Monday, March 2, 2015

கள்ளம் தஞ்சை ப்ரகாஷ்

தமிழில் மிகக் குறைந்த வாசகர்களால் வாசிக்கப்படும் அற்புத நாவல்கள் பல உள்ளன. முதல் பதிப்போடு முடிந்துபோய் கிடைப்பதே அரிதாக இருக்கும். அப்படி ஒரு நாவலான கள்ளம் நாவலை வாசித்துவிட்டேன் என்பது பெருமைப்படும் விஷயம்போலத்தான் தெரிகிறது.
கள்ளம் நாவலை அதன் ஆசிரியரான தஞ்சை ப்ரகாஷ் சொல்ல அவரின் சிஷ்யர் ஒருவரான சுந்தர்ஜி ப்ரகாஷ் எழுதியது என்பதை அதைப் படிக்கும்போது யாராலும் நம்பமுடியாது. அத்தனை அழகாக மிக நேர்த்தியாக முழு ப்ரக்ஞையுடன் எழுதியது போலிருக்கிறது.
நான் படித்த பல நாவல்களை அவற்றின் அடர்த்தியின்மையால், பக்கங்களை நிரப்ப எழுதப்பட்டதுபோல் நான் உணர்ந்திருக்கும் நாவல்களை பாதியிலேயே விட்டிருக்கிறேன். அல்லது கடைசிப் பக்கத்திற்குச் சென்று பக்க எண்ணைக் கொண்டு இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என யோசித்திருக்கிறேன். ஆனால் கள்ளம் படிக்கும்போது நேர்மாறான அனுபவமே ஏற்பட்டது.




நாவலை முடித்துவிடக்கூடாது, அதன் ஒவ்வொரு சொல்லையும் மனதில், நாள்முழுவதும் தேக்கி அனுபவித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இது எப்படி ஆசிரியருக்கு சாத்தியமானது என தெரியவில்லை. மிகுந்த படைப்பூக்கத்துடன் எழுதியிருந்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். அதே வேளையில் வேறு ஒருவருக்கு வேறுமாதிரியான, எதிர்மறையாகத் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
முக்கிய பாத்திரமான‌ பரந்தாம ராஜூவின் பேச்சுகளும், உளறல்களும், போதையில் மயங்கும் காட்சிகளுமாக நிறைந்திருக்கிறது கள்ளம் நாவல். பெண்களின் கள்ளத்தை, நுண்ணுணர்வை, நேசத்தை, அகங்காரத்தை, மென்மையை இவ்வளவு அருகில் இருந்து எழுத முடியமா? தஞ்சை ப்ரகாஷ் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தன் பாட்டன், தன் அப்பா போல் கண்ணாடித் துண்டுகள் ஒட்டி வரையப்படும் தஞ்சாவூர் ஓவியங்களை தன் தொழிலாகக் கொண்ட பரந்தாம ராஜூவின் அகம் கொள்ளும் பார்வையை கதை முழுவதும் விரித்துச் செல்கிறார்.
முற்போக்கு எழுத்தாக மாறியிருக்கவேண்டிய கதை இது. கண்ணாடி ஒட்டி செய்யப்படும் ஓவியங்களும் அதன் கஷ்டங்களும், தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி சொல்லியிருந்தால் அதுதான் நடந்திருக்கும். மாறாக அவ்வேலை செய்பவனின் அகத்தை, அகம் கொள்ளும் பார்வையை, பரிதவிப்பை பேசுகிறார். கண்ணாடி ஒட்டும் வேலை எந்த கலைத்திறனையும் கொண்டதில்லை என்கிறார், இது வெறும் காப்பி அடித்தல், முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தபோது வந்த கலை, எந்த புதிய கலைத்திறமும் வெளிப்படாமல் அப்படியே காப்பியாகிறது என்கிறார். புதியவைகளை அதில் புகுத்தவேண்டும் என பிரியப்படுகிறார். அவர் அப்பா அதை ஏற்றுக் கொள்வதில்லை.
ராஜூ அப்பாவிடம் மனவருத்தம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். வேசைப் பெண்களுடன் சேருகிறார். வேசைப் பெண்கள் மேலுள்ள மோகம் எத்தனை அழகாக சொல்கிறார். அவர்களில் ஒருத்தியை அழைத்துக்கொண்டு சேரிக்குச் சென்று வாழ்கிறார். எல்லா சாதிப் பெண்களும் எந்த வித்தியாசமுமின்றி அவருடன் பழகுகிறார்க‌ள். அங்கிருக்கும் சிதிலமடைந்த ஒரு சுடலைமாடன் கோயில் சுவரில் சித்திரங்களை மீண்டும் வரைய ஆரம்பிக்கிறார்.
எல்லா பெண்களும் அவருடன் சேர்ந்திருக்கவும், அவருடன் பணியாற்றவும் ஆசைப்படுகிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி கோயில் வேலையை முடிக்கிறார். கற்பனையற்று ஒரே குடும்பத்தில் இந்தக் கலை நில்லாமல் எல்லோருக்கும் கொண்டு சென்று அவர்களின் கற்பனைகளை மேலும் விரிவாக்கச் செய்கிறார். ஆரம்பத்தில் வெறுத்த அவர் அப்பா ராஜூவின் திறமையைக் கண்டு இது சேரியில் இருக்க வேண்டியதில்லை, வா வெளியே என்கிறார். ஆனால் ராஜூ மறுத்துவிடுகிறார். வெளிநாட்டவர்களெல்லாம் வந்து பார்க்கும் அளவிற்கு உயர்கிறார். ஆனாலும் சேரியில் எளிய வாழ்வைத் தொடர்கிறார். அதன்பின் பெண்கள் அவர்களின் தினப்பிரச்சனைக‌ள் மற்றும் திருமணம் போன்றவைகளால் ஒவ்வொருவராக விலகிச் செல்கிறார்கள். கடைசியில் நிர்க்கதியான ராஜூ ஒருநாள் இரவில் சேரியை விட்டு வேறு ஊர் சென்றுவிடுகிறார்.
இக்கதையில் ப்ரகாஷ் இருவேறு எழுத்து பாணியாகச் சொல்லியிருக்கிறார். அவ்வளவு எளிதாக அதை வேறுபடுத்தி சொல்லிவிடமுடியாது. வலித்துச் சொல்கிறாரா அல்லது அப்படி அமைந்துவிட்டதா தெரியவில்லை. எழுத்துப் பிழைகள், பக்கப் பிழைகளைத் தாண்டி கள்ளம் நாவல் அதன் உன்னத இடத்தைத் தொட்டிருக்கிறது. இதில் பேசப்படும் பாலியல் வார்த்தைகளைப்போல் பிறிதொரு நாவலில் இல்லை என்று சொல்லலாம்.
பாபி, ஜாம்னா என்று பாலியல் பெண்களைப் பற்றி பேசுவதும் அவர்களுக்குள் இருக்கும் பொறாமைகளையும் அழகாகச் சொல்கிறார். அப்பாவிடம் காரியதரிசியாக இருப்பவளிடம் ராஜூ கொள்ளும் வெறுப்பு, அவரிடம் வேலைக்கு வரும் பெண்களிடம் ராஜூ காணும் இணக்கம், சேரிக்கு வந்தபின் ஜாம்னா மெல்ல தன்னை மாற்றிக்கொள்ளும் பாங்கு என்று எப்போதும் நாவல் உயர்ந்த க்ளாசிக் தளத்திலேயே செல்கிறது.
ராஜூவும் அவன் அப்பாவும் தவிர மற்றவர்கள் பெண்கள் மட்டுமே. அவர்களுடனான பாலியல், ஊடல், உடலுறவு என்று நாவல் இருந்தாலும், இதைவிட‌ மிகப்பெரிய புதிய உலகமும் சொல்லப்பட்டிருக்கிறது.

நன்றி: http://mathippurai.com/

No comments: