Monday, March 16, 2015

குர்தியரின் துப்பாக்கி

 ஈழப் போராட்டத்தை நினைவுறுத்துவது போலிருக்கிறது குர்தியரின் போராட்டம். ஈராக் நாட்டில் இருக்கும் குர்து இன பிரச்சனை தங்களுக்கான உரிமையும் தங்களுக்கு தேவையான தனி நாட்டையும் நிலைத்தையும் பெறுவதற்கு 1970லிருந்து போராடிவருகிறார்கள். அவர்களது இந்த போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. தொடர்ந்து ஈராகின் தாக்குதலால் மக்கள் பல்வேறு இடங்களில் சிதறி சொந்தங்களை, வீடுகளை, நிலங்களை இழந்து வாழ்கிறார்கள். ஈரான், சிரியா, துருக்கியை அண்டை நாடுகளாக கொண்ட அவர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.  தங்கள் வளமையான பகுதிகளை இழந்து வெப்ப பகுதியில் நாய்களைப் போல வாழவேண்டியிருக்கிறது. தங்கள் மொழி, இன அடையாளங்களை இழந்து ஈராக்கியருடன் சேர்ந்துக் கொண்டால் நலமாக வாழலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட பாதிப் பேர் வாழ்க்கிறார்கள். அப்படி ஏற்காதவர்கள் என்னேரமும் கண்காணிப்பிலும் எப்போது சாவை எதிர்கொண்டவர்களுமாக இடம்விட்டு இடம் பெயர வேண்டியிருக்கிறது.
ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்கிற சின்ன நாவல் அல்லது தன்வரலாறு எவ்வாறு மக்கள் அவதியுற்றார்கள் எனபதை விளக்குகிறது. காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிப்பெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. சந்தேகத்தின் பேரில் ஆசிரியரின் மாமாவை கைது செய்து கால்களைக் கட்டி ஜீப்பில் இழுத்துச் சென்று கொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆசிரியரின் சிறுவயது நினைவுகள் மங்கலாக இருந்தாலும் சின்ன நகைச்சுவையுடன் மிக எளிய சொற்களால் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருகிறது. விறுவிறுப்பு என்று நாம்தான் நினைக்கிறோம் உண்மையில் சொல்லமுடியாத துயரத்தைதான் விவரித்துச் சொல்கிறார்.
சிரியா, ஈரான், துருக்கி அண்டை நாடுகளாக இருந்தாலும் அங்கு ஆட்சிசெய்வது அமெரிக்காவும், ரஷ்யாவும்தான். குர்தியர்களே ரஷ்யாவின் ஆதரவை முதலில் கிடைக்க இருந்து அதுகிடைக்காமல் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கப்போகிறது என்று நினைத்து வாழும் அம்மக்களின் வாழ்வை எல்லா போராட்ட களங்களில் பொருந்திப் போகிறது. எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்க போட்டிப்போடும் நாடுகளுக்கு நடுவில் சின்ன நாடுகள் தங்கள் வாழ்க்கையை, அடையாளங்களை, உரிமைகளை, உடைமைகளை இழந்து பரிதவிக்கிறார்கள். இது எல்லா சிறிய, ஆதரவற்ற குழுக்களுக்கு பொருந்திப் போவதுதான் ஆச்சரியம்.
ச‌தாம் உசேனின் பாத் கட்சியின் துரித வளர்ச்சியும் குர்து இன மக்களின் அழிவும் ஒரு சேரப் நடக்கிறது. இன்னும் ஒர் ஆண்டில் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று பேசிக்கொண்டிருக்கும் சலீமின் அப்பாவிடம் ஒரு தூப்பாக்கியிருக்கிறது. அதை வைத்து அவர் காணும் கனவுகள் எத்தனை மேலோட்டமானது, அதற்கு மேலே இருக்கு கண்ணுக்கு தெரியாத சக்திகளைப் பற்றி அறியாமல் அம்மக்கள் தங்கள் கனவுலகில் வாழ்ந்து மறைகிறார்கள்.
அண்ணனின் ஆயுதப்போராட்டம், அப்பாவின் படைத்தலைவரின் அந்தரங்க செயலர் என்று இருக்கும் இவர்களின் கெளரவமான வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அகதியாகி மீண்டும் திரும்பி நாட்டிற்கு வரும்போது 'திரும்பியவர்கள்' என்று முத்திரைக்குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதும், சந்தேகிக்கப்படுவதும் என நகர்கிறது வாழ்க்கை. எந்த பட்டமும் பெறமுடியாமல், எந்த முற்னேற்றத்தையும் பெறமுடியாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கிருந்து அம்மாவையும் அப்பாவையும் விட்டு தப்பித்து ஜரோப்பா வந்து படித்து இயக்குநராக பிரான்சில் வாழும் சலீம் இன்றும் உயிருடன் வாழும் அம்மா இருக்கும் குர்து பகுதிக்கு செல்லமுடியாமல் வாழ்கிறார்.
எத்தனை விசித்திரமானது இந்த வாழ்க்கை. ந‌மக்கு இருக்கு காவேரி பிரச்சனை, முல்லைபெரியாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை என்று தோன்றவைக்கிறது.
ஜனநாயகத்தை இழந்த ஒவ்வொரு பகுதியும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறது. மீண்டும் ஜன்நாயகம் மலரச்செய்ய அவர்கள் எத்தனை உழைத்தாலும் திரும்ப கிடைக்காது போலிருக்கிறது. அவர்களுக்குள் சந்தேகங்களும் அவர்கள் நாடான ஈராக்கின் வெறுப்பையும் கொண்டு நடுவில் வாழ்கிறார்கள்.

இந்த பிரச்சனைகள் தீராமல் இருக்க இருக்கவே இருக்கின்றன ரஷ்யாவும் அமெரிக்காவும்.

No comments: