச்சும், நடத்தையும், கம்பீரமும் மட்டுமல்ல கதையில் உள்ள முக்கிய திருப்பமும் அதிகம் பேசப்பட்டுள்ளது.

தத்துப்பிள்ளைகள் மூலம் தொடரும், தொடர்ச்சியாக குழந்தைகள் இல்லா குடும்பத்தில் ஒரு நேரடி வாரிசை உருவாக்க அந்த குடும்ப பெண்மணி முயற்சிக்கிறார். அது தர்மப்படியும், சட்டப்படியும் நேர்மையற்றது போல் தெரிகிறது. ஆனால் அவர் அவ்வாறு முயற்சிப்பது பண்டைய காலங்களில் நடந்துள்ளது. இதே கருத்தை சற்று வேறு விதமாக கொண்டு இருக்கும் மாதொருபாகன் நாவல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. என்பதுகளில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் அப்போது பிரச்சனைகளை சந்தித்திருக்கும் என நினைக்கிறேன்.
ரங்கமணி தன் கணவரை சிறுவயதில் இழந்தவர், தாம்பத்தியம் அற்ற இந்த வாழ்க்கையை அம்பது வருடங்கள் கடந்து வந்திருப்பவர் அவருக்கு ஒரு தத்துப்பிள்ளை உண்டு. அந்த பிள்ளைக்கு திருமணம் நடந்திருந்தாலும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. முன்பே அந்த குடுப்பதில் ஏற்பட்ட சாபத்தால் குழந்தை பிறக்காமல் இருக்கும் அந்த குடும்பத்திற்கு குழந்தை உண்டாக்க எண்ணுகிறார். காசி, ஹரிதுவார் போன்ற புண்ணிய தலங்களுக்கு செல்லும் ரயிலில் செல்லும்போது அதன் சமையல்காரரான காமேச்வரன் தன் மருமகளுக்கு பிள்ளைபேரு அளிக்க வேண்டியவன் என நினைத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் வண்டியில் வரும் மிக பிரபல ஜோதிடர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு குழந்தை பாக்கியம் மருமகளுக்கு இருக்கு, மகனுக்கு இல்லை என்று வேறு சொல்லிவிடுகிறார். தன் வீட்டிற்கு சமையல் காரராக வர கமேச்வரனை வேண்டி கேட்டுக்கொள்ளவும், வந்தும் விடுகிறார். ஆனால் மருமகளுக்கு உண்டான குழந்தைக்கு காமேச்வரனே காரணம் என ஊரார் நினைப்பதில் வெறுப்புற்று மீண்டும் ரயில் பிரயானத்தில் சென்று சேர அதன் காண்ராக்டரான நாயுடுவிடம் வருகிறார் கூடவே கட்டிக்கொள்ள பெண் பார்க்கவும் சொல்கிறார்.
ரங்கமணி செய்யும் இயல்பான தந்திரங்கள் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. பூசை, தியானம் என்று இருக்கும் காமேச்வரனின் அப்பழுக்கற்ற தூய்மையான செய்கைகள் அவருக்கு அவரைப் போன்ற ஒரு பேரன் வேண்டும் என நினைக்க வைக்கிறது.
காமேச்வரன் வீட்டிற்கு வந்து பங்கஜத்தை காணும் இடத்திலும் பங்கஜம் அவரை காண்பதும், பங்கஜத்திற்கு முன்பே ரங்கமணி அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்கிற மாதிரியான ஜோடனைகள் நமக்கு சற்று அதிர்ச்சியைதான் ஏற்படுத்தும். அதேபோல் கருவிற்கு அவர் காரணமில்லை எனும்போது அதற்கு யார் காரணம் இளங்கண்ண‌ன் அல்லது ஜகது அல்லது அவள் கணவனேவா என்று நினைக்க வைத்து தொடர்ந்து நம்மை இழுந்தடித்து அழைத்து செல்வது ஆசிரியரின் திறமை.
திஜா ஒரு சுவாரஸ்யமான கதைசொல்லி, அவர் சொல்வது ஒரு கதையை, நடந்த நிகழ்வை வாயால் விவரிப்பது போன்று, மிக எளிய சொற்களோடு, அவருக்கு என்று இருக்கு தளுக்கு நவிசு போன்றவைகளோடு, கடந்து செல்கிறார். எந்த இடத்திலும் வலிந்து சொல்லப்பட்ட ஒரு விவரனை இல்லை. பங்கஜம்-‍ரங்கமணி உறவு, பங்கஜம்கணவன் துரை-காமேச்வரன் உறவு ஜோதிடர் பெரியசாமி-காமேச்வரன் என்று மிக நுண்ணிய சிக்கல் உறவுகளை கத்தியின் மேல் நடப்பதை ஒரு வித்தைகாரன் போன்ற லாவகத்துடன் கடந்து வருகிறார் திஜா.
இந்த சமூகத்தில் குடும்பத்திற்கு வேண்டிய குழந்தையைபெற ஒரு பெண்ணிற்கு ஆணை இட அந்த வீட்டின் முதிர்ந்த பெண்மணி இடமிருக்கிறதா? அதுவும் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து. அந்த பெண்மணி தன் பிள்ளைக்குஅல்ல தன் வளர்ப்பு பிள்ளைக்குதான் குழந்தை வேண்டி தன் மருமகளை வேறு ஒரு ஆடவனுடன் சேர்க்க நினைக்கிறார், தன் பிள்ளைக்கு என்றால் செய்வாரா? அதுவும் அவர் விரும்பும் ஒரு ஆடவனுடன் தன் மருமகள் சேரவேண்டும் என்பது சரியா? மருமகள் தான் விரும்பும் வேறு ஒரு ஆடவனுடன் சேர அவர் மாமியார் விரும்புவாரா? அவளுக்கு உண்டான கரு கணவனதுதானா? போன்ற கேள்விகளை இந்த நாவலில் விட்டிருக்கிறார். மீண்டும் ஒரு முறை படித்துதான் தெரிந்துக் கொள்ளவேண்டியிருக்கும்.

No comments: