Friday, February 6, 2015

மாசுபடும் நிலங்கள்


நான் கெமிஸ்ட்ரி முடித்ததும் காங்கேயம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தவிட்டு எண்ணெய் ஆலையில் கெமிஸ்டாக வேலைக்கு சேர்ந்தேன். மிக வளமையான கிராமம். அழகான வயல்கள், பார்க்க கடினமானவர்களாக இருந்தாலும் மென்மையாகப் பேசும் மனிதர்கள். கோவை போகும் சாலையில் அமைந்திருந்தது அந்த தொழிற்சாலை. மதிய ஷிப்ட் இருக்கும் நாட்களில் காலை நேர நடைக்கு செல்வது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆள் ஆரவம் இல்லாத அந்த ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்பதுபோல் காலைக்கு எல்லோரும் வயல் வேலைக்கு சென்றிருப்பார்கள். அமைதியும், மதிய வெய்யிலும், குளிர்ந்த காற்றும் அத்தனை  இனிமையாக இருக்கும். தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில கவுண்டர் வீடுகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அவர்கள் கேட்ட வாடகைக்கு அந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மக்கள் வருவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுன் இருந்தார்கள்.
இந்த தொழிற்சாலையால் அவர்கள் நிலங்கள் மாசுபடுகின்றன, மலடாகின்ற என்று அங்கிருக்கும் மக்களுக்கு தெரிந்திருக்க வில்லை. அத்தோடு அதில் பணிபுரிந்தவர்களுக்கே அது பற்றி தெரிந்திருக்காது.
சுற்றியுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் ஒரு நபர் வந்திருந்தார். அப்படி அடிக்கடி வருபவர்தான். தான் ஏர் உழும்போது இந்த தொழிற்சாலையிலிருந்து வரும் தூசிகள் என் கண்ணை அடைக்கிறது அதனால் சரியாக உழமுடியவில்லை என்றும், அத்தோடு மாட்டிற்கு அந்த தவிட்டு தூள் விழுந்து மாடுகளும் திணறுவதாக தெரிவித்தார். அதை ஒரு வேடிக்கையாகதான் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்களும் சிரித்துக் கொண்டிருந்தோம். அடுத்து நாள் அது பற்றி உயர் அதிகாரி ஒருவரிடம் இதைப்பற்றி தெரிவித்த‌போது அவரும் மென்மையாக சிரித்துவிட்டு கொஞ்ச நாளில் உழமுடியாது நிலமெல்லாம் மலடாயிடும் அப்ப சொல்லமாட்டர் என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த தொழிற்சாலை ஒரு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம். தவிட்டிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பென்சைல் என்கிற வேதிப் பொருளை பயன்படுத்தி சில குறிப்பிட, பல்வேறு வெப்ப நிலையில் வைத்தபின் பின் குளிவிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இது இடிபில் வகை எண்ணெய்தான். ஆனால் அதில் பயன்படும் பென்சைல் என்கிற வேதிப்பொருள் பிரித்தபின் தவிட்டில் தங்கியிருக்கும். பின் அதை மாடுகளுக்கு, நிலங்களுக்கு பயன்படுத்த முடியாது. நிலங்களில் படியப்படிய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாசுபடிந்து மலடாகிவிடும்.
தவிட்டு எண்ணெய்யால் சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன். தவிட்டு எண்ணெய் தயாரிப்பு என்பது ஒரு உதாரணம் மட்டுமே. உற்பத்தியையும் வியாபாரத்தையும் கருத்தில் கொண்டும் இது மாதிரி தொழிற்சாலைகளை நம் விளை நிலங்களின் நடுவில் வைக்கிறோம். இது மாதிரியான நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. வெவ்வேறு வகையான தயாரிப்புகள் நிகழ்கின்றன அங்கு.
தமிழகம் மாதிரியான விவசாயத்தை நம்பியிருக்கும், விவசாயத்தை உயிராக, பல ஆண்டுகளாக செய்து வரும் மக்களை பெரிய அளவில் ஏமாற்றுவது போன்றது இந்த மாதிரியான தொழிற்சாலைகளை நிலங்களின் நடுவே அமைப்பது.
சென்னை, செங்கல்பட்டு பகுதிகள், புதுச்சேரி, கடலூர் பகுதிகள், திருப்பூர், கோவை பகுதிகள், தூத்துகுடி பகுதிகள் பெரியளவில் சின்ன தொழிற்சாலைகளும் உள்நகர,கிராமங்களில் வேறு சின்னசின்ன தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளும், தூசிகளும், சாக்கடை நீர்களும் சரியாக சுத்திகரிப்பு இல்லாமலும், சரியாக அதைப்பற்றி சுற்றி உள்ள மக்களுக்கு அதன் பிரச்சனைகளை, விளைவுகளை தெரிவிக்காமலும், தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.
எப்போதும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு மேல் அதிக கண். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. கேரளாவில், கர்நாடகாவில் இருக்கும் மக்களுக்கு, தமிழகமக்களுக்கு இல்லாத‌ தங்கள் சுற்றுப்புறம் பற்றிய ஒரு அக்கறை, கரிசனம் இருக்கிறது. அத்தனை எளிதாக மக்களின் ஒப்புதல் இல்லாமல் தொழிற்சாலையை அமைத்துவிடமுடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்ததுமே அதை மூட வைத்துவிடுவார்கள். ஆனால் தமிழகத்தில் அது சாத்தியமில்லை. மோசமான தொழிற்ச்சாலைகள் அங்கும் சில‌ இருக்கலாம், தமிழகம் அளவிற்கு இல்லை. விவசாயம் தமிழகத்திற்கு மிகமுக்கியமான தொழில். விவசாயத்தை சார்ந்த நிலங்களை மாசு படுத்துகிற எந்த செயலையும் தமிழகத்தில் செய்யக்கூடாதவைக‌ள். அவற்றிற்கான மோசமான விளைவுகளை பின்னாலில் சந்திக்க வேண்டியிருக்கும்.

No comments: