வருடம் தொடங்கி ஒரு மாதம் அதற்குள் கடந்துவிட்டது. அத்தோடு
நான் ப்ளாக்கில் எழுத தொடங்கியும் ஒரு மாதம் முடிந்துவிட்டது. சனி, ஞாயிறுகளைத் தவிர மற்ற நாட்களில் எழுதியிருக்கிறேன். இணையம் பெரிய
அளவில் பயிற்சிக்கு இடம் அளிக்கிறது நமக்கு. இணையத்தில் எழுதுவதால் தொடர்ச்சியாக படிக்கிறார்கள்.
இது பத்திரிக்கையில், தினசரி
பேப்பரில்கூட சாத்தியமே இல்லை. சராசரியாக 50 பேர் தொடர்ந்து படித்துவருகிறார்கள். தனி மெயிலில் உள்டப்பியில்
தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இது உடனுக்குடன் நடக்கிறது.
இதுவும் நிச்சயம் அச்சு இதழில் சாத்தியமில்லை.
ஒரு மாதத்தை முழுவதும் எழுதி நிறைவு செய்வேன் என நான் நினைக்கவில்லை.
சில கட்டுரைகள் இரண்டு நாள் முந்தி எழுதியது ஆனால் பல கட்டுரைகள் அன்று காலை வந்துதான்
எழுதியுள்ளேன். எழுதுவதால் ஏற்படும் நிறைவை எழுத்தில் நிச்சயம் சொல்லமுடியாது. அந்த
மனநிறைவு அன்றைய நாள் முழுவதும் தொடர்வதும் அடுத்தநாள் எழுத வேண்டியவைகளை நினைக்கவும்
ஆரம்பித்துவிடுகிறது.
எழுதுவதால் சில நண்பர்களின் பக்கங்களில் சின்ன சலசலப்புகளை
கவனிக்க முடிந்தது. அப்படி என்ன எழுதிவிடப்போகிறான் என்று இருக்கலாம். சிலர் தொடர்ந்து
கவனிக்காததுபோல புறக்கணிப்பதும் இருக்கிறது. அது நிச்சயம் என்னை பாதிக்கப்போவதில்லை.
நான் எழுதுவது எனக்கானதுதான். யாரையும் திருப்திபடுத்த அல்லது மகிழ்விக்க எழுதவில்லை.
அப்படி என்னால் எழுதவும் முடியாது என நினைக்கிறேன். வெகுஜனமாக எழுதவேண்டும் என நினைத்தால்
ஒரே டெம்ளெட்டில்தான் எழுதவேண்டியிருக்கும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் இவர்களுக்கு என்ன பிடிக்காது என்று தேடி எழுதவேண்டியிருக்கும்.
ஆரம்ப இனிசியல் ஜம்பிற்காக இரண்டு பக்கங்கள் (450 வார்த்தைகள்) எழுத எண்ணியிருக்கிறேன்.
ஏனெனில் சின்ன கட்டுரையாக எழுதும்போது குறைவாகவும் அழுத்தமாகவும், அதேவேளையில் அதிலேயே முழ்கிவிடாமல் இருக்கவும்
செய்கிறது. மேலும் வேறு கட்டுரகளை எழுத தூண்டியபடியும் இருக்கிறது. தவழும் குழந்தைகளுக்கு
சின்ன இலக்குடன் தவழ்ந்து சென்று எடுக்கமுடியும் தூரத்தில் இருக்கும்படி பொருட்களை
வைப்பதுபோல.
அத்தோடு இஸங்கள், கொள்கைகளில் எந்த நம்பிக்கையும் எனக்கில்லை. அவைகள் பெரிய சுமைகள், அவற்றை தூக்கிக்கொண்டும் செல்வதும் நம்
பயணத்தை கெடுக்கும் என்று நினைக்கிறேன். சின்ன பயணங்களுக்கு அவைகள் பயன்படலாம். ஒரு
பெரிய நீண்ட பயணத்திற்கு மிகக்குறைந்த சுமைகளே போதும்.
தொடர்ந்து எழுதவேண்டும் என்பதுதான் இலக்கு. அந்த இலக்கை வெற்றிகரமாக முடித்துள்ளேன்
என்று கொஞ்சம்போல் பெருமை பட்டுக்கொள்ளலாம் அவ்வளவுதான். சிறந்த, நல்ல, நீண்ட, விவாதத்தை
தூண்டும் கட்டுரைகள் எழுத வேண்டும் என்பதுதான் அடுத்த முக்கிய இலக்கு. அதை அடைவது எளிதான
காரியமும் அல்ல என்று அறிந்தே இருக்கிறேன். அதற்கு
வேறு வேலைகள், அலுவலக நெருக்கடிகள், எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும். படிப்பவர்களின் எண்ணிக்கையும்
கணிசமாக அதிகரிக்கவேண்டும். அதனால் ஒரு மனஉந்துதல் அல்லது ஒரு சின்ன நெருக்கடி ஏற்பட்டு
எழுதமுடியலாம்.
சின்ன நாஸ்டால்ஜி கட்டுரைகள் மட்டும் எழுத வேண்டும் என நினைத்திருக்கவில்லை.
வெவ்வேறு தலைப்புகளில், பிரிவுகளில்
பல்வேறு வகையான கட்டுரைகளாக இருக்கவேண்டும் என்றும் நான் அறிந்த உலகமும் அறியாத உலகத்தை
அறியும் விதமாக இருக்க நினைத்துள்ளேன். அதீதமான தன்னப்பிக்கையில், ஒரு முதிராத மனநிலையில் இருந்து சொல்லவில்லை. இதற்கு முன்பே, ஒராண்டு முன்பு இருக்கலாம், அதற்கான முயற்சிகளை செய்துவிட்டேன். ஒத்திகைக்காக
சில கட்டுரைகள் எழுதியும், அலுவலகம்
தவிர வீட்டிலிருந்து எழுத லாப்டாப்பும் வாங்கியுள்ளேன். என்னென்ன வகையின்கீழ் எழுதலாம்
என்று ஒரு சிறு பட்டியல் தயாரித்தும் உள்ளேன். இவற்றால் நூல் பிடித்து சென்றதுபோல எழுதமுடியும்
என சொல்லமுடியாது. ராக்கெட் பறந்த பின் தான் அவற்றின் தவறுகளை சரிசெய்து இலக்கை அடைய
மாற்றம் செய்யமுடியும். அப்படி எழுதாமல்
இருந்தால் அது என்னுடைய தவறாகவும், சோம்பேறிதனமாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment