Thursday, March 26, 2015

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

தொலைக்காட்சியில் பார்த்தேனா சினிமாவில் பார்த்தேனா நினைவில்லை. ஒரு காட்சி மட்டும் நினைவிருக்கிறது. திருமணம் செய்த ஒருவரை விட்டு கொஞ்சம் கட்டுமஸ்தானாக இருக்கும் ஒரு கூடைப்பந்து வீரரை பிடித்துப்போய் மறுமணம் செய்து கொள்வாள் நாயகி. கொஞ்ச நாள் கழித்து அவர்களை காணவரும் முதல் கணவன் அவர்களின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைவார். இரண்டாவது கணவர் கால்களை இழந்திருப்பார். வறுமை தாண்டவாகிறது வீடு. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பார்கள். கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு செல்வார். கதை என்னவாக இருந்துவிட்டுபோகட்டும். எனக்கு அந்த வயதில் அதிர்ச்சியாக இருந்தது எப்படி ஒரு பெண் இரண்டாவது செய்துகொள்ளலாம் என்றுதான்.
அதுவரை ஆண்கள்தான் ஒரிரண்டு பேர் அதுவும் மிக அரிதாக மனைவி இறந்தபின்னால் குழந்தையை வளர்க்க வேறு வழியில்லாமல் அப்படி மறுமணம் செய்திருந்தார்கள். ஒரு பெண் கணவன் இறந்தாலும் திருமணம் செய்வதில்லை. அப்படி கணவன் உயிருடன் இருக்கும்போது எப்படி மறுமணம் செய்வார் என்று நினைத்தேன். அதே வேளையில் இது சினிமாவில் ஒரு புரட்சிக்காக அப்படி எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நிஜவாழ்க்கையில் எங்கும் பார்த்ததில்லையே. இன்று அப்படி இருவரும் மறுமணம் செய்துக் கொள்வதை வரவேற்கிறேன். உண்மையை சொல்வதென்றால் மறுமணங்களை நிஜவாழ்க்கையில் அரிதாகத்தான் காண்கிறோம். யாரோ ஒரு எங்கோ நடந்ததாக இருக்கிறது. நேரில் காண்பது மிகக்குறைவுதான். இன்று பல விவாகரத்துகள் நடந்து மறுமணம் செய்து கொள்வது அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட.
ஆனால் சினிமாவில் தொடர்ந்து மறுமணங்கள் நடந்திருக்கிறது. ஆகவேதான் நம‌க்கு அதில் ஒரு கிரேஸ் இருக்கிறது என நினைக்கிறேன். சினிமா நடிகர் நடிகை இயக்குனர்கள் மற்றும் தொழிற்நுட்ப வல்லுனர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது அவர்களின் மறுமணங்கள், உறவு விலகல்கள் எல்லாமே சராசரிக்கும் சற்று அதிகம்தான். நிறைய வாய்ப்புகளும், சுதந்திரமும், பணமும் இருப்பதனால் அவ்வாறு செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு மனஅழுத்தமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். நிறைய வேலைகள், குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்க வேண்டிய நிர்பந்தம், சூதாட்டமாக சுழலும் பணம், இப்படி எத்தனையோ இருப்பதால் இருவருக்குமான இடைவெளி அதிகரிப்பதுபோல் தெரிகிறது.
திருமணங்கள் மாறிமாறி நடந்திருப்பதுதான் சுவாரஸ்யம். பல நம‌க்கு தெரியாமல் நடந்திருக்கின்றன. பல வெளியில் சொல்ல முடியாதவைகளாகவும் உள்ளன‌. எம்ஜியாரின் முதல் இரண்டு திருமணங்கள் நடந்திருந்தாலும் மனைவிகள் தொடர்ந்து இறந்துவிடுகிறார்கள். முன்றாவதாக விஎன் ஜானகியை திருமணம் செய்தபோது அவருக்கு முன்பே திருமணம் ஆகியிருந்து ஒரு குழந்தை உண்டு. எந்த சட்ட பிரிவினையும் இல்லாமல் எம்ஜியாருடன் தொடர்ந்தார் ஜான‌கி. அதே போல் சீதேவி மிதும் சக்ரவர்த்தியை திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்தார் பின் பிரிந்து போனி கபூரை திருமணம் செய்தார். கிஷோர் குமாரின் மனைவி (விஎன் ஜானகியைபோல்) எந்த சட்டபிரிவும் இல்லாமல் அவரிடமிருந்து விலகி மிதும் சக்ரவர்த்தியுடன் வந்து வாழ்ந்தார். அவர்களுக்கு குழந்தைகள் உண்டு.
ஜெமினி கணேசன் மூன்று திருமணங்களை செய்தவர்.எஸ்எஸ் ராஜேந்திரன் இரண்டு திருமணங்கள், இரண்டாவதாக விஜயகுமாரியை திருமணம் செய்தார் அதுவும் கொஞ்சநாள்தான் வாழ்ந்தார். சிவாஜிக்கு முதலாவதாக ஒரு நாடகநடிகை உண்டு (அவர் பெயர் ரதினமாலா என நினைக்கிறேன்). அவரை விலகி இரண்டாவதாகவே கமலாவை திருமணம் செய்தார். அதற்குபின்னால் வந்த நடிக நடிகைகள் மறுமணங்களை அதிகம் செய்யவில்லை.
கமல்தான் முதன்முதலில் நேரடியாக ஒரு பெண்ணை விவாகரத்து செய்தவர். முன்னால் அதிகமும் சட்டபூர்வமாக அல்லாமல் விலகியவர்கள். பின் சீவித்யா, லெட்சுமி, ராதிகா, சீதா, நளினி என்று தொடர்ந்து விவாக‌ரத்து பெற்று மறுமணம் செய்தவர்கள். (நளினி தவிர).
இப்போது நடிக நடிகைகள் அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ளவதில்லை. காதலர்களாக இருக்கிறார்கள் சரிப்பட்டு வருகிறதா, தொடர்கிறார்கள் திருமணம் வரை செல்கிறார்கள். இல்லையா வேறு காதல். முன்பு யாரை திருமணம்/மறுமணம் என்றிருந்தது இன்று யார் இருவர் காதலர்கள்/இல்லை என்றாகிவிட்டது. மறுமணங்கள் மலையாள சினிமாவில் தமிழைவிட சற்று அதிகம் என நினைக்கிறேன். குடும்ப கதைகளில் நடித்த நடிகைகள் பல திருமணங்கள் செய்த போது, குத்து டான்ஸரான சில்க் ஒரே காதலருக்கு காத்திருந்து தற்கொலை செய்து கொண்டார். என்ன ஒரு முரண்நகை.
சினிமாவில் நடக்கும் திருமண/மறுமணங்கள் ரொம்ப சுவாரஸ்யங்களாக இருந்தாலும் நிஜவாழ்வில் நடக்கும்போது அதிர்ச்சியாக ஏற்றுக்கொள்ள தயக்கமும் மக்களிடம் இன்றும் இருக்கிறது.

No comments: