Tuesday, March 17, 2015

சா.தேவதாஸ்

ஒரு மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி சந்திப்பில் சா.தேவதாஸ் அவர்களை சந்தித்தது நினைவிருக்கிறது. கிராமத்து வேலைகளில் பழக்கப்பட்டவர் போல கருத்த நெடிய உருவம். அதிகம் பேசாத மென்மையான பேச்சு. கேள்விகளுக்கு அதிகம் ஆம் இல்லை என்று மட்டுமே அதிகம் கூறினார். கூச்ச சுபாவம் என்று சொல்லமுடியாது அதேவேளையில் திடமான ஆழ்ந்த நம்பிக்கையில் இருப்பவர் போலிருந்தார். தொழிற்முறை மொழிபெயர்ப்பாளராக தன்னை அறிவதைவிட தான் விரும்பும் வாசிப்பின் தேவைக்கு செயல்படும் மொழிபெயர்ப்பாளராகவே அறிய‌விரும்புபவராக தெரிந்தார். அவர் மொழிபெயர்த்துள்ள நூல்கள் அனைத்தும் மிக கடின தேர்வுகள் தான்.
25 நூல்கள்வரை மொழிபெயர்த்துள்ளார். அந்த நூல்களுக்காக‌ அவர் எழுதியுள்ள முன்னுரைகள் அவர் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமை என்பதை நிரூபிக்கின்றன.
புலப்படாத நகரங்கள் (கால்வினோ), குளிர்கால இரவில் ஒரு பயணி (கால்வினோ), ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை (கால்வினோ), லியோனார்டோ டாவின்சி குறிப்புகள், அமர்தியா சென்-ஒரு சுருக்கமான அறிமுகம், செவ்விந்தியரின் நீண்ட பயணம், சூரிய நடனம், லடாக்கிலிருந்து கவிழும் நிழல், லூயி புனுவல், பீட்டர்ஸ்பர்க் நாயகன், அமெரிக்கன், காஃப்கா: கடிதங்கள், கதைகள், கட்டுரைகள், செவ்விந்தியரின் நீண்ட பயணம், இறுதி சுவாசம், ஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன், பாப்லோ நெரூடா நினைவுக் குறிப்புகள்
மொழிபெயர்ப்புகளைத் தவிர நேரடியான நூல்கள் பல எழுதியுள்ளார். அவைகளில் இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும், புதிர்களை விடுவித்தல் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதெமி விருது அவர் லடாக்கிலிருந்து கவிழும் நிழல் என்கிற நூலுக்காக பெறுகிறார். அவருக்கு எம் வாழ்த்துக்கள்.

No comments: