Friday, December 6, 2019

நாற்காலி - கி.ராஜநாராயணன் சிறுகதை வாசிப்பனுபவம்

நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.

ஒரு அலுவலகத்தில் பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பவர் மேலாளராக இருப்பார். வீட்டில் பெரிய படிப்பு படிப்பவர்களுக்கு நாற்காலிகள் இருக்கும். மிகப் பின்னாளில் தான் வீட்டில் வருபவர்களுக்கு நாற்காலிகளும், சோபாக்களும் போடப்பட்டன. முன்பு திணையிலும், திட்டுகளிலும், பாயிலும் அமர்ந்தவர்கள், நாற்காலிகள் வந்த போது அதில் அமர கூச்சப்பட்டார்கள். இன்றும் கிராமங்களில் ஒரே நீளமான பெஞ்ச் சாப்பாட்டு கடைகளிலும் டீக் கடைகளிலும் இருக்கின்றன. நான் எல்லோருக்கும் சமமானவன் இல்லை என்று உருவானபோதுதான் நாற்காலிகள் உருவாயின. இப்போது சுழல் நாற்காலிகள் மற்றொரு அதிகாரத்தின் நிலை. தன்னால் எங்கும் திரும்பமுடியும், நாற்காலியிலிலேயே நகர்ந்து செல்ல முடியும் என்பது மற்றவர்களிடமிருந்து உயர்த்தப்பட்ட நிலை தானே? சில அலுவலகங்களில் கைப்பிடி இல்லாத நாற்காலிகள் இருக்கும். அவை கடைநிலை ஆட்களுக்கானவை, அல்லது அலுவலத்தில் காத்திருப்பவர்களுக்கானவை.

எங்கள் வீட்டில் ரோஸ்உட் மரத்தில் செய்த அழகிய குமிழிகள் முதுகுபுறத்தில் கொண்ட இரு நாற்காலிகள் இருக்கின்றன. அவை எல்லோருக்கும் பிடித்தவை. நீண்டநேர உட்கார முடியாத அந்த நாற்காலிகளில் அமருபவர்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் என்கிற மாயை உண்டு. ப்ளாஸ்டிக் நாற்காலிகள் வந்துவிட்ட இன்னாளிலும் மரநாற்காலிகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? மதிப்பு என்பது அந்த நாற்காலிக்கா? அல்லது அதில் அமருபவருக்கா?
நாற்காலி என்று தலைப்புடைய ஒரு சிறுகதையை கி.ரா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கிபொதுவாக .ராவின் படைப்புகள் நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து முதலாளித்துவ காலமாற்றத்தை அதன் சிக்கல்களுடனும், அலைகழிப்புகளுடனும்,. மேல்கீழ் மாற்றங்களுடனும் சித்தரிப்பவை. நாற்காலி சிறுகதையும் அப்படிதான்.

நாற்காலி சிறுகதை சாமானிய மனிதர்களின் இல்லங்களில் நாற்காலிகள் நுழைந்த காலத்தை சித்தரிப்பவை. முக்காலியில் அமர்ந்து விழுந்த மனிதர்களை பார்த்து சிரித்த சிறுவர் சிறுமியர்கள் கொண்ட வீடு. அவர்கள் புதிதாக நாற்காலியை செய்யவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். எந்த மரத்தில் செய்யலாம் என்கிற பலமான விவாததிற்குபின் வேப்ப மரத்தில் செய்ய தீர்மானிக்கிறார்கள். அவர்களது மாமனார் என்றும் சம்பந்தி முனைப்பில் இரு நாற்காலிகள் செய்யப்படுகின்றன. ஒன்று இந்த வீட்டிலும் மற்றொன்றை அவரது வீட்டிலும் வைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் மாற்றி ஒருவர் அமர்ந்து மகிழ்கிறார்கள். ஒருநாள் ஒரு இழவு வீட்டில் நாற்காலி வேண்டும் என நடுஇரவில் கேட்டு பெற்றுச் செல்கிறார்கள். துக்க வீட்டில் சென்றபோது இறந்தவரை அந்நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். பிணம் சென்று, நாற்காலி வீட்டிற்கு வந்த போது யாரும் அமர முயற்சிசெய்யவில்லை. கொல்லையில் போட்டு 15 வாளி தண்ணீர் இறைத்து நன்றாக கழுவியப்பின் வீட்டில் கொண்டுவந்து போடுகிறார்கள். அப்போதும் யாரும் அமர பிரியப்படவில்லை. அமர்ந்தாலும் முனையிலேயே அமர்க்கிறார்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் நாற்காலியை அவர்கள் உட்கார எடுத்துப் போடுகிறார்கள். மீண்டும் சாவு வீட்டிலிருந்து வந்து கேட்டு எடுத்துச் செல்கிறார்கள். மீண்டும் கழுவல்.

ஒரு முறை மாமனார் விட்டிற்கு சென்றவன் அங்கு அந்த மற்றொரு நாற்காலி ஜம்மென்று இருப்பதை பார்த்துவிட்டு வருகிறான். அடுதத முறை துக்க வீட்டிலிருந்து நாற்காலி கேட்க வரும்போது அவன் அண்ணா பெத்தன்னா அது மாமனார் விட்டில் இருப்பதையும் எடுத்துக்கொள்ள கூறுகிறான். நாங்கள் கூறியதை கூறவேண்டாம் என்றும் கூறுகிறான். அதன் பின் யாரும் கேட்க வரவில்லை. மீண்டும் ஒரு முறை மாமனார் வீட்டிற்கு சென்றபோது அந்த நாற்காலியை அந்த காரியத்திற்கே வைத்துக் கொள்ள கூறி கொடுத்துவிட்டதை கூறினார். மகிழ்ச்சியுடன் வீடு திருப்பி பெத்தன்னாவிடம் கூற விரைகிறான். முடிவும் இப்படி எழுதுகிறார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப் பெத்தண்ணாவிடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.”

வெளியிலிருந்து வரும் சிலர் ஒரு குடும்பத்தில் தன் அதிகாரத்தை செலுத்துவதும், அதை மீற விடாமல் செய்வதில் ஆலாதியான இன்பதை சுவைப்பதுமாக இருப்பார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பிரயத்தனங்கள் இக்கதையின் நுண்அவதானிப்பு. மாமனார் என்னும் சம்பத்தியை பழிவாங்கியாகிவிட்டது, ஆனால் ராமலட்சுமணனாக இருந்த நாற்காலியில் ஒன்று தன்வீட்டிற்கு திரும்பவராமல் சென்றுவிட்டதை எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும். மற்றவரின் அதிகாரத்தை ஒழித்துகட்டிவிடலாம். ஆனால் தன் அதிகாரத்தை இழப்பது வலியன்றோ மனிதருக்கு.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
படிக்கத் தூண்டும் விமர்சனம்