Thursday, March 19, 2015

பெண்க‌ள் ரசனை

நான் வேலை செய்யும் இடங்களில் பெண்கள் சினிமா பற்றி பேசும்போது உதிர்க்கும் வார்த்தைகள் இப்படி இருக்கும். 'நாம சினிமாவுக்கு போறதே அங்க போயி சந்தோஷமா இருக்கதான். அழுக, சோகம், தத்துவம்லாம் வெச்ச யார் பாப்பா'. வீட்டில் டிவி பார்க்கும்போது கொஞ்சம் பழைய சோகப்பாடல்களை வைத்தால் வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் அலறுவதை காணலாம். இந்த பேத்தாஸ் எல்லாம் வேண்டாம் என்பார்கள். சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், சிரிப்பு படக்காட்சிகள், வேடிக்கையான விளையாட்டு போன்றவைகள் இருக்கலாம். பழைய பாடல்கள் இருக்க கூடாது, அதுவும் சோகமாக, தத்துவமாக இருக்க கூடாது. அதே நேரத்தில் நீங்கள் தீவிரமாக விவாதிக்கும்/சண்டையிடும் விவாத நிகழ்ச்சிகள் அல்லது கேள்விகள் கேட்டு பெறும் அரசியல்வாதிகளின் இலக்கியவாதிகளின் பேட்டிகள் இருக்க கூடாது.
பொதுவாக சினிமா இயக்குனர்கள், விமர்சகர்கள் கூறுவது பெண்களுக்கும் குழந்தைகளுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால் அது வெற்றிப்படமாக இருக்கும் என்பார்கள். ஒரு படத்தின் மினிமம் கேரண்டியை தீர்மானிப்பது இந்த விஷயம்தான். யோசித்துப் பார்த்தால் சினிமாவில் பெண்களுக்கு ஆடவைக்கும் பாடல்களும், சிரிப்பு வெடிகளும்தான் இருக்கவேண்டும். பாடல்கள் கொஞ்சம் கவர்ச்சியாக அசிங்கமாக இருக்கலாம் ஆனால் சோகம், தத்துவம் இருக்ககூடாது.

தொலைக்காட்சியில் தீவிரமான விவாத பேச்சுகள் இருந்தால் இதுக்கு ஏன் இவ்வளவு சண்டை போடுகிறார்கள் என்பதாக இருக்கும். பெண்கள் ரசனை அவ்வளவுதானா? இலக்கியம், இசை என்று அதீத விஷயங்களுக்கு செல்லவில்லை. கேளிக்கை சார்ந்த விஷயங்கள் மட்டுமே பேசுகிறேன். சாதாரண கேளிக்கை விஷயங்கள்கூட பெண்களுக்கு என்று தனியாக ஒரு ரசனை இருக்கிறது. மனைவி முதல் பெண்களை அழைத்து சென்ற சினிமாக்கள் பொதுவாக தீவிரமான படங்கள் இல்லை.
போனால் போகட்டும் போடா, தெய்வம் தந்த வீடு, வீடு வரை உறவு போன்ற பாடல்களை விரும்பி கேட்ட பெண்களை நாம் காணமுடியாது. ஒருவேளை இது அவர்களை காயப்படுத்துகிறது என நினைக்கிறேன். பெண்களை தள்ளிவைத்து சுயமாக சிந்திக்கிற பாடல்கள் இவை. ஒரு ஆண் தனக்கு தேவையானவற்றை பெண்களிடமிருந்துதான் பெறவேண்டும் என்று நினைப்பதன் எதிரொளி என நினைக்க தோன்றுகிறது.
ஆண்களின் சுயசிந்தனை பாடல்கள், குறிப்பாக குடும்பத்தை மீறும், வெளியேறும் பாடல்கள், பெண்களுக்கு பிடிப்பதில்லை. அதேமாதிரியான படங்களும், இலக்கியங்களும். அதே வேளையில் பெண்கள் பற்றிய சுயசிந்தனைப் பாடல்கள் எல்லாப் பெண்களுக்கும் பிடித்ததாக சொல்லமுடியாது. பெண் குரல்களில் ஒலிக்கும் சோகப்பாடல்கள்கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. கண்ணின்மணியே போராட்டமா, கண்ணிலே என்ன உண்டு, மாலைபொழுதின் மயக்கதிலே போன்ற பாடல்களை சொல்லலாம்.
சில இயக்குனர்களின் படங்களை பெண்கள் விருப்புவதில்லை என்பதை முகநூலின் வாயிலாக அறியமுடிகிறது. பாலா, வச‌ந்தபாலன் படங்களை பெண்கள் அனுகும் முறை முற்றிலும் வேறானது. பாலாவின் படங்களை அவர்கள் ஒரு அருவருப்பாகவே நினைக்கிறார்கள். வெய்யில், கற்றது தமிழ் போன்ற பட‌ங்கள் கொஞ்ச நாள் முன்பு வெளியானது. அவைகள் நன்றாக இருக்கின்றன என்று சொன்னப்போது பெண்களிடமிருந்து தீவிரமான எதிர்ப்புதான் வெளிப்பட்டது. அதில் இருக்கும் வன்முறை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது அவர்களை உதாசினப்படுத்துவதாக நினைக்கிறார்கள். மிக இலகுவான தருணங்கள் மட்டுமே  வேண்டும் என்று நினைப்பதன் விளைவல்லவா இது.
இரண்டு பெண்கள் சேர்ந்தால் அவர்களின் பேச்சில் ஒன்று சமையல் இருக்கும் அல்லது குழந்தைகளின் சேட்டை பற்றி இருக்கும்.

தீவிரமாக களப்பணி செய்கிற பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பேசியிருக்கிறேன். புதியதாக எதாவது செய்யவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படும் அவர்களிடம் இந்த சினிமா, பாடல்கள், போன்ற கேளிக்கை விஷயங்களில் அழுத்தமான ஒரு மாறுபட்ட ரசனை இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் மிக குறைவானவர்கள். தினப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள ஒரு தீர்மானமான ரசனை வேண்டும் என்று நினைப்பவர்களா இருக்கிறார்கள். அந்த‌ எண்ணிக்கை அதிகரிக்கும் நாள் சற்று தொலைவில் இருக்கிறது என நினைக்கிறேன்.

No comments: