என் தங்கையின் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர ஒரு நாள்
துணைக்கு செல்ல வேண்டியிருந்தது. எல்கேஜி படித்துக்கொண்டிருந்த அவளைப் போன்ற மற்ற குழந்தைகளின்
அம்மாக்கள் செய்த அட்டூலியங்கள் அன்று தாங்கவே முடியவில்லை. ஐந்து ஆறு வருடங்கள் இருக்கலாம்.
அது பரிச்சை நேரம் என நினைக்கிறேன். இத ஏண்டி எழுதல, நா அப்பவே
சொன்னேனே, ஏம் மிஸ் நீங்க சொல்லக்கூடாதா, அவளுக்கு தெரியும் இதெல்லாம், பரிச்சையில
போயி எழுதாம விட்டுடு வந்திருக்காலே' என்று தாய் புலம்பிக்கொண்டிருந்தார்.
அந்த மிஸ் நான் சொல்லக்கூடாதுல்ல, அவ விளையாட்டு புத்தியாவே இருக்கா, நா என்ன பண்ணட்டும் என்றார்.
இங்க பாருங்க அவன் இதெல்லாம் எழுதியிருக்கான் நீங்க மார்க்
போடவேயில்ல என்று மற்றொரு தாய் அந்த மிஸ்ஸிடம் கூறிக்கொண்டிருந்தாள். ஆனால் நான் அதற்குள் கடந்து வந்துவிட்டேன். அந்த மிஸ் பெண்ணை சுற்றி
பத்துபேர் நின்று புலம்பும் அளவிற்கு அது போர்ட் எக்ஸாமோ அல்லது பெரிய பரிச்சையோகூட
கிடையாது. வெறும் எல்கேஜி அரையாண்டோ, காலாண்டோ.
ஆனால் இன்று சற்று மாறியிருக்கிறது என நினைக்கிறேன். என் மகன் படிக்கும் பள்ளியில்
இன்று இந்த அளவு இல்லை. குழந்தைகளுக்கு
படிப்பும், மார்க்கும் முக்கியமே இல்லை. ஆனால்
குறிப்பாக இந்த அம்மாக்கள் தான் தன் பிள்ளை பிறந்து இரண்டுவருடத்திற்குபின் பள்ளிப்
படிப்பில் ஓட்டபந்தயம் போல ஓடவேண்டும் என நினைக்கிறார்கள். தான் சரியாக படிக்கவில்லை, தான் பட்ட கஷ்டம் தன்பிள்ளை பெறக்கூடாது
என்று சுயசிந்தனை வெளிப்பாடுகள் வேறு அங்கு வந்திருக்கும் மற்ற அம்மாக்களிடம் வெளிப்படும்.
இந்த முறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இரண்டுவயதிலிருந்தே
பட்டறையில் செதுக்கப்படும் இரும்பைப் போல பள்ளியில் அவர்கள் செதுக்கப்பட வேண்டும் என்று
தொடங்கி வைத்தார்கள். இந்தியர்கள் அதை ஒரு அருமருந்தாக எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
எல்லா ஆங்கிலப் பள்ளி, கேந்திர
வித்தியாலயா இதைத்தான் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க,
ஐரோப்பிய பள்ளிகள்
இந்த முறையை அதாவது சிறுகுழந்தைகளுக்கான் தேர்வு முறைகளை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.
அங்கிருக்கும் பள்ளிகளில் 7 வயது முதல்தான்
சேர்த்துக் கொள்ளவே படுகிறார்கள்.
அப்போதும் எந்தவித கடின பயிற்சிகள் இல்லாமல், எளிய விளையாட்டுகள், பாடல்கள் மூலமே அப்பள்ளிகளில்
குழந்தைகள் பயில்கிறார்கள். இதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கும்
தமிழர்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் அந்த மாற்றம் இன்னும் வரவில்லை.
குழந்தை இப்போது படிக்கவில்லை என்றால் எப்போதும் படிக்க
மாட்டான்/ள் என்கிற எண்ணம் ஆழமாக இருக்கிறது. வண்டிவண்டியாக வீட்டுப்பாடம் தராத பள்ளி
நல்ல பள்ளி இல்லை, குழந்தையை ஸ்கேல் வைத்து பயமுறுத்தும்
ஆசிரியை இல்லாத பள்ளி நல்ல பள்ளி இல்லை என்கிற எண்ணம்தான் எப்போதும் உண்டு.
பள்ளி என்பது ஒரு உடற்ப்பயிற்சி கூடம் அல்ல, அங்கு ஒரு மூன்று மாதத்தில் தெரிவதுபோல் உடனே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்
பள்ளியிலிருந்து நமக்கு நாம் விரும்பும் ரிசல்ட் வந்துவிட வேண்டும் என்று நினைப்பதும்
பெரிய தவறுதான். உடனே ஓட்டபந்தயத்தில் ஓடவிட்டு
மற்ற குழந்தைகளின்மேல் வெறுப்பை அவர்கள் மனதில் விதைப்பது அதைவிட பெரும் தவறு என நினைக்கிறேன். அந்தந்த வயதிற்கு தேவையான அன்பும், அரவணைப்பும் மட்டுமே அவர்களுக்கு போதுமானது.
குழந்தைதனத்தை எவ்வளவு விரைவாக இழக்கிறார்களோ அவ்வளவிற்கு அது தீமையிலேயே முடியும்.
மற்றவர்களுக்கு உதவும் பண்புகள், பிறரிடம்
அன்பு செலுத்தும் பண்புகள், ஒன்றுகூடி
விளையாடும் பண்புகளை இழந்து நாம் பெறப்போவது என்னவாக இருக்கும்.
அப்படியே நாம் தீவிரமாக குழந்தைகளை பட்டறையில் இடுவதுபோல
செய்து நாம் இதுவரை பெற்றது என்ன? பெரிதாக
வளர்ந்து இந்த சமூகத்தில் அவர்கள் சாதித்தது என்ன? 25 முதல் 30 ஆண்டுகளாக ஆங்கில வழி மற்றும் இதுமாதிரியான தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு
கற்பித்து நாம் பெற்றது என்ன?
உலகளவில் சிறந்த கல்விகூடங்கள்/பல்கலைக்கழகங்கள் எதுவும்
தமிழக, இந்தியாவிலிருந்து தேர்வுப் பெற்றதில்லை.
அறிவியல் மற்றும் வேறு துறைகளுக்கு அளிக்கப்படும் நோபல் மற்றும் அதுமாதிரியான எந்த
பரிசும் தமிழர்கள்/இந்தியர்கள் இதுவரைப் பெற்றதில்லை. (பெற்ற தமிழர்கள் அங்கு படித்து/வேலை/ஆராய்ச்சி
செய்தவர்கள்.) ஆக இந்த
கல்வி நமக்கு அளித்ததெல்லாம் வெறும் தகவல் சேமிக்கும் இயந்திரங்களை மட்டும்தான். இந்த
இயந்திரங்கள் கொஞ்சநாள் வேலை செய்துவிட்டு பழுதடைந்து போய்விடுகின்றன.
வேகமாக மாறும் உலகிற்கு தகுந்தாற்போல் நாம் மாறாதவரை குழந்தைகள்
உடற்ப்பயிற்சி கூடத்திற்கு அனுப்பிக்கொண்டுதான் இருப்போம். நம் சிந்தனையில் கல்வி குறித்த
மேட்டிமைகள் அழியும்போது தான் இது சாத்தியம் ஆகும். பெருநகர பிராண்ட்டு பள்ளிகள் கொஞ்சம்
புரிந்து செயல்படுவதுபோல் தெரிகிறது. பல சிறுநகர பள்ளிகளைப் பார்க்கும்போது இன்னும்
காலம் கிடக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment