காமத்திற்கு தேவை தனிமை. உடலும் மனமும் தனிமையில் இருக்கும்போது
காமம் விழித்துக் கொள்கிறது. காமமும் காம எண்ணங்களும் தனிமையின் போதே உருக்கொள்கின்றன. காடும்
ஒருவகை தனிமைதான். காட்டை ஒவ்வொரு அங்குலகமாக உணர்கையில் தனிமையும் அதன் விரியத்தையும்
பார்த்தபடி இருப்போம்.
நான் படிக்கும்காலத்தில் என் ஊரில் இருக்கும் ஒரு ரயில்
தண்டவாளத்தை தாண்டி படிப்பதற்க்காக செல்லும் ஒரு ஒற்றைப் பாதையில் தாண்டி காட்டையும் அதன் தனிமையை
கண்டிருக்கிறேன். அது பெரிய காடு அல்ல ஆனால் ஒவ்வொரு இடமும் மர, செடிகளின் இருப்பும் அடுத்த நாளில் காணமுடிந்ததில்லை.
தினமும் மாறிக்கொண்டே இருப்பதுபோன்ற ஒரு பிரம்மை. பெரிய மரங்களையும் அவற்றின் தனிமையையும் காணும்போது அப்போது ஏற்படும் வாழ்வு குறித்த அச்சங்களை, கேள்விகளை எண்ணாமல் இருக்க முடிந்ததில்லை. அம்மரங்களின்
கீழே சிவப்புநிற இதுவரை காணாத பல வண்டுகள், பூச்சிகள் இருக்கும். அவைகள் எந்நேரமும் முயங்கிகழிப்பதாக தோன்றும். தினமும் அவைகளை அப்படிதான் கண்டேன். பூச்சிகள், வண்டுகள் குறைந்த மரமாக தேடி அமர்ந்துக்
கொள்வேன். படிப்பதைவிட பாதிநேரம் அவைகளின் முயக்கங்களை கவனித்தபடி இருந்திருக்கிறேன்.
ஆம், காட்டில் தன் எதிரிகளை வெல்வது அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வது, உணவுதேடுவது, தன் இனத்தைதேடி முயங்குவது இதைத் தவிர
வேறு எதுவும் காணமுடியாது.
காடு எப்போது வசீகரிப்பதற்கு காரணம் அதில் எதாவது விலங்கு
நம்மை தாக்கலாம் என்கிற எண்ணம், அதில் வழிதவறிப்
போய்விடுவோம் என்கிற பதற்றம், என்று நிறைய
சொல்லலாம். அதனால் காட்டின்
அமைதியும் தனிமையும் நம்மை நிலைக் கொள்ளவைப்பதில்லை. நம் சிந்தனைகளை முழுவதும் அது
தன் பக்கமே வைத்திருக்கிறது. ஆகவே ஒவ்வொரு விநாடியும் உயிர்ப்புடன், அதீத விழிப்புடன் நம் மனதில் நிறைந்திருக்கிறது.
காட்டிற்கு சென்றுவந்த அந்த நாள் முழுவதும் நிறைந்திருப்பதை நாம் உணரமுடிகிறது.
ஜெயமோகன் எழுதிய காடு நாவலும் படித்தபின் மனிதில் முழுவதும்
நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் பேசும் எதாவது ஒரு பேச்சாவது நம்மனதில் முக்கியமானதாகப்
படுகிறது. காடான இதிலும் காமமும் தன்னை காத்தலும் மட்டுமே வருகிறது. ஒவ்வொரு பாத்திரமும்
காமத்தை நேசிக்கிறது. அவர்களின் மனம் காமம் அன்றி வேறு வேலை செய்வதில்லை. அவர்கள் நகர
மக்களை அழுகல்களாகவும், சாக்கடை புளுக்களாகவுமே பார்க்கிறார்கள்.
எல்லா பாத்திரங்களும் காமத்தையே பார்க்கின்றன. கிரியின்
காமம், வேணியின் காமம், மாமியின் கண்டன் மீதான காமம், மாமாவின் காமம், சினேகம்மையின் அதீத காமம் என்று எல்லா
இடத்திலும் காமம் நாவல் முழுவதும் நிறைந்து இருக்கிறது. ஆனால் குட்டப்பனின் வாழ்க்கைக் குறித்த
பேச்சுக்கள், அய்யரின் சித்தாந்தப் பேச்சுகள், நாடாரின் வாழ்க்கைப் பார்வை, குரிசுவின் தன் மதம், கடவுள் குறித்த பார்வைகள், நீலியின் காதல் பேச்சுக்கள், என்று வேறுஒரு பக்கமும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.
கதாநாயகனான கிரி இதையெல்லாம் கேட்டு நாவல் முழுவதும் வாழ்ந்து
திரிகிறான். கவிஞனாக, காட்டை ரசிக்கும் கலைஞனாக, தத்துவங்களை கேட்டு வளரும் பதின்பருவத்து
கிரி கடைசியில் வாழ்வில் தோற்றவனாகத்தான் மாறுகிறான். தான் நினைத்த காதலி, லெளகீக வெற்றி, கவிஞனாக என எதையுமே அவன் அடைய முடியவில்லை.
தன் மனைவி வெறுக்கும் சுருட்டை தன் கடைசிகாலத்தில் ஊதித்தள்ளி வெறுப்புக்கு ஆளாகிறான்.
கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில்
அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில்
பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை.
வெற்றியடைய வேண்டிய தன் தெளிவான பார்வை உடையவனாக வரும் கிரிக்கு
தோல்வி ஏன் கிடைக்கிறது? தோல்வியடைந்த
42 வயது கிரி அய்யரை ஒரு இடத்தில்
சந்திக்கும்போது அய்யர் கூறுவார் உன்னை எல்லோரும் சீராட்டவேண்டும் என நினைக்கிறாய்
அதுதான் காரணம் என்று. பருவத்தில்
உயர்ந்த மனிதர்களாக நம்மை நினைப்பதும் சராசரியாக சாதாரனமானவனாக பின்னால் சரியும்போது
ஏற்படும் அந்த உள்ளச்சரிவுதான் அது என நினைக்கும்போது தான் அந்த சரிவு சரியே என படுகிறது.
சுற்றி வரும் பாத்திரங்களில் கிரியையும்விட பல சின்ன பாத்திரங்கள்
அதிக வீரியமாக சொல்லப்பட்டிருக்கிறது. குட்டப்பன், அய்யர், நீலி, சினேகம்மை, அம்மா, மாமி, போன்றவர்களைச் சொல்லலாம். ஆரம்ப பகுதிகளில் முழுவதும் குட்டப்பனே
ஆக்கிரமித்திருக்கிறான்.
முதலில் காட்டை விரும்பாத கிரி கொஞ்ச கொஞ்சமாக அதனுடன் வாழக்கற்றுக் கொள்கிறான். அதன் வீரியம், இரக்கமின்மை எல்லாமே வசீகரிக்கிறது. குட்டப்பன்
மூலமாக காட்டையும் யானைகளையும், மிளாக்களையும்
பற்றி அறிந்துக் கொள்கிறான். இதில் காட்டையும், யானைகளைப் பற்றி சொன்னதுபோல யாரும் நுணுக்கமாக சொன்னதில்லை.
எந்த கதாபாத்திரத்தையும் ஜெ. அதிகமாக வர்ணிக்கவே இல்லை.
தமிழக கேரள காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடைகள் எப்படி இருக்கும் எனபதைப்
பற்றி வாசகர்களுக்கு, அதுவும் சராசரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு, அறிய தரவேயில்லை. ஆனால் பாத்திரங்களின்
வாயிலாக அவர்கள் பேசும் தமிழ், மலையாள கொச்சை பாசைகளின் மூலமாக வாசகர்கள் கற்பனையாமல்
மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.
அம்பிகா அக்கா, மாமி இருவரை மட்டுமே அவர்கள் உடைகளைப்
பற்றிய வர்ணனைகளை தருகிறார். நாவல் முழுவதும் வரும் மலையத்தியான நீலியின் உடைகள் எப்படி
பட்டவை, அம்பிகா அக்கா மாதிரி முண்டு அணிந்திருக்கிறாரா, மேலே ஜம்பர் அணிந்திருக்கிறாரா என்கிற விவரங்கள் இல்லை. அதுவே நம்மை
நீலியைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள ஆவலை தூண்டுகிறது.
கிரியின் அப்பா பற்றி அதிகம் சொல்லப்படவில்லை. ஆனால் டே..ய்
என்று அழைத்துக் கொண்டு இருக்கும் அம்மா ஒரு கட்டத்தில் கிரீ என்று விழிப்பதை ஒரு நுண்ணிய
அவதானிப்பால் அவர் வைக்கும் பார்வை ஆச்சரியப் படவைக்கிறது. யானை, மிளா போல மற்றொன்று காஞ்சிரமரம், அதைப்பற்றிய
வர்ணனைகளும், அதன் பிண்ணனிக் கதைகளும் அதன் கசப்பு போல
உள்நாக்கில் படிந்துவிடுகிறது.
மீண்டும் படிக்கும்போது வேறு புதியவைகள் நம் மனதில் படியக்கூடும்.
அதற்காகவேணும் ஒரு முறை இந்த காட்டிற்கு சென்று வரவேண்டும்.
1 comment:
oh
Post a Comment