Monday, February 16, 2015

யெஸ்.பாலபாரதியின் 'துலக்கம்'


ஆட்டிசம் என்பது ஒருவகை செயல்திறம் குறைபாடுள்ள நோய். அது மனநோயோ, மனவியாதியோ அல்ல. திடீரென தோன்றி திடீரென மறையும் நோய் வகை சேந்ததும் அல்ல. பல வகை காரணங்களால் பிறந்தக் குழந்தைக்கு 2 வயது முதலே தெரிய ஆரம்பிக்கும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் அந்த நோயால் ஏற்படும் பாதிப்புகளை சில நடைமுறைப் பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி, ஒரு ஆட்டிச குழந்தைக்கு இருக்கும் ஒரு பிரச்சனை மற்ற குழந்தைகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக சில செய்கைகளால் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். வேண்டாம் என்ப‌தை சில கண்களை சுருக்கி அல்லது மூடிக் கொள்வதை வைத்து புரிந்து கொள்ள வேண்டிடியிருக்கும்.
பொதுவாக இக்குழந்தைகளை இருவகைகளாக பிரிக்க முடியும் பேசும் குழந்தைகள், பேசாக் குழந்தைகள். பேசும் குழந்தைகள் அனைத்தையும் பேசிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. பேச்சுமூலம் அவர்கள் தங்கள் தேவைகளை வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அக்குழந்தைகளை பொதுஇடங்களில் பார்க்கும்போது எந்த வேறுபாடு இல்லாமல் நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் அந்த வளர்ச்சி பெறவில்லை. பொதுஇடத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்தால் நம் குழந்தைக்கும் ஓட்டிக்கொள்ளும் என்று பயப்படும் பெண்களை இருக்கிறார்கள்.

ஆட்டிச பாதிப்புள்ள ஒருவரின் கதையுடன் 1988ல் வெளியான படம் ரெயின் மேன். டஸ்டின் ஆப்மேன், டாம் குரூஸ் நடித்திருந்தார்கள். ஆப்மேன் ஆட்சிசம் பாதிப்புள்ளானவராக மிக அற்புதமாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் செய்த செய்கைகள் எல்லாம் அச்சு அசலாக ஆட்சிச பாதித்தவர் மாதிரி நடித்தார். அதேபோல பல நாவல்கள் மேற்குலகில் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் தமிழில் ஆட்டிச பாதிப்புள்ளானவர் ஒருவரின் கதையை தாங்கி வந்திருக்கும் நாவல்/குறுநாவல் துலக்கம்.
ஆட்டிச பாதிப்புக்குள்ளான அஸ்வின் வீட்டிலிருந்து காணாமல் போய்விடுகிறார். வீட்டில் அவர் அம்மா அப்பா பக்கத்தில் உள்ள இடங்களில் எல்லாம் தேடுகிறார்கள், கூட அவரது மச்சானும் அவர் மனைவியும் உதவி செய்கிறார்கள். ஒரு டீ கடையில் தகராறு செய்ததாக அஸ்வினை போலீஸ் பிடித்து செல்கிறது. அவரின் மேனரிசங்களை புரிந்து கொள்ளாமல் அவரை அடித்து துவைக்கிறார்கள் போலீஸ்காரர்கள். முருகன் என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் டாக்டர் நண்பரின் உதவியால் அவரைப் புரிந்து அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு மென்மையாக நடந்துக் கொள்கிறார்கள். அஸ்வினின் அப்பா கமிஷ்னர் அலுவலகம் வரை சென்று கடைசியில் மடிப்பாக்கம் காவல் நிலையம் வந்து அஸ்வினை கண்டுக் கொள்கிறார்கள்.
காணாமல் தேடும்போது அவர்களின் மன உலைச்சலில் ஆட்டிச குழந்தைகளைப் பற்றிய செய்திகளையும், அவர்கள் நடந்துக் கொள்ளும் முறைகளைப் பற்றியும் அஸ்வினின் சிறுவயது விஷயங்களை சொல்லும் போது சொல்லிவிடுகிறார் ஆசிரியர். இன்ஸ்பெக்டரின் டாக்டர் நண்பரின் வாயிலாகவும் ஆட்டிசம் பற்றிய புரிதல்களை அவர்கள் எப்படி கையாளவேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக சொல்லிவிடுகிறார். முடிந்தவரை எல்லா தரவுகளை சொல்லிவிடும் அவசரம் இருந்தாலும் சரியாக இடத்தில் நாம் புரிந்துக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
இந்த நாவல் மிக தீவிரமான மொழியில் எழுதப்படாமல் வெகுஜனமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கும் எல்லோருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட அம்மாப்பாக்களுக்கு புரியும்விதமாக எளிமையாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் பகோபவின் கிரைம் நாவல்போல ஆரம்பித்தாலும் பின்னால் தேவையான செய்திகளும் தரவுகளுடன் வந்து சேர்ந்துக்கொள்கிறது. அதேப்போல அஸ்வினின் அம்மா அப்பாவின் தவிப்புகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
இதையும் தாண்டி சிலக்குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. விரிவாக அஸ்வினின் நடத்தை, செய்கைகளை, வர்ணிக்காதது, அவரால் சமூகத்தின் தாக்கத்தைப் பற்றியும், மக்களின் எதிர்வினைகளைப் பற்றியும் சொல்லவில்லை.
பத்திரிக்கை துறையில் வேலைச் செய்யும் யெஸ்.பாலபாரதி, இதற்குமுன் ஆட்டிசம் பற்றிய ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். ஆட்டிசம் சில புரிதல்கள் என்னும் அந்த புத்தகம் ஆட்டிசம் பற்றி தமிழில் தெரிந்துக் கொள்ள ஒரு ஆரம்ப நூலாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால் முழுமையாக ஒரு சமூகப் பிரச்சனைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் கையில் எடுத்திருப்பதை பாராட்டலாம். இனிவரும் காலங்களில் ஆட்டிச குழந்தைகள் அதிகரிக்கப்போவதையும் அதை புரிந்துக் கொள்ள தேவையானவைகளை இந்த நாவல் மூலம் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியை நிச்சயம் பாராட்டலாம்.
தரமான தாளில் விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

No comments: