மகாபாரத இதிகாசத்தை நாவலாக முழுமையாக எழுத நினைத்திருக்கும்
எழுத்தாளர் ஜெயமோகன்
ஆரம்ப நூலாக எழுதிதொடங்கியிருக்கும் புத்தகம் முதற்கனல். அந்த பெயரே ஒரு கவித்துவமாக இருக்கிறது. நாவலின் உள்ளே
பல புதிய சொற்களும் கவித்துவமான வார்த்தை, வாக்கிய, சொல்லாடல் என்று சிதறிக்கிடக்கும் எழுத்துப்
பெருவெளியாக விரிந்து கிடக்கிறது முதற்கனல். பெரும் கனவை நினைவுகூறும் பதபதைப்பும்
சின்ன வயது நினைவுகளுடன் அவற்றை இணைக்க முயற்சிக்கும் ஒரு நிறைவும், கலையுடன்கூடிய அழகுணர்ச்சியும் கொண்டு சமவெளி மலர்கூட்டங்களின்
நறுமணம் போல மேலேழுந்து வருகிறது.. அவரது உச்சமான விஷ்ணுபுரத்தை தாண்டி இப்போது மற்றொரு
உச்சத்தை தொட்டிருக்கிறார் என்று சொல்லலாம். அடுத்த பாகங்கள் வெளிவந்து அதை உறுதிப்படுத்தும் என நினைக்கிறேன்.
வெண்முரசு மொத்தமாக 10000 பக்கங்களை
கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மிகதீவிரமாக நவீன இலக்கியத்தில் இத்தனை பக்கங்கள்
எழுதப்படும் நாவல் இதுவாகத்தான் இருக்கும். ராஜாஜியின் மகாபாரம் இரண்டாம்படி, உபபாண்டவம், இனி நான் உறங்கட்டும், யயாதி, நித்திய
கன்னி, என்று மகாபாரதமும் அதை சார்ந்த
நூல்களையும் படித்திருந்தாலும், சில தொலைகாட்சி தொடர்களை கவனித்திருந்தாலும்
எந்த காவியத் தருணத்தையும் விடாமல் மகாபாரதத்தை முழுமையாக நவீன மொழியில் படிப்பது, படிக்கப்போவது இதுவே முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். வயதான கதைச்சொல்லியின் வாயிலிருந்து
வரும் விதவிதமான இதுவரை கேட்டேயிராத அலங்கார வார்த்தைகள்போல இது இருக்ககூடும். அதன்
தொடக்கத்தை முதற்கனலில் காணமுடிகிறது.
//வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில்
நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.//
மகாபாரதம் எல்லா காலங்களுக்கும் ஏற்ற நூலாக இப்போதும் இருந்து
வருகிறது. மகாபாரததின் அதன் ஒவ்வொரு சொல்லும் நாடக தருணங்களும் பீரிட்டுவரும் ஊற்று
ஒன்று எளிதில் விஞ்சமுடியா கடின தருணங்களில் விரிசல்கொண்ட பாழ்நிலமென இருக்கும் நம்
மனங்களில் பாய்ந்து வளப்படுத்துபவை. முன்பு கும்பகோணம் பதிப்பு என்று சமஸ்கிருதத்திலிருந்து
நேரடியாக பல தொகுதிகளைஉடைய முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் இருந்தது இன்றும் இருக்கிறது.
அதுவே நமக்கான அதாரமாக இப்போதைக்கு கொள்ளபடுகிறது. ஆனால் நவீன எழுத்தால் இன்னும் எழுதப்படவில்லை.
மகாபாரதம் முன்பே முழுவதும் எழுதப்பட்டுவிட்டது. அதன் அகம், தரிசனத்தை முழுமையாக வேவ்வேறு காலகட்டத்தில் புத்தகம், பேச்சு, என்று சொல்லப்பட்டுவிட்டது. மீண்டும்
எழுதுதென்பது ஒரு எழுத்தாளருக்கு அதிகம் வேலையற்ற பணியாக இருக்கத்தான் வேண்டும். ஆனால்
மகாபாரதம் எப்போது அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணசித்திரத்தாலும், தத்துவ சொல்லாட்சிகளாலும் தொடர்ந்து முன்வைக்கபட்டு அதன் வீரியத்தை, உணர்ச்சியை, அதன் முழுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்க
முடியும். புதிய ஆராச்சிகளால் எந்த நிலப்பகுதியில் என்ன காலகட்டத்தில் நடந்தது முன்பின்
காலகட்டதை நீட்டி படிப்பவர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்திவிடமுடியும். அதன் நாடகீய தருணங்கள் ஒன்வொன்றும்
மிக உன்னதமான மனஅமைதியையும், மனஎழுச்சியையும், நிறைவையும் புதியகோணத்தில் தற்போதைய சூழலுக்கு தகுந்தாற்போல்
எழுத முடியும். எழுத்துபவரின்
மேதைமையும், அவரின் சொல்லாட்சியையும் பொருத்தது. ஜெயமோகனின் அனுபவமும், நீண்ட மகாபாரத வாசிப்பும், இந்தியா முழுவதும் பயணப்பட்ட அறிவும் கைக்
கொடுத்திருக்கின்றன.
முதற்கனல் ஒரு காவியப்படைப்புதான். அதன் பாத்திரபடைப்பு, சொல்லாட்சி, நிலக்காட்சிகள், என்று அனைத்தும் நம்மை கவனிக்க தூண்டிக் கொண்டேயிருக்கிறது. ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை
தடை ஏற்படுத்த வரும் அகஸ்திகனின் பயணத்திலிருந்து அதன் வெற்றியுடன் திரும்பிவரும் பயணம்
வரை முடிகிறது இந்தநாவல் முதற்கனல். நடுவில வைசம்பாயணரின் வார்த்தைகளில் விரிகிறது
பாரதம்.
செய்திகளை பகிரும் அல்லது தரவுகளை பரிமாறிக்கொள்ளும் ஒரு
மேடை பிரசங்கமாக இல்லாமல், நாவலுக்குரிய
அத்தனை குணங்களுடன் ஒவ்வொரு பாத்திரமும் அதற்கேயுரிய அகவிரிவை, மனஎழுச்சியை, வீழ்ச்சியை சொல்கிறது முதற்கனல். முதற்கனல் நாவலின் நான்கு பாத்திரங்கள்
மிக முக்கியமாக அழுத்தம் கொடுத்து சொல்லப்பட்டிருக்கிறது: சிகண்டி, பீஷ்மர், அம்பை, விசித்திரவீரியன். நான் சொல்லிய இந்த வரிசைதான் எனக்கு பிடித்திருக்கிறது. இதைத்தவிர பல்வேறு பாத்திரங்கள்
பல்வேறு கோணங்களி பேசுகிறார்கள். உதாரணமாக சூதர்ப் பெண் சிவை.
சிகண்டி வரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உடலும் மனமும்
பதைப்புடன் அவனை எதிர்க்கொள்கிறது. மயிர்கூச்சரிக்கும் உடலுடன்தான் சிகண்டியை கவனிக்கிறோம்.
அவனின் ஒவ்வொரு அசைவும் நமக்கு மிக நெருக்கமான ஒருவரது மனஅவசங்களை கவனிப்பது போலிருக்கிறது. சிகண்டி இல்லாமல் இந்த முதற்கனல்
நிறைவு பெற்றிருக்காது. அவனது சொல்லில்தான் பீஷ்மரின் ஆளுமையை புரிந்துக் கொள்ள முடிகிறது.
அவனில்லாமல் பீஷ்மர் இல்லை என்பதை ஒவ்வொரு வரியில் சொல்லிவிடுகிறார்.
மகாபாரதத்தில் பீஷ்மர் இல்லாமல் ஒரு அணுவும் அசையப் போவதில்லை.
மகாபாரதமே பீஷ்மரின் கண்களில்தான் வளர்க்கிறது. உடலின் நரம்புபோல முதற்கனல் முழுவதும்
அவர்தான். அவர்தான் அடுத்தக்கட்ட நகர்வை தேர்வு செய்கிறார். அவர்தான் மற்றவர்களால்
உந்தி தள்ளப்படுகிறார். அவர்தான் மனசஞ்சலப்பட்டு கவலையும் கொள்கிறார்.
அம்பையின் ஆவேசம் அர்த்தமற்ற ஒன்று அல்ல, அதில் இருக்கும் வேகம் வஞ்சிக்கப்பட்ட
பெண்ணிற்கே உரியது. அம்மையும் சிகண்டியும் வேறானவர்கள் அல்ல. (சிகண்டிகையின் தாயாக
அம்பையை சொல்கிறார் ஜெ.) அப்பையின் உருவம் ஒன்றை வெளியிட்டிருந்த ஓவியத்தில் அதை முழுமையாக
காட்டியிருக்கிறார் ஓவியர் சண்முகவேல்.
விசித்திரவீரியனின் வேடிக்கையாக தன்னை எள்ளி நகையாடிக் கொள்ளும்
ஒரு விகடனாக சித்தரிக்கிறார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. அதிலேயே அம்பிகா காதல் கொள்கிறாள்.
அவர்களின் காதல் பேச்சுக்கள் சுவாரஸ்யமான நகைச்சுவை நாடகத்தைப் போன்றது அது.
அம்மையின் சித்திரம் மட்டுமல்ல மற்ற எல்லா சித்திரங்களும்
சண்முகவேலால் அழகாக கொடுக்க முடிந்திருக்கிறது. என்ன சித்திரத்தை இந்த அத்தியாயத்திற்கு
எழுதியிருக்கிறார் என்று கவனிப்பதே ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.
அற்புத சொல்லாட்சிகளுக்காக மீண்டும் ஒருமுறையாவது படிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment