Friday, February 13, 2015

சோறுபோடும் கல்வி


செய்யும் வேலையை எப்போது நாம் கெளரவத்தோடு ஒப்பீடு செய்து கொள்கிறோம். இன்ன வேலை செய்தால் கெளரவம், இன்ன வேலை கெளரவமில்லை போன்று. அது கடைநிலை வேலை என்று இல்லை, எல்லா வேலைக்கும் பொருந்துகிறது. இன்றைய சூழலில் ஒருவர் அப்பா செய்த அதே சிறிய வியாபரத்தை தொடர்ந்தால் அவருக்கு கெளரவமான இடமில்லை. வேறு வேலைக்கு செல்ல தெரியாத, படிப்பால் இன்று எதுவும் செய்ய முடியாதவர் என்று நினைக்கப்படுவார்.
இன்று என்ன வேலை ஒருவர் செய்ய வேண்டும் என்பதை சுற்றி உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்கள் படித்துவிட்டு கம்யூட்டர் கம்பெனியில் வேலை செய்யவேண்டும். அதாவது ஒரு ஐடி துறை வேலையில் கைக்கு மாதம் ஆரம்பத்திலேயே 40000 பெறவேண்டும். அதுவும் கம்பெஸ் நேர்முக தேர்விலேயே தேர்தெடுக்கப்பட்டு படிப்பு முடிந்ததும் அந்த வேலைக்கு சென்றுவிட வேண்டும். அப்புறம் கொஞ்ச நாளில் அமெரிக்கா சென்று லட்சங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றாலும் இதை நோக்கித்தான் அவனது 9வது வகுப்பிலிருந்து அதற்கு படித்து தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இசையில், எழுத்தில், ஆசிரியராக, அறிவியலில் ஒரு துறையில் என்று செல்பவதில் ஆர்வத்தை செலுத்துபவர்கள் நடைமுறையை அறியாத மூடர்களாக கருதப்படுகிறார்கள்.
என் நண்பரின் உறவினர் ஒருவர் இருக்கிறார், அவர்க‌ள் தன் மகள்களுக்கு ஐடி துறையில் வேலைக் கிடைக்க 9வது வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்து வேறு எந்த வேலையிலும்/நடவடிக்கையிலும் கவனத்தை செலுத்தவிடாமல் பார்த்துக்கொண்டார்க‌ள். ஒவ்வொரு பெண்ணும் 12ஆம் வகுப்பு முடியும் வரை வீட்டில் டிவி இல்லை. வெளியில் அப்பெண்கள் விளையாட அனுமதிப்பதில்லை. யாராவது அவர் வீட்டிற்கு சென்றால் அவர்கள் அப்பெண்களுடம் பேசமுடியாது. ஏன் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒரு அறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் டேபிள் சேரில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமே செய்யவேண்டும். கல்லூரியில் முக்கியமானவையாக எது உள்ளதோ அதையே எடுத்து பொறியியலை முடித்து வேலைக் கிடைத்து அமெரிக்கா சென்று அதே போன்ற அமெரிக்கா சென்ற ஆண்கள் கணினி பொறியாளர்களை திருமணம் செய்வித்தார்கள். இன்று மூவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
இன்று அவருடன் பேசும்போது ஒவ்வொரு சமய‌த்திலும் தன் மகள்கள் அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி மட்டும் பெருமையாக எல்லோர் முன்னால் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் தன்னை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை மிக மெதுவாக உணர ஆரம்பித்ததும் எதிர்படும் மனிதர்களிடமெல்லாம் சொல்லி புலம்ப ஆரம்பித்திருந்தார்.
கைநிறைய சம்பாதிக்கும் உயர் வேலையும் வாழ்க்கை விழுமியங்களும் ஒன்றாக பார்க்கிறார்கள். இன்று அவரின் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியாமல், தன‌க்கு செய்ய வேலையாட்கள் இருந்தும்கூட, அவரின் குழந்தைகள் வந்து பார்க்காமல், கவனிக்காமல் இருப்பதை ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்கிறார்.
அவர் நினைக்கும் வாழ்க்கையை அவர் அடைந்துவிட்டார் ஆனால் அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பது போன்றிருக்கிறது அவரின் இந்த செய்கைகள். ஓடி முதலாவதாக வந்தபின் நான் சரியாகத்தான் வந்திருக்கிறேனா என்று நினைப்பதுமாதிரி.
அவரின் குழந்தைகள் அவரை கவனிக்கவில்லை என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இரவு பகலாக கண்விழித்து பாசம் கொட்டி தன் குழந்தைகளை வளர்த்த அவருக்கு தன் மீது திருப்பி பாசம் செலுத்த அவர்கள் தயாராக இல்லை என்பதை மிக மெதுவாகவே கண்டுகொண்டார். தன் காலத்தில் எதையும் அனுபவிக்காமல் தன் மகள்களுக்கு அவர் செய்ததை ஒரு சின்ன நன்றியோடு கூட நினைத்து பார்க்காதை வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கல்வியை வெறும் பண்டமாற்று பொருளாக பார்க்கும் மனநிலை எப்போது நாம் விடமுடியுமோ அப்போதுதான் நாம் வாழ்வின் அர்த்தங்களை விழுமியங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. அப் பெண்களுக்கு தன் தந்தையின் சின்ன ஆதங்கத்தைகூட புரிந்துகொள்ள முடியாத இடத்தில் இருக்கிறார்கள். அதற்கும் அவர்தான் காரணம்.
கல்வி நம் வாழ்வின் நம்பிக்கைகளை, எண்ணங்களை, அர்த்தங்களை, என்று எதையும் உருவாக்காமல் வெறும் தகவல்களை அளிக்கும்வரையில் நாம் இருட்டறையில் வாழும் எலிகள் போலதான் இருக்க வேண்டியிருக்கும். உலகத்தில் ஓட்டாமல் தன் மகள்களுக்கு வாழசொல்லிக்கொடுத்த அதே விஷயத்தை அவர்கள் தங்கள் தந்தைக்கு சொல்லியிருக்கிறார்கள். பாவம் கண்கெட்ட பிறகு அவருக்கு சூர்யநமஸ்காரம் தேவையாய் இருக்கிறது.

No comments: