Friday, February 20, 2015

ஏமாத்து


 பட்டினத்தார் என்னும் சினிமா டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு அந்தனர் தன் கோவில் பணிகளை முடித்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வேலைதேடி அவரிடம் கேட்கிறார். அவர் கேட்டநபர் இப்போது இல்லை என்றது, தன்னிடம் இருந்த தேங்காய் பழங்களை அவர் பசிக்கு கொடுத்துவிடுகிறார். கையில் எதுவும் இல்லாமல் வீட்டிற்கு வரும் அவரை அன்புடன் வரவேற்கிறார் அவர் மனைவி, வீட்டில் பொங்க ஒரு மணி அரிசிகூட கிடையாது என்கிறார். வாசலில் ஒரு இடையில் ஒரு உடைமட்டும் உடுத்தி மொட்டை தலையுடன், ருத்திராட்ச மாலைகள் ஆங்காங்கே தொங்க வரும் பண்டாரம் அவர் வீடு வாசல் வந்து பிட்சை கேட்டதும், அவர் செய்வதறியாது நின்றிருக்கும்போது மனைவி தன் தாலியை எடுத்துக் கொடுத்து விற்று வர சொல்கிறார். அப்படி செய்து அவருக்கு அன்னமிடுகிறார்கள். இப்படி ஒரு நடைமுறை முன்பு இருந்திருக்கிறது நம் நாட்டில். பல பஞ்சங்களைக் கண்டு, பசியால் வாடி பல‌ தலைமுறைகளைக் கடந்து வந்த நாம் இன்று அப்படி ஒரு காட்சி நடக்கவோ, பார்க்கவோ, கேட்கவோகூட முடியாது.
சாலையில் செல்லும்போது காவிஉடையணிந்த சாமியார்கள் யாராவது கைகாட்டினால் நிறுத்தாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஒரு முறையல்ல, பலமுறை நடந்திருக்கிறது. சாமியார் எல்லாம் ஏமாறுபவர்கள் என்ற் எண்ணம் எப்போதும் நம‌க்கு இருக்கிறது. சென்னையில் ஒரு கடையில் சாமான் வாங்கி இருசக்கர வாகனம் நோக்கி வரும்வழியில் வெள்ளைஉடை அணிந்து நெற்றியில் நாமம் தரித்து கண்களில் ஒளிதெரிய நின்ற ஒரு கிராமத்து நபர் ஒருவர் என்னை நிறுத்தி உங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கட்டுமா என்றார். முதலில் இது ஏமாத்து வேண்டாம் என்று தோன்றினாலும் சின்ன குறுகுறுப்பில் சிரித்தபடி நின்றேன். பேசியே என்னை மயக்கி 2000ரூ லவட்டிச் சென்றார்.
கல்லூரி படித்தப்பொது விடுமுறைக்கு வீடுவந்தவனை, உங்கள் மகனுக்கு ரோட்டில் அடிப்பட்டு சாகும் துர்பாக்கியம் இருக்கு, அதை நிவர்த்தி செய்கிறேன் என ஒரு முஸ்லீம் பெரியவர் எங்கள் வீடு தேடி வந்து என் பெயரை சரியாக சொன்னார் அதனாலேயே எங்களை கவர்ந்தார். தான் வேறு ஒரு இடத்தில் இருந்து நாடுநாடாக சுற்றிவரும் ஞானி (உருது/அரபியில் ஏதோ ஒன்று சொன்னார்). சைத்தான், கடவுள் என்று சொல்லி ஒரு பூசை செய்வதாக எங்கள் முன்னே பையிலிருந்து பல பொருட்களை எடுத்து ஏதேதோ செய்து காட்டி வீட்டிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு, பணம் என்று கிலோ கணக்கில் வாங்கிச் சென்றார். முதலில் எதுவும் எடுத்துச் செல்லமாட்டேன் சும்மா அங்கு வையுங்கள் என்றார். அப்படி சொன்னதை சொல்லும்போது சைத்தான், ஏக வசனத்தில் கத்தி எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார்.
ஏமாத்து என்றே சொல்லே அழகுதான். அதில் இருக்கும் கொச்சையான வார்த்தை சேர்ப்பே அழகாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஏமாற்றப்பட்டவர்கள் அப்படி சொல்வதில்லை. பெரிய ஏமாற்றுகள் நம்மை அதிக பாதிப்பதாக தெரியவில்லை. வேண்டாதவர் வேலைவிட்டு தூக்குவது, செய்யும் தொழிலை கெடுப்பது, வியாபாரம் நஷ்டத்தில் முடிவது போன்றவைகள் நம்மை பாதித்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாகதான் அந்த இடத்திற்கு வந்திருப்போம். நமக்கு தெரிந்தே பல நடந்திருக்கும். வாழ்க்கையின் அங்கமாக கொஞ்ச காலத்திற்குபிறகு அது மாறியும் இருக்கும்.
கஷ்டத்தில் இருக்கும் மனிதர்களை காப்பாற்றுவதற்கே சந்தேகமாக இருக்கிறது. அவர் செய்வது நிஜமானதுதானா என்கிற சந்தேகம்தான். எந்த அளவு என்றால் ரோட்டில் அடிபடுபவர்களை காப்பாற்றக் கூட சந்தேகம்வ‌ரும்படி இருக்கிறது. இரவு நேரங்களில் தமிழகத்தின் சில சாலைகளில் செல்லும்போது விபத்துக்குள்ளான வண்டியில் மனிதர்களின் ஓலங்கள் கேட்கும். ஆனால் அது செட்டப் செய்யப்பட்ட வண்டிகள், மனிதர்கள். நம்பி நாம் நம்வண்டியை நிறுத்தினால் நம்மை ஆயுதம் தாங்கிய மனிதர்கள் சூழ்வார்கள். பணத்தையும் நகையையும் இழக்கும் அவலம் ஏற்படும். இதனால் நிஜமான அடிபடும் மனிதர்கள் காலையில் தான் நாம் கவனிக்கமுடியும் பிணமாக.
நமக்கு தெரியாமல் நடக்கும் இந்தமாதிரியான‌ சின்னசின்ன ஏமாத்துகள் நாம் இதுவரை எதிர்பாராதவைகளாக இருக்கும். அதனால் அது மனதிலிருந்து எப்போது நீங்குவதில்லை. ஏனெனில் நாம் உண்மையாக இருந்திருப்போம். நாம் உண்மையாக இருக்கும்போது ஏமாற்றபடுவது நம்மை மறுஆய்வுக்கு மீண்டும் உட்படுத்தும்.
ஆனாலும் உண்மையான மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். முன்பு சாமியார்கள் என்றாலே உண்மையானவர்கள் என்று இருந்தது ஆனால் இன்று சாதாரண மனிதர்களே உண்மையற்றவர்களாக இருக்கும்போது சாமியார்களை குறைச் சொல்லி பயனில்லை.

No comments: