எழுதுவதனால் மட்டும் எழுத்தாளன் என்று யாரும் ஒத்துக்கொள்வதில்லை.
பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொல்லிக்கொண்டாலும் யாரும் நின்று ஒரு விநாடி பார்ப்பதுகூட இல்லை.
சிலர் பத்திர எழுத்தாளர் என்று நினைத்து அடமான வீட்டை எப்படி மீட்பது என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். வேறுசிலர் ஏதோ அரசாங்க அலுவலகர்
என நினைத்து எந்த டிபார்ட்மெண்ட் என்கிறார்கள்.
அந்த எழுத்துக்களுக்குள் என்ன ஓளிந்து இருக்கிறதோ தெரியவில்லை
எழுத்தாளன் என்றால் மு.வ. என்ற இரண்டு எழுத்துகளை நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மக்கள். அதன் விரிவாக்கம் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதுவும் கெட்ட வார்த்தையின் சுருக்கம்போல் இருப்பதால்
எழுத்தாளன் யார் என்ற
கேள்விக்கு உடனே சொல்லிவிடுகிறார்கள்
போலும்.
திருவள்ளுவன், கம்பன் என்று பழமையான பெயர்கள் தான் எழுத்தாளனாக இருக்கமுடியும்
என்று நினைத்திருப்பதன் விளைவால் மு.வ.வையும் டக்கென்று சொல்லிவிடுகிறார்கள் என்று தெரிகிறது. சிலர் பரவாயில்லை
கல்கி, புதுமைபித்தன் என்கிறார்கள். கருப்புவெள்ளையில்
ஒடுங்கிய முகத்தோடும், குச்சியான உடலோடும் கண்டுவிட்டு
அவர்களை
எழுத்தாளனாக இருப்பார்கள்
என நினைத்துக் கொள்கிறார்கள்.
வண்ணப் புகைப்படத்துடன் ஒருவரை எழுத்தாளன் என்று காண்பித்தால், மேலன்னம் ஒட்ட அதிர்ச்சியோடு திரும்பி பார்ப்பார்கள், அவர் நடிகராக தான் இருக்கலாம்
என்பார்கள்.
இது வாசிப்பு பழக்கம் இல்லாத பெருவாரியான மக்களின் செயல்கள்.
ஆனால் குறைந்த சதவிகிதம் உள்ள கொஞ்சம் வாசிப்பவர்கள் எழுதும்
எல்லோரையும் எழுத்தாளன் என்று ஒத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு அப்படி பாகுபாடுகள் எதுவும்
பார்ப்பது இல்லை.
நாவல், சிறுகதை எழுதுபவர்கள் என்று இல்லை, கவிதை, ஐகூ, வலைதள எழுத்தாளர்கள், முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் தினம் இரண்டுவரி எழுதுபவகளும் கிறுக்குபவர்களை, எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். சொல்லப்போனால் யாரையும்
அப்படி எழுத்தாளன் இல்லை என்று சொன்னால் குற்றமாகவே கருதுகிறார்கள். சுயமாக எழுதும் எதுவும் என்றில்லை
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று ஷேர் செய்தால்கூட அல்லது அதிலிருந்து ஒரு வாக்கியத்தை
எடுத்து தன் பகுதியில் வெளியிட்டாலும் அவர் எழுத்தாளராகத்தான் கருதப்படுவார். ஆகவே யாரையும் தனியாக சொல்லாமல்
எல்லோரையும் எழுத்தாளன் என்றே இனி குறிப்பிடலாம்.
அனைவரும் எதையாது ஒன்றை எழுதுவதால் இன்றைய காலக்கட்டத்தில் படிப்பவர்களை தேடவேண்டியிருக்கிறது.
படித்தால் மட்டும் போதாது அதைப்பற்றி விவாதிக்க வேண்டும். அதுகுறித்து பேசவேண்டும் அல்லவா. சட்டென கவனிக்கப்பட்டு
வேறுஒருவர் அதை குறித்து அவர் தன் பக்கத்தில் எழுதவேண்டும். பின்னாலில் அது தெரியாமல் போனாலும் பரவாயில்லை. அப்படி பேசப்படுவதுதான் இன்று சொல்லப்படாத விதியாகவே இருக்கிறது.
அதை செவ்வனே செய்வது என்பது மிக சிரமமான காரியம். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளரும் செய்யவேண்டிய முக்கிய
பணி. அதாவது தன்னை பொதுவெளியில் இறுத்திக்கொள்ள இப்படி பேசப்படும்
வித்தையை கவனமாக செய்யவேண்டும் என்பது ஆரம்பபாடம். அப்புறம் ஆரம்பத்தில் கவனப்படுத்த செய்யப்படும் ஒன்றை பின்னாட்களில்
அதையோ அல்லது அதன் தொடர்ச்சியை
விட்டுவிடாமல் தொடர்வது எல்லாவற்றையும்விட முக்கியமானது.
அந்த கவனத்தை பெறுவது எப்படி? கோழிக்குஞ்சுகளை தயாரிக்கும் பாக்ரியில் நல்ல குஞ்சுகளை தேர்ந்தெடுப்பதுபோல, ஒரு கூட்டத்தில்
சட்டென நம்மை சிறந்த
கோழிக்குஞ்சாக தேர்தெடுக்கப்படும் வித்தையை பெறவேண்டும் அதற்கு சில வழிகளைப்பற்றி யோசிக்கலாம்
1. பெயரை தேர்தெடுத்தல்
முதலில் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பெயருக்கு முன்னால்
அல்லது பின்னால் அல்லது பெயரையே அதுவாக தேர்ந்தெடுத்த ஒன்றை சேர்க்க வேண்டும். எழுத்தாளர், பிரபல எழுத்தாளர், பிரபலர், கவி, கவிஞர், கவிக்கோ, என்று உயர்மொழிலும், மொக்கை, மொன்னை, கடையன், சடையன், திருடன், பிச்சை, சனியன் போன்ற தாழ்மொழியிலும் தேர்தெடுக்கலாம். அது உங்களுக்கு
பிடிப்பதுடன் சட்டென இணைய உலகில் பரவலாக அறியப்பட்டிருக்கும். சாதாரணமாக பெயர்களை கேட்டு, பார்த்து பழகியவர்களுக்கு, இப்படி ஒரு பெயர் நடுவில் வரும்போது உடனே
தங்கள் கவனத்தில் கொள்வதுடன், ஒரு சின்ன
சிரிப்புடன் அவர்களை அறியாமல் லைக்கோ, கமெண்டோ போட்டுவிட்டு போய்விடுவார்கள். போட்ட இரண்டாவது நிமிடத்தில் இவ்வளவு லைக்
வருமெனில் நீங்கள் தன்னிச்சையாக பிரபலமாவீர்கள் தானே.
2. வசை பாட வேண்டும்.
வசை பாட முதலில் தெரிந்திருக்க வேண்டும். இது பெயரை தேர்ந்தெடுப்பதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
பெயர் கர்ணகொடுரமாக இருக்குபோது வசையும் வண்டவண்டையாக்த் தானே இருக்கவேண்டும். மென்மையாக வசை பாடுவதும் நம் திறமைதான்
வசை பாடுவது என்பது ஏதோ காலை எழுந்ததும் பல்விளக்குவது மாதிரியல்ல. சட்டென ஒரு எரிமலைபோல, காட்டுபன்றியின் வேகம்போல,
அது நிகழவேண்டும்.
அதற்குமுன்பு எதாவது ஒரு கொள்கையை தேர்தெடுத்து இருப்பது நல்லது. கம்யூனிசம், இந்துத்துவம், தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம் இப்படி எதாவது ஒன்று. அது உங்களுக்கு பிடிக்கும், பிடிக்காது, அதுப்பற்றி தெரியாது என்பது பிரச்சனையல்ல. பொதுவாக அது எதேட்சயாகதான் அமையும், அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அதன் எதிர் கொள்கையாளர்களை அப்படி
நினைக்கப்படுபவர்களை வசைமொழி
பொழிய வேண்டும். பிடிக்கவில்லை
அல்லது போரடிக்கிறது என்றால் நாளாகநாளாக அதை மாற்றிக்கொள்ளலாம்.
நடப்புநிகழ்வில் ஏதோ ஒன்று அறச்சீற்றம் கொள்ள ஏதுவாக நடந்துக்
கொண்டே இருக்கும். அதைப்பற்றி எதாவது சில கருத்துகள் சொல்ல ஆகவேண்டும். புத்தக வெளியீட்டில்
நடந்த ஒரு மேடைப் பேச்சு, ஒரு நடிகை இன்ன படத்தில் நடிக்க
மாட்டேன் என கூறிய பேச்சு, சாதிப் பெயரை சின்னதாக சொல்லிய அல்லது சின்னதாக அதை மறைத்த ஒரு சினிமா காட்சி, ஒரு பிரபலரின் கருத்து,
ஒரு எழுத்தாளர் வாங்கிய
புத்தக லிஸ்ட் அல்லது சந்திப்பு போன்ற நடவடிக்கை இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றின் மீதான
நம் அறச்சீற்றம் எல்லோரும் சொல்வது போலில்லாமல், நுண்ணியமான
ஒரு விஷயத்தை 'கண்டுபிடித்து’ சொல்லிவிடவேண்டும். அப்படி நடப்புநிகழ்வில்
எதுவும் இல்லை என்றால் புதிதாக உருவாக்கும் திறன் பெறவேண்டும் என்பதும் முக்கியம்.
எல்லா சந்தர்பங்களையும் பயன்படுத்த தெரிய வேண்டும்.ஒருவர் என் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்று எழுதினால், 'தூ... இவனெல்லாம் மனுஷன்'
என்று எழுதவேண்டும்.
அவரை பிடிக்காத மற்றவர்களுக்கு உடனே குதுகூலமாகிவிடும். என்னாச்சு பாஸூ என்று தான் தொடங்குவார்கள்.
அப்படி தொடங்கிவிட்டால் நீங்கள் பிரபலமாகிறீர்கள் என்று பொருள். உடனே பதில் கூறக்கூடாது. பூடகமான ஒன்றைகூறி அவர்களை ‘சிந்திக்க’ வைக்கவேண்டும். பொதுவாக முதல் பதிலிலேயே அவர்களாக புரிந்து
கொண்டு மற்றவர்கள் கண்டமேனிக்கு எடுத்து செல்வார்கள். அப்படி நிகழவில்லை என்றால் அப்படியே விட்டுவிடக் கூடாது. மீண்டும் ஒரு பூடகமாக சிலவற்றை சொல்லிவிட
வேண்டும். இதனால் சட்டென
ஒரு புத்திசாலிதன கிரிடம் உங்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கும். அதற்குபின் நீங்கள் எழுதும் எதுவே
இந்த சமூகத்தில் முக்கியமானதுதான்.
3. அப்போது என்ன செய்தீர்கள்?
அப்போது என்ன செய்தீர்கள் முக்கியமான சில சமயங்களில் கேட்க தெரியவேண்டும்..
உலகின் மிக எளிய கேள்வி இது தான்.
அதே நேரத்தில் அனைவரையும் சிந்திக்க தூண்டும் கேள்வியாகவும் இருக்கும். எப்போது கேட்கிறோம்
என்பதில் இருக்கிறது விஷயம்.
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்றாலும் சில இடங்களில் குதத்தில் ஏற்பட்ட எரிச்சலை தாங்கமுடியாமல் கத்துவதுபோன்று
கேட்கும்போது அதற்கு தனி மரியாதைதான். ‘இன்று கொசு தொல்லைப் பற்றி பேசுகிறீர்களேடா, போன ஆட்சியின் போது கொசு கடித்ததே அப்போது
என்னடா செய்தீர்கள்’ என்று கூறும்போது
இதற்கு முன்பே கேள்வி கேட்டவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிப்பதை நாம்
இப்போதே பார்க்க முடியும்.. அத்தோடு கொசு கடித்ததாக யாரு கேட்டது என யாரும் கேட்க போவதில்லை, போன ஆட்சியில் முகநூல், டுவிட்டர் இருந்ததா என்பதைப் பற்றியும்
எதுவும் கேட்கப் போவதில்லை.
கொசு உதாரணத்திலிருந்து உங்களுக்கு எதிராக ஒரு நிகழ்வு நடந்துவிடும்போது
இதற்கு என்ன பதில் என்று உங்களை நோக்கி உங்கள் சமூகத்தை நோக்கி, உங்கள் கூட்டத்தை நோக்கி இப்படி எதையாவது
ஒன்றை நோக்கி எழுப்பப்பட்டிருக்கு கேள்விக்கு எதிர் கேள்விதான் இது. கொசு, தண்ணீர் பிரச்சனை என்றில்லை, மதம், ஜாதி, அரசியல், எந்த குண்டாஞ்சட்டிக்கும் இது பொருந்தும்.
கேட்கப்படும் கேள்விக்கு சமமான மிகச்சரியாக அது முட்டாள் தனமாக இருந்தாலும் இதற்குமுன்
நிகழ்ந்திருக்கும் ஒரு நிகழ்வை எடுத்து அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதன்
மூலம் அவரை நாம் மடக்கியவராக மாறிவிடுகிறோம். இதன் மூலம் நமக்கு நண்பர்களால் லைக் கமெண்டாக
ஸ்டேடஸ் நிரம்பி வழிவதை அடுத்த பத்து நிமிடங்களில் காணலாம்.
4. அப்போதும் கேட்பீர்களா?
அப்போதும் கேட்பீர்களா? என்று
கொஞ்சம் நிதானித்து சிக்ஸர் அடிக்க வேண்டிய கேள்வி. அது அடுத்த வகையான மடக்கும் கேள்வி தான். முந்திக்கொண்டும் அப்போது
நீங்கள் என்ன செய்தீர்கள் என ஒருவர் கேட்டு விட்டாலோ
அல்லது இறந்தகாலத்தில் அதற்கு சமமான ஒன்று இல்லாமல்/கண்டுபிடிக்க முடியாமல் போகும்போது
அல்லது நடக்க வாய்ப்பில்லாத, நடந்துவிட
முடியாத, அல்லது நடந்துவிடுமோ என எதிராளி
பயப்படும் ஒன்றை எடுத்து அந்த சந்தர்ப்பத்தை கூறி அது நடந்துவிட்டால் அப்போது கேட்பீர்களா? என்று கேட்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர் திணறிப் போவதை ரசிக்க முடியும். பொதுவாக இதை அவர் எதிர்பார்த்த
ஒன்றாக அதாவது எல்லோரும் கேட்டுவிட்ட ஒன்றாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால்
புதியதாக விஷயங்களை தேட கொஞ்ச நேரம் ஆகும்.
முன்பு சொன்ன கொசு உதாரணத்தையே சொல்லலாம். 'கொசு கடிச்சதுக்கு சொல்ற இந்த அல்லகை, எதிர்காலத்துல வண்டெல்லாம் கடிக்காதாமா, அப்ப எப்ப என்ன பண்ணுவாராம்'. இதனால் மீண்டும் ஒரு பெரிய மடக்குதலை தொடுத்து
ஸ்டேடஸில் நண்பர்களால் லைக் கமெண்டாக நிரம்பி வழிவதை பத்து நொடிகளில் காணலாம்.
செய்யவேண்டியவைகளை பார்த்தோம் இப்பொது சில தவிர்க்க வேண்டியவைகளை
பார்ப்போம்.
- கம்யூனிசம், இந்துதுவம், தலித்தியம், பெரியாரியம், சாதியியம், என்று எதாவது ஒன்றில் இருக்க
வேண்டும். அப்படி இல்லாமல் நடுநிலைவாதி என்று சொல்லிக் கொண்டாலோ அப்படி அறியப்பட்டாலோ
அதைவிட கேவலம் எதுவும் இல்லை. 'நாசமா போவாய்ங்க இந்த நடுநிலைவாதிகள்' என்று வசைபாடபடுவதோடு லாவகமாக நீங்கள் ஒதுக்கிவைக்கப் படுவீர்கள்.
அதன்பின் உங்களுடைய எந்த பேச்சும் கவனிக்கப்படாது.
- கம்யூனிசத்தில் சேர்ந்தால் இந்துதுவ நண்பர்கள் காணாமல் போவர்கள். இந்துதுவத்தில்
சேர்ந்தால் தலித்திய நண்பர்கள் காணாமல் போவார்கள். சில பெரியாரிஸ்டில் சேர்ந்தால்
சில தலித்தியர்கள் காணாமல் போவார்கள். இந்த இரண்டில் சேர்ந்தால் சாதி இந்துகள்
காணாமல் போவார்கள். இந்த இரண்டு அந்த ஒன்று, அந்த இரண்டு இந்த ஒன்று என்று ஒரு
மாதிரி போகும். நல்ல பேட்ஸ்மேன் போல எந்த பந்தையும் அடிக்க தெரியவேண்டும். இந்த
இரண்டு அந்த இரண்டு என்று சேர்ந்துவிட்டு வேறு ஒன்றில் நண்பர்களோடு இணையவேண்டும்.
- தன் சாதியின் பெயரை தப்பி தவறியும் சொல்லிவிடக் கூடாது. பிறகு சாதிப்
பெயரால் திட்டபடுவீர்கள். தண்ணி அடித்தபோது தன் சாதிப் பெருமையை கூறியதாகவும்
சாதிப் பேய் பிடித்தவன் என்றும் கேவலப்படுத்த படுவீர்கள்.
- தொடர்ச்சியாக ஸ்டேடஸ் போடாமல், மற்றதுணை நண்பர்களுக்கு லைக்கூட போடாமல் இருப்பது நல்லதல்ல.
உடம்பு சரியில்லை என்றால் அதை போட்டுவிட்டுதான் போகவேண்டும். இல்லை என்றால் கள்ளமெளனம்
காக்கும் கயவாலித்தனம் என்று அசிங்கப்பட வேண்டியிருக்கும்.
முக்கியமாக அடிக்கடி செய்யவேண்டிய என சில உண்டு, ஒரிரு வரிகளில்:
- ஒரு முக்கிய எழுத்தாளரை அவரின் செய்கைக்காக அவ்வப்போது திட்டுவது.
- ஜாக்கிசன் கூப்பிட்டாக என்ற ரேஞ்சுக்கு அவ்வப்போது அவர் பார்க்க என்னை
அழைத்தார், இவர் என்னை சந்தித்தார் படத்தை போட்டு
காட்டுவது.
- அலுவலக விஷயமாக வெளியூர் சென்றால் அது எங்குமே நடக்காதது மாதிரி படங்களைப்
போட்டு காட்டுவது
- ஆங்கில எழுத்தாளர்களின் பெயரைப் போட்டு அதைப் படித்தேன், இதைப் படித்தேன் இந்தியாவில் ப்ரிண்ட் கிடைக்காத புத்தகத்தைப்
பற்றி பீலா விடுவது.
- பிரபலமான ஒருவரின் ஸ்டேடசுக்கு சம்பந்தமில்லாமல் அவர்கள் எரிச்சல் பட்டாலும்
விடாமல் பக்கம் பக்கமாக கமெண்டும், பதில்கமெண்ட்டும் கொடுப்பது.
- அடிக்கடி இந்த சமூகத்தை நினைத்து கோபப்படுவதுடன், நான் போகிறேன் இந்த உலகம்
என்னை மறைக்கிறது என்று பேசி நண்பர்களை தன் பக்கம் வைத்திருப்பது.
- அல்லது இந்த மாதிரி எதாவது ஒரு கட்டுரை எழுதுவது.
No comments:
Post a Comment