Saturday, December 2, 2023

ரமணிகுளம் கடிதம் -‍ பா.ராஜேந்திரன்



அன்புள்ள அசோக்குமார்

உங்கள் ‘ரமணிகுளம்’ நாவலைப் படித்தேன்.

நான் காலச்சுவடில் ரமணிகுளத்தை பெற்று படிக்க ஆரம்பித்த சில நாட்களில் நூல் தொலைந்து விட, மீண்டும் ஒருமுறை வாங்கி விட்ட இடத்தில் இருந்து படித்து முடித்துவிட்டேன்.

அருமையாக இருந்தது. தொய்வற்ற வாசிப்பு தந்தது.

  • ஒரு புறம் நகரத்தின் வளர்ச்சியால் காடு தோட்டம் ஆகி தோட்டம் தரிசாகி மனைகளாகி, மனைகள் வீடுகளாகி, வீடுகள் அடுக்ககங்கள் ஆகி அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்.
  •  அதே காலகட்டத்தில் மூன்று தலைமுறை மனிதர்களின் குணங்கள் உறவுகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள்.
  •  குடும்ப உறவுகள் சிதைவது.

இவற்றை முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்லிச் செல்கிறது நாவல். சுதந்திரத்திற்கு பிறகான கால கட்டமாக கொள்ளலாம்.

வெவ்வேறு விதமான மனிதர்கள், காட்சிகள் ஹொய்சாள சிற்பங்களைப்  போல நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. காட்சிகள் கண்முன் விரிகின்றன. மனிதர்கள் உயிருடன் எழுந்து வருகின்றனர். வாசனைகளை இத்தனை விவரமாக படித்தது இல்லை. உரையாடல்கள் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளன.

ரமணி குளம் ஒரு குறியீடாகவே எஞ்சி விடுகிறது. காடு அழிக்கப்படும் காலத்தில் கூட அதை யாரும் பார்த்ததாக பயன்படுத்தியதாக குறிப்பு இல்லை. ஊர்களற்ற அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு சிறு கோயிலைப் பார்த்த சூரிய நாராயண நாயுடு குளம் ஒன்றை பார்த்ததாக தெரியவில்லை. முத்துவேலன் சிறுவயதில் அந்த இடத்தை குப்பை மேடாகத்தான் பார்த்திருக்கிறான். ராமமூர்த்தியின் வாய் வார்த்தைதான்.

கதையின் மையக்கதாப்பாத்திரம் என யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஜெயராமன் என்று ஒரு சரடு, ராமமூர்த்தி என்று ஒரு சரடு, முத்துவேலன் ஒரு சரடு என்று ஆகிய மூன்றின் பின்னல்தான் கதை.

நல்ல உவமைகள். அதில் ஒரு தனித்துவம், பெரும்பாலானவை உடல் சார்ந்த உவமைகளாக இருப்பது.

  • ஏதோ விசித்திர உருவத்தின் எலும்புக்கூடு போல், பொக்கை வாய் மனிதனின் சிரிப்பு போல இருந்த கதவு ஜன்னல்கள் நீக்கப்பட்ட வீடுகள்.
  •  திறந்த பிணத்தின் வாய் போலிருந்த பள்ளங்கள்.
  •  கொலுசு அணிந்த குழந்தையின் நடை போல.
  •  அம்மணக் குழந்தையின் குண்டி போல அழுக்கடைந்து கடந்த நிலம்.
  •  மயிர் நீக்கப்பட்ட அம்மண உடல் போல் இருந்த வாழைத் தோப்புகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலம்.
  •  வயிறு சரியில்லாதவனின் நடை போல மெதுவாகச் சென்ற பேருந்து.

லேசாக குலுங்கிய படி வந்த நாயின் உதடுகளுக்கு பெண்ணின் பெருத்த மார்புகள் உவமையா? இனி அத்தகைய மார்புகளைப் பார்த்தால் நாயின் உதடுகள் தானே ஞாபகத்திற்கு வரும்? கடவுளே!

மற்றவற்றில் சில

  • பொங்கி வரும் சோடா பானம் போல குதித்து வரவழைத்து இருந்த உற்சாகம்.
  •  வலியில் துடிக்கும் காயம் பட்ட மிருகம் போல குரலெழுப்பிய கிரில் கேட்.

பலர் நிலத்தை வீட்டை விட்டு விலகி வேறிடம் பெயர்கின்றனர். மனோகரி, கனகசபை மழவராயர் ஆகியோருக்கு வீடு, நிலத்தை இழப்பது என்பது மரணம் தான்.

மாற்றத்தை தடுக்க முடியாது. அதன் தீவிளைவுகளை குறைக்க தள்ளிப்போட முயற்சி செய்யலாமே என்கிறார் ராமமூர்த்தி. இறுதி அத்தியாயம் ஒரு நம்பிக்கையுடன் ஒரு கனவுடன் முடிகிறது.

ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத்தந்ததற்கு நன்றி

அன்புடன்,

பா ராஜேந்திரன்

திருவண்ணாமலை

 

அன்புள்ள ராஜேந்திரன் அவர்களுக்கு

நலம்தானே?

 உங்கள் விமர்சனம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கூர்ந்து ஆழமாக வாசித்திருக்கிறீர்கள். எல்லா வரிகளையும் நியாபகம் வைத்திருப்பது போல சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் சொன்ன இந்த உவமைகள் எல்லாமே இப்போது எனக்கும் நினைவிற்கு வருகிறது. எழுதும்போது இருக்கும் மனநிலை ஒருவாறு நம்மை கட்டிப்போட வைத்துவிடுவது. எல்லா சிந்தனைகளும் அதை நோக்கியே சென்று கொண்டிருக்கும் அப்போது. எழுதிய காலகட்டத்தில் அத்துணை கதாபாத்திரங்களுடனும் வாழ்ந்துவிட்டேன். மீண்டும் நினைவுபடுத்தி அந்த உலகிற்கு செல்லவைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

அன்புடன்

கே.ஜே.அசோக்குமார் 

No comments: