Wednesday, February 25, 2015

குழந்தை உணவு

தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி குழந்தைகளின் டிவியில் உணவு விளம்பரங்கள் வரக்கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார். சட்டப்படி அப்படி இருக்கிறதா தெரியவில்லை, ஆனால் அவர் சொல்வது முற்றிலும் சரி என்று நினைக்கிறேன். குழந்தைகள் அந்தவயதில் அதிகம் பார்ப்பது, கேட்பதுமான விஷயங்கள்தான் அவர்கள் மனதில் ஆழப்பதிவாகின்றன என்று சொல்வார்கள். மற்ற‌ டிவியில் வரும் பர்கர், பீசா, நூடுஸ்கள் போன்ற விளம்பரங்கள் அவர்களை சாப்பிட தூண்டினாலும், குழந்தைகளுக்கான பிரத்தியேக டிவியில் இந்த விளம்பரங்கள் வரும்போது இன்னும் அதிகமாக‌ அவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளின் உணவு பிரச்சனை எல்லா வீடுகளிலும் இருக்கிறது. எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் இதை உண்பதில்லை அதை உண்பதில்லை என்று பெருமை படுவதை பற்றி ஒரு கிண்டல்கூட இருக்கிறது. வருத்தம் தானே படவேண்டும்? மாறாக பெருமை படுகிறார்கள். அவர்களே இதை ரசிக்கிறார்கள், தங்கள் குழந்தைகள் உடல் நலம் கெட்டு, ஆரோக்கியமற்ற குழந்தைகளாக வளர அவர்கள் பிரிய படுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Friday, February 20, 2015

ஏமாத்து


 பட்டினத்தார் என்னும் சினிமா டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு அந்தனர் தன் கோவில் பணிகளை முடித்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வேலைதேடி அவரிடம் கேட்கிறார். அவர் கேட்டநபர் இப்போது இல்லை என்றது, தன்னிடம் இருந்த தேங்காய் பழங்களை அவர் பசிக்கு கொடுத்துவிடுகிறார். கையில் எதுவும் இல்லாமல் வீட்டிற்கு வரும் அவரை அன்புடன் வரவேற்கிறார் அவர் மனைவி, வீட்டில் பொங்க ஒரு மணி அரிசிகூட கிடையாது என்கிறார். வாசலில் ஒரு இடையில் ஒரு உடைமட்டும் உடுத்தி மொட்டை தலையுடன், ருத்திராட்ச மாலைகள் ஆங்காங்கே தொங்க வரும் பண்டாரம் அவர் வீடு வாசல் வந்து பிட்சை கேட்டதும், அவர் செய்வதறியாது நின்றிருக்கும்போது மனைவி தன் தாலியை எடுத்துக் கொடுத்து விற்று வர சொல்கிறார். அப்படி செய்து அவருக்கு அன்னமிடுகிறார்கள். இப்படி ஒரு நடைமுறை முன்பு இருந்திருக்கிறது நம் நாட்டில். பல பஞ்சங்களைக் கண்டு, பசியால் வாடி பல‌ தலைமுறைகளைக் கடந்து வந்த நாம் இன்று அப்படி ஒரு காட்சி நடக்கவோ, பார்க்கவோ, கேட்கவோகூட முடியாது.
சாலையில் செல்லும்போது காவிஉடையணிந்த சாமியார்கள் யாராவது கைகாட்டினால் நிறுத்தாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஒரு முறையல்ல, பலமுறை நடந்திருக்கிறது. சாமியார் எல்லாம் ஏமாறுபவர்கள் என்ற் எண்ணம் எப்போதும் நம‌க்கு இருக்கிறது. சென்னையில் ஒரு கடையில் சாமான் வாங்கி இருசக்கர வாகனம் நோக்கி வரும்வழியில் வெள்ளைஉடை அணிந்து நெற்றியில் நாமம் தரித்து கண்களில் ஒளிதெரிய நின்ற ஒரு கிராமத்து நபர் ஒருவர் என்னை நிறுத்தி உங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கட்டுமா என்றார். முதலில் இது ஏமாத்து வேண்டாம் என்று தோன்றினாலும் சின்ன குறுகுறுப்பில் சிரித்தபடி நின்றேன். பேசியே என்னை மயக்கி 2000ரூ லவட்டிச் சென்றார்.

Wednesday, February 18, 2015

நாப்கின்கள்


கொச்சி நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பெண்கள் நாப்கின்கள் அணிந்துவருக்கிறார்களா என்பதை கண்டறிய சோதனைச் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அதற்கு காரணம் அதை பயன்படுத்தியபின் கழிவறையில் போட்டுவிடுவதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் சாக்கடையில் பிரச்சனை ஏற்பட்டுவிடுவதை தடுக்க வேண்டும் என‌ நிர்வாகம் நினைக்கிறது. அதற்காக பெண்கள் பயன்படுத்திய நாப்கின்களை திரும்ப தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என கட்டளையிட்டுள்ளது. ஆகவே அங்கு வேலைப் பார்க்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திரும்ப அவர்கள் பேகில், டிபன் பாக்சில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். இதை அறிந்த பெண்ணிய அமைப்புகள் அங்கு தொடர்ந்து நாப்கின்களை கொரியரில் அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் பொதுவில் நாப்கின்களை எடுத்து செல்வது போன்றவைகள் அசிங்கமாக பார்க்கபடுவது உண்டு. நாப்கின் பயன்படுத்தும் முறை கிராமத்தில் பெரிய அளவில் பரவவில்லை. கிராமங்களில் சில பெண்கள் பயன்படுத்தி அதை குப்பையில் போடும்போது அதைப் பார்த்தோ அல்லது யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் வீடு தேடிவந்து இப்படி குப்பையில் பொறுக்க முடியாமல் திட்டி செல்லும் பாட்டிகள் உண்டு.

Tuesday, February 17, 2015

போராட்ட குணம்


தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை யாராவது நம‌க்கு சொன்னால்தான் உண்டு. அதுவரை நமக்கு தெரியப்போவதில்லை.
தொலைக்காட்சி செய்தி சேனல்களில் சில குறிப்பிட சேனல்களை மட்டுமே தினம் நாம் கவனிக்கிறோம் என நினைக்கிறேன். அல்லது மற்றவைகளை முழுமையாக ஒரு அரைமணி நேர செய்திகளின் தொகுப்பை பார்ப்பதில்லை என தோன்றுகிறது. ஒரு நாள் சன், கலைஞர், ஜெயா டிவிகளை தவிர்த்து புதியதலைமுறை, தந்தி, ராஜ், ஜீ, போன்ற டிவி சேனல்களைப் பார்க்கும்போது எவ்வளவு விஷயங்களை தவற‌ விடுகிறோம் என்று தெரிகிறது. ஒரு இரண்டு மணிநேரம் தொடர்ந்து இந்த சேனல்களைப் பார்க்கும்போது அவைகள் கூறும் செய்திகளின் பரப்பு மேற்சொன்ன டிவிகளின் பர‌ப்பை விட மிக அதிகம். சன், கலைஞர், ஜெயா போன்ற டிவி சேனல்கள் தங்களின் கொள்கை/நிலைப்பாட்டை பரப்பும் ஊடகமாக மட்டுமே இருக்கின்றன அத்தோடு அவர்களின் வழக்கு நிலைகளை கூறாமல் மற்றவர்களின் வழக்கு செய்திகளை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக இருக்கும்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர், மின்சாரம், டாஸ்மார்க், கொசுக்கள், ஆற்றுமணல்/குவாரி கொள்ளை, ரியல் எஸ்டேட், கிரானைட்/மலைக் கொள்ளை, வட்டிகாரர்களின் கொள்ளை போன்ற என்ற பிரச்சனைகளைப் பற்றியும் இந்த மூன்று சேனல்கள் சொல்வதில்லை. ஆனால் உண்மையில் இவைகள்தாம் தமிழகத்தில் நிலவும் மிக நீண்ட நாளைய பிரச்சனைகள். இவைகளை தீர்க்காமல் எந்த பிரச்சனைகளைப் பற்றி பேசுவதும் மிகப் பெரிய தவறு என்று நினைக்கிறேன்.

Monday, February 16, 2015

யெஸ்.பாலபாரதியின் 'துலக்கம்'


ஆட்டிசம் என்பது ஒருவகை செயல்திறம் குறைபாடுள்ள நோய். அது மனநோயோ, மனவியாதியோ அல்ல. திடீரென தோன்றி திடீரென மறையும் நோய் வகை சேந்ததும் அல்ல. பல வகை காரணங்களால் பிறந்தக் குழந்தைக்கு 2 வயது முதலே தெரிய ஆரம்பிக்கும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் அந்த நோயால் ஏற்படும் பாதிப்புகளை சில நடைமுறைப் பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி, ஒரு ஆட்டிச குழந்தைக்கு இருக்கும் ஒரு பிரச்சனை மற்ற குழந்தைகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக சில செய்கைகளால் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். வேண்டாம் என்ப‌தை சில கண்களை சுருக்கி அல்லது மூடிக் கொள்வதை வைத்து புரிந்து கொள்ள வேண்டிடியிருக்கும்.
பொதுவாக இக்குழந்தைகளை இருவகைகளாக பிரிக்க முடியும் பேசும் குழந்தைகள், பேசாக் குழந்தைகள். பேசும் குழந்தைகள் அனைத்தையும் பேசிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. பேச்சுமூலம் அவர்கள் தங்கள் தேவைகளை வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அக்குழந்தைகளை பொதுஇடங்களில் பார்க்கும்போது எந்த வேறுபாடு இல்லாமல் நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் அந்த வளர்ச்சி பெறவில்லை. பொதுஇடத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்தால் நம் குழந்தைக்கும் ஓட்டிக்கொள்ளும் என்று பயப்படும் பெண்களை இருக்கிறார்கள்.

Friday, February 13, 2015

சோறுபோடும் கல்வி


செய்யும் வேலையை எப்போது நாம் கெளரவத்தோடு ஒப்பீடு செய்து கொள்கிறோம். இன்ன வேலை செய்தால் கெளரவம், இன்ன வேலை கெளரவமில்லை போன்று. அது கடைநிலை வேலை என்று இல்லை, எல்லா வேலைக்கும் பொருந்துகிறது. இன்றைய சூழலில் ஒருவர் அப்பா செய்த அதே சிறிய வியாபரத்தை தொடர்ந்தால் அவருக்கு கெளரவமான இடமில்லை. வேறு வேலைக்கு செல்ல தெரியாத, படிப்பால் இன்று எதுவும் செய்ய முடியாதவர் என்று நினைக்கப்படுவார்.
இன்று என்ன வேலை ஒருவர் செய்ய வேண்டும் என்பதை சுற்றி உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்கள் படித்துவிட்டு கம்யூட்டர் கம்பெனியில் வேலை செய்யவேண்டும். அதாவது ஒரு ஐடி துறை வேலையில் கைக்கு மாதம் ஆரம்பத்திலேயே 40000 பெறவேண்டும். அதுவும் கம்பெஸ் நேர்முக தேர்விலேயே தேர்தெடுக்கப்பட்டு படிப்பு முடிந்ததும் அந்த வேலைக்கு சென்றுவிட வேண்டும். அப்புறம் கொஞ்ச நாளில் அமெரிக்கா சென்று லட்சங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றாலும் இதை நோக்கித்தான் அவனது 9வது வகுப்பிலிருந்து அதற்கு படித்து தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இசையில், எழுத்தில், ஆசிரியராக, அறிவியலில் ஒரு துறையில் என்று செல்பவதில் ஆர்வத்தை செலுத்துபவர்கள் நடைமுறையை அறியாத மூடர்களாக கருதப்படுகிறார்கள்.

Thursday, February 12, 2015

வலதுபக்க‌த் திறப்பான்


நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் எல்லாமே ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். நாம் பயன்படுத்தும் பொருளை எளிதாக‌ கையால, எளிதாக‌ நகர்த்த, எளிதாக‌ தூக்க, எளிதாக‌ செயல்படவைக்க என்று எல்லாமே ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக நம் டிராயரை திறக்க, பீரோவை திறக்க, வீட்டு கதவை திறக்க, எல்லாமே நம் வலதுகை இயக்கும்படியாக வலப்பக்கம் அமைக்கப் பட்டிருக்கிறது. நம் வண்டியை இயக்க வலதுபக்கமாக உதைக்கும் ஸ்டார்டர், வலது கையில் ஆக்ஸிலேட்டர், வலது கைக்கு எளிதாக இடப்பக்கம் சட்டை பாக்கெட், சட்டை பட்டன் போட வலப்பக்கம் பட்டன். (ஆனால் சின்ன குழந்தைகளுக்கு இடப்பக்கம் இருக்கும் நாம் பயன்படுத்தும் வலக்கைக்காக‌.)
ஏன் ஒரு பாட்டிலின் மூடியை திறக்க மூட வலப்பக்கமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. உலகில் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் ஒரு 70-90% உள்ளார்கள். தீவிர இடக்கை இடக்கை உள்ளவர்கள் ஒரு பத்து சதவிகிதம் இருப்பார்கள். இருகைபழக்கம் உள்ளளவர்கள் மற்ற சதவிகிதத்தினர். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கானது. ஒருவகையில் இரக்கமற்ற குணமாகவும் இருக்கிறது.

Wednesday, February 11, 2015

குரலரசி எஸ்.ஜானகி


சின்ன வயதில் இசைப்பற்றியும், இளையராஜா, எஸ்.ஜானகிப் பற்றியும் தெரியாத நிலையில் ஒரு பாடல் கேட்டு என்னை அசரவைத்தது. அது தன் குழந்தையை காணச் செல்லும் தாயின் தவிப்பு சொல்லும் பாடல். மழைவருவது மயிலுக்கு தெரியும் என தொடங்கும் பாடல். ஒரு இனிமையான‌ குழைவுடன் தன் மகனை நினைத்துபாடும் பாடல் இவ்வளவு அழகாக பாடமுடியுமா என்று தோன்றியது. படம் ரிஷிமூலம், அதில் கேஆர் விஜயா தன் மகன் வரவை எல்லோரிடம் சொல்ல நினைப்பார் முடியாமல் பாடலாக பாடுவதாக இருக்கும். பாடலின் முதலில் வரும் இசை அந்த குதுகுலத்தை முழுவதும் சொல்லிவிடும். ஸ்லோமோசன், வேகமான மாறும் காட்சிகள் என்று மாறிமாறி வரும். ஆனால் இன்றளவில் அந்த காட்சி, இசையை தாண்டி அந்த தாயின் குரலில் இருக்கும் வேகமும், ஏக்கமும், குழைவும்தான் சிறந்ததாகப் படுகிறது. அந்த பாடலை எஸ்.ஜானகி பாடியிருக்கிறார் என்று அறிந்தது அப்போதுதான். அத்தோடு அதிக பாடல்களை அவர் பாடியவரல்ல என்றும் தெரிந்தது.
அதன்பின் எல்லா பாடல்களிலும் ஜான்கியின் குரலை தேடி சட்டென கண்டுபிடிக்க முடிந்துவிட்டது. ஜானகியிடன் இருக்கும் பாடல்கள் மீதான ஆர்ப்பரிப்பு ஆச்சரியம் அளிப்பது. தமிழ் தவிர மற்ற மொழிகளை எளிதாக கற்றுவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தமிழில் எந்த உச்சரிப்பும் தவறாக செய்ததில்லை. அதேவேளையில் எவ்வளவு மென்மையுடனும் தேவையான ஏற்ற இறக்கத்துடன் குழைவுடன் பாடியிருப்பார். மலையாளம், கன்னட மொழியாளர்கள் மிகச்சரியாக உச்சரிப்பதாக கூறப்பட்டிருக்கிறார். இதில் மலையாளம் உச்சரிப்பு மற்ற மொழிக்காரர்களுக்கு மிக கடினம் ஆனால் மிக லாவகமாக பாடியிருப்பார்.

Tuesday, February 10, 2015

கல்வி 'உடற்பயிற்சிக்' கூடம்

என் தங்கையின் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர ஒரு நாள் துணைக்கு செல்ல வேண்டியிருந்தது. எல்கேஜி படித்துக்கொண்டிருந்த அவளைப் போன்ற மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் செய்த அட்டூலியங்கள் அன்று தாங்கவே முடியவில்லை. ஐந்து ஆறு வருடங்கள் இருக்கலாம். அது பரிச்சை நேரம் என நினைக்கிறேன். இத ஏண்டி எழுதல, நா அப்பவே சொன்னேனே, ஏம் மிஸ் நீங்க சொல்லக்கூடாதா, அவளுக்கு தெரியும் இதெல்லாம், பரிச்சையில‌ போயி எழுதாம விட்டுடு வந்திருக்காலே' என்று தாய் புலம்பிக்கொண்டிருந்தார். அந்த மிஸ் நான் சொல்லக்கூடாதுல்ல, அவ விளையாட்டு புத்தியாவே இருக்கா, நா என்ன பண்ணட்டும் என்றார்.
இங்க பாருங்க அவன் இதெல்லாம் எழுதியிருக்கான் நீங்க மார்க் போடவேயில்ல என்று மற்றொரு தாய் அந்த மிஸ்ஸிடம் கூறிக்கொண்டிருந்தாள். ஆனால் நான் அதற்குள் கடந்து வந்துவிட்டேன். அந்த மிஸ் பெண்ணை சுற்றி பத்துபேர் நின்று புலம்பும் அளவிற்கு அது போர்ட் எக்ஸாமோ அல்லது பெரிய பரிச்சையோகூட கிடையாது. வெறும் எல்கேஜி அரையாண்டோ, காலாண்டோ.
ஆனால் இன்று சற்று மாறியிருக்கிறது என நினைக்கிறேன். என் மகன் படிக்கும் பள்ளியில் இன்று இந்த அளவு இல்லை. குழந்தைகளுக்கு படிப்பும், மார்க்கும் முக்கியமே இல்லை. ஆனால் குறிப்பாக இந்த அம்மாக்கள் தான் தன் பிள்ளை பிறந்து இரண்டுவருடத்திற்குபின் பள்ளிப் படிப்பில் ஓட்டபந்தயம் போல ஓடவேண்டும் என நினைக்கிறார்கள். தான் சரியாக படிக்கவில்லை, தான் பட்ட கஷ்டம் தன்பிள்ளை பெறக்கூடாது என்று சுயசிந்தனை வெளிப்பாடுகள் வேறு அங்கு வந்திருக்கும் மற்ற அம்மாக்களிடம் வெளிப்படும்.

Monday, February 9, 2015

ஆர் யூ டமிலியன்

இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் கொஞ்சம் திகைத்து எஸ் என்றேன். ஒரு கடையில் ரீசார்ச் செய்துவிட்டு என் ஊரில் உள்ள ஒருவருக்கு வழிச் சொல்லிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் சத்தம்போட்டு சொல்ல வேண்டியிருந்ததால் ரோட்டில் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். பின் நிறுத்தியிருந்த வண்டியை எடுக்க வரும்போது வண்டி பக்கத்தில் நின்றிருந்த அந்த நபர் 'ஆர் யூ டமிலியன்' என்றார். தொப்பி அணிந்து சட்டை இன் செய்யப்பட்ட பேண்ட் அணிந்திருந்தார். மாநிறம். 'எஸ்' என்றது ஒரு சிரிப்பு சிரித்தார். எதற்காக கேட்கிறார். ஒரு வேளை தமிழ்நாட்டிற்கு வந்தவராக இருக்கலாம். அல்லது தமிழ் நண்பர்களுடன் பழகியதில் அவருக்கு தமிழ் வார்த்தைகள் தெரிந்ததால் கேட்டிருக்கலாம். அவரிடம் பேச்சை தொடர்வதற்கு ஒரு சினேக சிரிப்புடன் 'அன்டு யூ' என்றேன்.

'அயம் ஆஸ்ஸோ டமிலியன்' என்றார். சட்டென அதிர்ச்சியில் சாவியை சொருக போன நான் திரும்பி பார்த்தேன். பல தலைமுறைக்கு முன்பே வந்துவிட்ட சில தமிழர்கள் இங்கு சில பகுதிகளில் இருக்கிறார்கள். தமிழ் எழுதபடிக்க தெரியாது, தமிழ கொச்சையாகத்தான் பேசுவார்கள் அவர்கள். அவர்களில் ஒருவராக இருக்கலாம். 'தென் ஒய் ஆர் யூ ஸ்பீக் இன் இங்கிலீஸ்', என்றேன். நோ நோ அயம் ரிடர்ட்டு 'எதோ' ஆபிசர், வீ ஸ்டேயிடு இயர் ஃபொர் சோ மெனி இயர்ஸ், ஐ அன்ட் மைய் ஒயிப்...' தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அது பொதுவாக தன், குடும்ப, வேலை விஷயமாகவே இருந்தது. உங்களுக்கு தமிழ் தெரியாதா? என்றேன். இல்ல தெரியும். நாங்க பிறந்தது எல்லாம் தமிழ்நாடுதான். ஊருல ஆட்களேல்லாம் இருக்காங்க. நாங்க தான் அவ்வளவாக் போறதில்ல. அக்சுவலி இ ஹடு... என்று சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார். இப்போது யோசித்து பார்க்கும்போது அவர் தமிழில் சொன்ன வார்த்தைகள் மட்டும் நினைவில் இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்ன அனைத்தும் நான் கவனிக்கவே இல்லை.

நான் முழுமையாக தமிழில் பேசியதும் வேறுவழியில்லாமல் தமிழில் பேசினார். சில வாக்கியங்களை ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் தொடர்ந்தார். அவருக்கு தமிழ் ஆங்கிலம் தவிர இந்தி, மராட்டி நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தமிழ் பேசும்போது ஏதோ சங்கடமாக உணர்கிறார். ஆங்கிலத்தை தமிழர்களிடம் பேசும்போது அவர்கள் அதை வாழ்வின் உயர்ந்த படி நிலையை குறிப்பதாக நினைக்கிறார்கள்.

முன்பு சொன்ன நபரிடம் ஒரு பதினைந்து நிமிடம் பேசியிருப்பேன். சர்நேம் இங்க பிரச்சனை யாயிற்றே எப்படி சமாளிக்கிறீர்கள் என்றேன். சர்நேம் என்பதை தென் இந்தியா தாண்டியதும் முக்கியமானதாக அது இருப்பதை பார்க்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு சர்நேம் உண்டு. அது குடுப்ப பெயர், சாதிப் பெயர், வழிவந்தவர்களின் பெயர், ஊரின் பெயர் (சில தெலுகு குடும்பங்கள் உண்டு) இவற்றில் எதாவது ஒன்றாக இருக்கும். அது இல்லாமல் ஒருவரை அடையாளம் படுத்த முடியாது.

Friday, February 6, 2015

மாசுபடும் நிலங்கள்


நான் கெமிஸ்ட்ரி முடித்ததும் காங்கேயம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தவிட்டு எண்ணெய் ஆலையில் கெமிஸ்டாக வேலைக்கு சேர்ந்தேன். மிக வளமையான கிராமம். அழகான வயல்கள், பார்க்க கடினமானவர்களாக இருந்தாலும் மென்மையாகப் பேசும் மனிதர்கள். கோவை போகும் சாலையில் அமைந்திருந்தது அந்த தொழிற்சாலை. மதிய ஷிப்ட் இருக்கும் நாட்களில் காலை நேர நடைக்கு செல்வது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆள் ஆரவம் இல்லாத அந்த ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பதுபோல் காலைக்கு எல்லோரும் வயல் வேலைக்கு சென்றிருப்பார்கள். அமைதியும், மதிய வெய்யிலும், குளிர்ந்த காற்றும் அத்தனை  இனிமையாக இருக்கும். தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில கவுண்டர் வீடுகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட வாடகைக்கு அந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மக்கள் வருவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுன் இருந்தார்கள்.
இந்த தொழிற்சாலையால் அவர்கள் நிலங்கள் மாசுபடுகின்றன, மலடாகின்ற என்று அங்கிருக்கும் மக்களுக்கு தெரிந்திருக்க வில்லை. அத்தோடு அதில் பணிபுரிந்தவர்களுக்கே அது பற்றி தெரிந்திருக்காது.
சுற்றியுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் ஒரு நபர் வந்திருந்தார். அப்படி அடிக்கடி வருபவர்தான். தான் ஏர் உழும்போது இந்த தொழிற்சாலையிலிருந்து வரும் தூசிகள் என் கண்ணை அடைக்கிறது அதனால் சரியாக உழமுடியவில்லை என்றும், அத்தோடு மாட்டிற்கு அந்த தவிட்டு தூள் விழுந்து மாடுகளும் திணறுவதாக தெரிவித்தார். அதை ஒரு வேடிக்கையாகதான் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்களும் சிரித்துக் கொண்டிருந்தோம். அடுத்து நாள் அது பற்றி உயர் அதிகாரி ஒருவரிடம் இதைப்பற்றி தெரிவித்த‌போது அவரும் மென்மையாக சிரித்துவிட்டு கொஞ்ச நாளில் உழமுடியாது நிலமெல்லாம் மலடாயிடும் அப்ப சொல்லமாட்டர் என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

Wednesday, February 4, 2015

ஜெயமோகனின் காடு


 காமத்திற்கு தேவை தனிமை. உடலும் மனமும் தனிமையில் இருக்கும்போது காமம் விழித்துக் கொள்கிறது. காமமும் காம எண்ணங்களும் தனிமையின் போதே உருக்கொள்கின்றன. காடும் ஒருவகை தனிமைதான். காட்டை ஒவ்வொரு அங்குல‌கமாக உணர்கையில் தனிமையும் அதன் விரியத்தையும் பார்த்தபடி இருப்போம்.
நான் படிக்கும்காலத்தில் என் ஊரில் இருக்கும் ஒரு ரயில் தண்டவாளத்தை தாண்டி படிப்பதற்க்காக‌ செல்லும் ஒரு ஒற்றைப் பாதையில் தாண்டி காட்டையும் அதன் தனிமையை கண்டிருக்கிறேன். அது பெரிய காடு அல்ல ஆனால் ஒவ்வொரு இடமும் மர, செடிகளின் இருப்பும் அடுத்த நாளில் காணமுடிந்ததில்லை. தினமும் மாறிக்கொண்டே இருப்பதுபோன்ற ஒரு பிரம்மை. பெரிய மரங்களையும் அவற்றின் தனிமையையும் காணும்போது அப்போது ஏற்படும் வாழ்வு குறித்த அச்சங்களை, கேள்விகளை எண்ணாமல் இருக்க முடிந்ததில்லை. அம்மரங்களின் கீழே சிவப்புநிற இதுவரை காணாத‌ பல வண்டுகள், பூச்சிகள் இருக்கும். அவைகள் எந்நேரமும் முயங்கிகழிப்பதாக தோன்றும். தினமும் அவைகளை அப்படிதான் கண்டேன். பூச்சிகள், வண்டுகள் குறைந்த மரமாக தேடி அமர்ந்துக் கொள்வேன். படிப்பதைவிட பாதிநேரம் அவைகளின் முயக்கங்களை கவனித்தபடி இருந்திருக்கிறேன். ஆம், காட்டில் தன் எதிரிகளை வெல்வது அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வது, உணவுதேடுவது, தன் இனத்தைதேடி முயங்குவது இதைத் தவிர வேறு எதுவும் காணமுடியாது.

Tuesday, February 3, 2015

எழுத்தாளனாக‌‌ பிரபலமடைய வழிகள்


எழுதுவதனால் மட்டும் எழுத்தாளன் என்று யாரும் ஒத்துக்கொள்வதில்லை. பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொல்லிக்கொண்டாலும் யாரும் நின்று ஒரு விநாடி பார்ப்பதுகூட இல்லை. சிலர் பத்திர எழுத்தாளர் என்று நினைத்து அடமான வீட்டை எப்படி மீட்பது என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். வேறுசிலர் ஏதோ அரசாங்க அலுவலகர் என நினைத்து எந்த டிபார்ட்மெண்ட் என்கிறார்கள்.
அந்த‌ எழுத்துக்களுக்குள் என்ன ஓளிந்து இருக்கிறதோ தெரியவில்லை எழுத்தாளன் என்றால் மு.வ. என்ற இரண்டு எழுத்துகளை நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மக்கள். அதன் விரிவாக்கம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதுவும் கெட்ட வார்த்தையின் சுருக்கம்போல் இருப்பதால் எழுத்தாளன் யார் என்ற கேள்விக்கு உடனே சொல்லிவிடுகிறார்கள் போலும். திருவள்ளுவன், கம்பன் என்று பழமையான பெயர்கள் தான் எழுத்தாளனாக இருக்கமுடியும் என்று நினைத்திருப்பதன் விளைவால் மு.வ.வையும் டக்கென்று சொல்லிவிடுகிறார்கள் என்று தெரிகிறது. சிலர் பரவாயில்லை கல்கி, புதுமைபித்தன் என்கிறார்கள். கருப்புவெள்ளையில் ஒடுங்கிய முகத்தோடும், குச்சியான உடலோடும் கண்டுவிட்டு அவர்களை எழுத்தாளனாக இருப்பார்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். வண்ணப் புகைப்படத்துடன் ஒருவரை எழுத்தாளன் என்று காண்பித்தால், மேல‌ன்னம் ஒட்ட அதிர்ச்சியோடு திரும்பி பார்ப்பார்கள், அவர் நடிகராக தான் இருக்கலாம் என்பார்கள்.

Monday, February 2, 2015

ஒருமாத முடிவில்


வருடம் தொடங்கி ஒரு மாதம் அதற்குள் கடந்துவிட்டது. அத்தோடு நான் ப்ளாக்கில் எழுத தொடங்கியும் ஒரு மாதம் முடிந்துவிட்டது. சனி, ஞாயிறுகளைத் தவிர மற்ற நாட்களில் எழுதியிருக்கிறேன். இணையம் பெரிய அளவில் பயிற்சிக்கு இடம் அளிக்கிறது நமக்கு. இணையத்தில் எழுதுவதால் தொடர்ச்சியாக படிக்கிறார்கள். இது பத்திரிக்கையில், தினச‌ரி பேப்பரில்கூட சாத்தியமே இல்லை. சராசரியாக 50 பேர் தொடர்ந்து படித்துவருகிறார்கள். தனி மெயிலில் உள்டப்பியில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இது உடனுக்குடன் நடக்கிறது. இதுவும் நிச்சயம் அச்சு இதழில் சாத்தியமில்லை.
ஒரு மாதத்தை முழுவதும் எழுதி நிறைவு செய்வேன் என நான் நினைக்கவில்லை. சில கட்டுரைகள் இரண்டு நாள் முந்தி எழுதியது ஆனால் பல கட்டுரைகள் அன்று காலை வந்துதான் எழுதியுள்ளேன். எழுதுவதால் ஏற்படும் நிறைவை எழுத்தில் நிச்சயம் சொல்லமுடியாது. அந்த மனநிறைவு அன்றைய நாள் முழுவதும் தொடர்வதும் அடுத்தநாள் எழுத வேண்டியவைகளை நினைக்கவும் ஆரம்பித்துவிடுகிறது.