Thursday, February 12, 2015

வலதுபக்க‌த் திறப்பான்


நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் எல்லாமே ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். நாம் பயன்படுத்தும் பொருளை எளிதாக‌ கையால, எளிதாக‌ நகர்த்த, எளிதாக‌ தூக்க, எளிதாக‌ செயல்படவைக்க என்று எல்லாமே ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக நம் டிராயரை திறக்க, பீரோவை திறக்க, வீட்டு கதவை திறக்க, எல்லாமே நம் வலதுகை இயக்கும்படியாக வலப்பக்கம் அமைக்கப் பட்டிருக்கிறது. நம் வண்டியை இயக்க வலதுபக்கமாக உதைக்கும் ஸ்டார்டர், வலது கையில் ஆக்ஸிலேட்டர், வலது கைக்கு எளிதாக இடப்பக்கம் சட்டை பாக்கெட், சட்டை பட்டன் போட வலப்பக்கம் பட்டன். (ஆனால் சின்ன குழந்தைகளுக்கு இடப்பக்கம் இருக்கும் நாம் பயன்படுத்தும் வலக்கைக்காக‌.)
ஏன் ஒரு பாட்டிலின் மூடியை திறக்க மூட வலப்பக்கமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. உலகில் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் ஒரு 70-90% உள்ளார்கள். தீவிர இடக்கை இடக்கை உள்ளவர்கள் ஒரு பத்து சதவிகிதம் இருப்பார்கள். இருகைபழக்கம் உள்ளளவர்கள் மற்ற சதவிகிதத்தினர். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கானது. ஒருவகையில் இரக்கமற்ற குணமாகவும் இருக்கிறது.

இட‌க்கை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, மாற்றுதிறனாளிகள், வயதானவர்களுக்கும் நாம் இதே போன்ற நடத்தைகளை மேற்கொண்டு அவர்களை சிரம்பத்திற்கு உள்ளாக்குகிறோம். முப்பது சதவிதத்திற்கு மேல் இருக்கும் வயதானவர்கள், மாற்று திறனாளிகள் போன்றவர்களை பொதுஇடங்களில் நாம் முற்றிலும் புறக்கணிக்கிறோம். எந்த பெரிய மால்கள், சினிமா அரங்குகள், கடைகள் என்று பல இடங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகளை மறுக்கிறோம். அவர்களின் அவசரத்திற்கு கழிப்பறைகள் கிடையாது. சில அரசு பேருந்துகளில் வயதானவர்களுக்கான இருக்கைகளில் அவர்கள் அமர இடம் தருவதில்லை.
ஒரு முறை இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிக்னல் திருப்பத்தில் குறுக்காக ஏதோ ஒரு கேபிளுக்காக வெட்டியிருந்தார்கள். அது சரியாக மண் கொண்டு நிரப்பப்படாததால், சின்ன பள்ளமாக இருந்தது. ஒரு வயதான தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தின் முன்சக்கரம் அந்த பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. பின்னால் அமர்ந்திருந்த வயதான பெண்மணியால் உடனடியாக இறங்க முடியவில்லை. ஆடும் தன் கைகளால் மெதுவாக தன் தடியை பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார். ஓட்டிவந்த வயதான நபர் அதுவரை அந்த வண்டியில் அமர்ந்தபடி பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது சிக்னல் விழுந்ததும் வேகமாக‌ திரும்பியவர்களுக்கு பெரிய எரிச்சல், சிலர் உச்’, ‘சை என்று சத்தத்துடன் கடந்து சென்றார்கள். சிலர் நேரடியாகவே ஓரமா நின்னு இறங்ககூடாதா என்று சத்தமிட்டுவிட்டு சென்றார்கள். உண்மையில் அவர்கள் இறங்கவில்லை. இறங்கவேண்டிய நிர்பந்தம். பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் அவர்கள் அவதியுறுபவர்கள்.
வண்டியில் வந்த நான் அவர்கள் பின்னால் நிறுத்தி பின் வருபவர்களை கை காட்டி மாறிச் செல்ல செய்தேன். அப்போதும் சலிப்புகளோடுதான் கடந்தார்கள். இறங்கி ஓரமாக அந்த வயதான பெண்மணி நின்ற பின் வண்டியை வெளியே எடுத்தார் தாத்தா. கடந்து செல்லும் போது நன்றியோடு ஒரு பார்வை பார்த்தார்.
உண்மையில் இதைநாம் செய்ய கூடியதுதான். எளிதான வேலைதான், அவர்கள் இறங்கும்வரை காக்க வேண்டிய பொறுமையில் இருப்பவர்கள்தான். ஆனால் கோபம் கொள்கிறோம். வாய்க்குவந்தபடி வசைப் பாடுகிறோம். எல்லா இடங்களிலும் வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள், குழந்தைகள், ஆட்சிசம், மனநோய் உடையவர்கள் சரியான முறையில் கையாளப்படுவதில்லை. இதுமாதிரி அவர்களை உதாசீனப்படுத்துகிறோம்.
மாற்றுதிறனாளிகளும், சிறப்பு குழந்தைகளும் இதைவிட அதிக சங்கடங்களையும், அவமானங்களையும், அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம். கீழ்நிலையில் மட்டுமின்றி எல்லா மட்டத்திலும் இது போன்ற அவமானங்கள் சந்தித்து வருகிறார்கள். சிறப்புக் குழந்தையை விமானத்தில் அழைத்துச் செல்ல மறுத்த நிகழ்வும், பேருந்தில் அதே மாதிரியான ஒரு சிறப்புக் குழந்தையை அழைத்துச் செல்ல மறுத்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எந்த பிரச்சனைகளும் இல்லாத ஆண் பெண்கள் மட்டுமே இந்த உலகத்தின் பொது இடத்தில் நடமாட முடிகிறது. மற்றவர்கள் இந்த உலகத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. அப்படி பிரச்சனையற்றவர்கள் அவர்களே பார்த்து விட்டு கொடுக்கும் சின்ன இடத்தில் தான் இவர்கள் நடமாட முடியும்.
அப்படி பிரச்சனையற்றவர்கள் ஒரு காலத்தில் இவர்களின் இடத்தை நிரப்பபோகிறவர்கள் என்கிற உண்மையை லேசாக மறந்து அல்லது மறைத்துவிட்டுதான் வாழ்கிறார்கள். நாமும் அதுவரை மறந்திருப்போம்.

No comments: