Tuesday, February 17, 2015

போராட்ட குணம்


தமிழகத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை யாராவது நம‌க்கு சொன்னால்தான் உண்டு. அதுவரை நமக்கு தெரியப்போவதில்லை.
தொலைக்காட்சி செய்தி சேனல்களில் சில குறிப்பிட சேனல்களை மட்டுமே தினம் நாம் கவனிக்கிறோம் என நினைக்கிறேன். அல்லது மற்றவைகளை முழுமையாக ஒரு அரைமணி நேர செய்திகளின் தொகுப்பை பார்ப்பதில்லை என தோன்றுகிறது. ஒரு நாள் சன், கலைஞர், ஜெயா டிவிகளை தவிர்த்து புதியதலைமுறை, தந்தி, ராஜ், ஜீ, போன்ற டிவி சேனல்களைப் பார்க்கும்போது எவ்வளவு விஷயங்களை தவற‌ விடுகிறோம் என்று தெரிகிறது. ஒரு இரண்டு மணிநேரம் தொடர்ந்து இந்த சேனல்களைப் பார்க்கும்போது அவைகள் கூறும் செய்திகளின் பரப்பு மேற்சொன்ன டிவிகளின் பர‌ப்பை விட மிக அதிகம். சன், கலைஞர், ஜெயா போன்ற டிவி சேனல்கள் தங்களின் கொள்கை/நிலைப்பாட்டை பரப்பும் ஊடகமாக மட்டுமே இருக்கின்றன அத்தோடு அவர்களின் வழக்கு நிலைகளை கூறாமல் மற்றவர்களின் வழக்கு செய்திகளை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக இருக்கும்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர், மின்சாரம், டாஸ்மார்க், கொசுக்கள், ஆற்றுமணல்/குவாரி கொள்ளை, ரியல் எஸ்டேட், கிரானைட்/மலைக் கொள்ளை, வட்டிகாரர்களின் கொள்ளை போன்ற என்ற பிரச்சனைகளைப் பற்றியும் இந்த மூன்று சேனல்கள் சொல்வதில்லை. ஆனால் உண்மையில் இவைகள்தாம் தமிழகத்தில் நிலவும் மிக நீண்ட நாளைய பிரச்சனைகள். இவைகளை தீர்க்காமல் எந்த பிரச்சனைகளைப் பற்றி பேசுவதும் மிகப் பெரிய தவறு என்று நினைக்கிறேன்.
இந்த மூன்று சேனல்களை தவிர்த்து மற்ற செய்திச் சேனல்களை பார்க்கும்போது பெரும் அவலத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளமுடியும். தொடர்ந்து மூன்றுமாதம் தண்ணீர் வராமல் இருக்கும் ஊர். வருடக்கணக்கில் சாக்கடைகள் அள்ளபடாமல், குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கும் ஊர்கள். பஸ் வசதி இல்லாத, கொசுக்கள், புதிய மர்மநோய் தாக்கிய ஊர்கள் என்று தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதை கவனிக்கும் மற்ற மக்களோ, அரசியல்வாதிகளோ இதை ஒரு பொருட்டாக நினைப்பதுபோல தெரியவில்லை.
சென்னையில் நான் இருந்தபோது தண்ணீர் வராமல் இருக்கும் நாட்களில் மக்கள் எந்த எதிர்வினையையும் காட்டாமல் இருந்தது இப்போது நினைக்க முடிகிறது. நாலு ஐந்து நாட்களுக்கு மேல் போனது எங்கள் தெருவில் இருந்த கவுன்சிலரை சிலர் பார்க்கச் செல்வார்கள். அதுகூட நான் வரமாட்டேன், இந்தமுறை நீதான் போகவேண்டும் என்று சில வழிமுறைகள் இருக்கும். அவரிடம் சொன்னது சில நாட்கள் தண்ணீர் வரும் மீண்டும் பழைய கதைதான்.
தில்லியில் இருந்தபோது ஒரு நாள் தண்ணீர் வரவில்லை என்றோலோ, மின்சாரம் இல்லை என்றாலோ மக்கள் யாரையும் கேட்காமல் போராட ஆரம்பித்துவிடுவார்கள். மகாராஷ்டிராவின் புனேக்கு வந்தபின் அதன் வீரியத்தை இன்னும் கவனித்திருக்கிறேன். இந்த பிரச்சனை ஒரு நாள்கூட தொடரவிடமாட்டார்கள். உடனே சென்று சம்பந்தப் பட்ட அதிகாரியின் முகத்தில் கரியையும், இங்கையும் பூசிவிட்டு வருவார்கள். அது உடனே செய்திதாளிலும், டிவிசேனலிலும் வந்துவிடும். எந்த அதிகாரியும் இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க பயப்படுவார். இந்த இரண்டும் மிகச் சரியாக நடந்துக் கொண்டிருக்கும். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா வரவில்லை/தடுக்கப்பட்டது என்றால் உடனே மற்ற மாநிலத்திற்கோ, போராடவோ ஏன் தற்கொலை செய்து கொள்ளகூட நினைக்கிறார்கள்.
இதை அன்னா ஹசாரே போராட வந்தபோது காணமுடிந்தது. இந்தியாவில் எல்லா மக்களும் அவர் சொன்ன பிரச்சனைகள் குறித்து பேசவும், வீதியில் இறங்கி போராடவும் தலைப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் பெரிய அலைகள் எதுவும் ஏற்படவில்லை.
நான் இதை தொடங்கி வைக்கிறேன், நான் இதை ஆரம்பிக்கிறேன் என்ற நினைப்பு எதுவும் இல்லாமல், அதுவாக சரியாகும் என்கிற நினைப்பும் இல்லாமல் உடனே அத‌ற்கு எதிர்வினையாற்றுவதைதான் இந்தியா முழுவதும் காணமுடிகிறது. அனைத்தையும் அரசுதான் செய்யவேண்டும் என்கிற நினைப்பு தமிழகமக்களிடம் உண்டு.
எந்த பிரச்சனையும் தனக்கு சம்பந்தமில்லை என நினைக்கிறார்கள். சென்னையில் ஒரு வயதானவரை ஒரு பைக்கில் வந்த நபர் இடித்து தள்ளியபோது, சுற்றியிருந்த மக்களிடம் நான் போலீஸ் என்னை யாரும் கேட்க முடியாது என்றார் அந்த நபர். அவர் காவலர் உடை அணிந்திருக்கவில்லை. ஐடி கார்டு போன்ற எதுவும் அவர் காட்டவில்லை. பயந்து மக்கள் விலகி சென்றார்கள். நானும் மிக சில நபர்கள் மட்டும் (4பேர் இருக்கலாம்) கொஞ்சம் குரல் உயர்த்தி பேசி அவரை மருத்துவமனை அழைத்து செல்லவைத்தோம். பார்த்துக்கொண்டே சென்றார்களே தவிர நின்று ஒரு மனிதர்கூட கேட்கவில்லை. இன்றும் ஆச்சரியம்தான். கொஞ்சம் வேகமாக தாறுமாறாக ஓட்டிய‌ ஒரு சின்ன லாரியை மடக்கி முன்னால் ஒரு வண்டியை நிறுத்தி கவனமாக செல்லவேண்டும் என அந்த ஓட்டுனரை மிரட்டிக்கொண்டிருந்தது ஒரு 20பேர் கொண்ட‌ கும்பல். இன்று காலை நடந்தது.
தமிழகத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றமுடியும், ஈமுகோழி வள‌ருங்கள் என்று சொல்லி விற்று பணம் பறிக்க முடியும். தவறாக நிலத்தை விற்று தப்பிக்க முடியும். மக்களாகவே இதை எதிர்கொள்ள தெரியாது. எந்த ஆட்சிவந்தாலும் அவர்களை கண்டுபிடிக்கவோ தடுக்கவோ முடியாது. தமிழகத்தில் எதுதான் சாத்தியம்.

No comments: