Monday, December 28, 2015

பசங்க 2




கேளிக்கை திரைப்படங்களுக்கு மத்தியில் சில யதார்த்தப் படங்களும் வெளிவரவேண்டிய அவசியம் தமிழ் சினிமாவிற்கு இருக்கிறது. ஆனால் மிக அபூர்வமாதத்தான் நல்ல படங்கள் அதுவும் பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்று வெளிவருகிறது. சூர்யா சற்று மெனக்கெட்டு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். மற்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற படங்களில் கவனம் கொள்ளத‌போது இதை செய்ததற்காகவே பாராட்டலாம்.
குழந்தைகள் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன, ஆங்கிலம் அதும் கார்ட்டூன் படங்களாக வருகின்றன. தொலைக்காட்சியை தாண்டி சில கார்ட்டூன் படங்கள் மக்களை கவர்ந்துக் கொண்டும் இருக்கின்றன. பசங்க 2 அதுமாதிரியான ஒரு குழந்தைகள் படம். ஆனால் குழந்தைகளை வைத்திருக்கும் பெரியவர்களுக்கான படம் என்று சொல்லலாம்.

Thursday, December 24, 2015

சிங்க குறியீடு



சிங்கம் ஒரு பெரிய குறியீடு நமக்கு. சிங்க நடை, சிங்க பார்வை, சிங்க வேட்டை என்று சிங்கம் சேர்ந்த அனைத்தும் நம்முடைய செயல்களின் வெற்றியின் சின்னங்கள். சிங்கத்தை நேரில் நாம் பார்த்திருக்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை. அதன் திறன்களை நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெற்றிகளை, பெருமிதங்களை, நம்பிக்கைகளை குறிக்க அந்த சிங்கம் தேவையாக இருக்கிறது. சிங்கம் சராசரியாக 180 கிலோ எடை உடையது (அதிகபட்சம் 375), மற்ற பூனைவகைகளில் சிங்கம்தான் அதிக எடை கொண்டது. சிங்கம் மற்ற இரு விலங்குளான புலி, சிறுத்தையைவிட அதிக ஒலியுடன் கர்ஜிக்க கூடியது. அதன் கர்ஜனைதான் அதன் அழகு. சில நேரங்களில் அது குகையை விட்டு வெளியே வந்து கர்ஜித்தாலே ஒளிந்திருக்கும் சில விலங்குகள் பயத்தில் அதன் முன்னால் ஓடி வந்து தெரியாமல் அதனிடம் மாட்டி இரையாகிவிடுமாம். பிடரி அதன் மற்றொரு அழகு. அதற்கு கம்பீரம் அளிப்பதே அந்த பிடரி மயிர்தான்.

Tuesday, December 22, 2015

அறியாமையின் அழகு




விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென ஓடிவந்து இந்த முட்டி ஒடிஞ்சி போயிடுச்சுப்பா என்றான். பதறிப் போய்விட்டேன். எங்கே என்ன ஆச்சு என்றேன். காட்டிய அவன் வலது முட்டி நன்றாகத்தான் இருந்தது. ஓடும்போது வலிக்குதுபா ஒடஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன் என்றான். அது அப்படிதான் என சொல்லி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு போ சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மற்றொருநாள் அப்பா இந்த ஹார்ட் கலண்டி வர்றமாதிரி இருக்குபா ஒடவே முடியல என்றான். சிரிப்பு தாளமுடியவில்லை. கேட்டுப்பாருப்பா எப்படி அடிக்குதுன்னு என்றான். என் இதயதுடிப்பை ஒருமுறை அவனுக்கு கேட்கவைத்ததின் விளைவு. ஓடும்போது ஏற்படும் மூச்சுவாங்களை அப்படி சொல்கிறான். தொடர்ந்து ஓடாமல் கொஞ்சம் இளைபாறிச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால் நாளெல்லாம் சிரிப்பாக இருந்தது. சிரிப்போடு நான் கிண்டல் அடித்தாலும், அவனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அறியாமையோடு அதற்கு பதிலளிக்க முடிந்தது. ஆம் குழந்தை அறியாமையில் இருக்கும்போது நமக்கு நம‌க்கு அளவில்லா ஆனந்தமும் ஏற்படுகிறது. குழந்தைகளைக் கொஞ்ச அது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

Monday, December 21, 2015

பீப்பும் இளையராஜாவும்





மிகப் பெரும் மேதமைக் கொண்ட விஞ்ஞானி, ஐன்ஸ்டைன் என நினைக்கிறேன், அவர் தன் தொழிற்கூடத்தில் இரண்டு எலிகள் தினம் தொல்லை செய்துவந்தன. இரண்டையும் பிடிக்க முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது. ஆகவே அவைகள் போய்வர வழி ஏற்படுத்து தரவேண்டும் என யோசித்தார். ஒரு பெரிய ஒரு சிறிய எலிகளுக்காக ஒரு பெரிய‌ ஓட்டையும் ஒரு சிறிய ஓட்டையும் ஏற்படுத்தியிருந்தார். அதை கவனித்த அவரது நண்பர் ஏன் இரு ஓட்டைகள் என கேட்டார். இரண்டு எலிகள் இருக்கின்றனவே என்றார். ஏன் ஒரே பெரிய ஓட்டையில் இரு எலிகளும் செல்லமுடியுமே என்றார் நண்பர். விஞ்ஞானி அதிர்ச்சியடைந்தார், எப்படி நமக்கு இது தெரியாமல் போனது என்று. ஆம் மேதமைகள் எப்போதும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து இருக்க முடிந்ததில்லை. அவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் வேறு எங்கோ இருக்கும். அத்தோடு நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அளவு பழக்கப்படாமலும் இருந்திருப்பார்கள்.

Tuesday, December 15, 2015

பீப்குள்ள என்ன இருக்கு?



சில ஆண்டுகளுக்கு முன்னால் சமஞ்சது எப்படி என்று ஒரு சினிமா பாடல் வெளிவந்தது. எப்படி எப்படி சமஞ்சது எப்படி என்கிற பாடல் மிக பிரபல்யமாக, பெண்களை பார்த்து கிண்டலடிக்கும் பாடலாக இருந்தது. சமஞ்சதை பீப் வைத்துதான் படத்தில் வெளியிட்டார்கள். ஆனால் வெளியே பாடல் கேட்கும்போது பீப் இருக்காது. அதற்கும் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் சென்றால் மற்றொரு பாடல் அப்படி இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடல் வேண்டுமென்றே கவனதை கவர இயற்றப்படுகிறது என நினைக்கிறேன். இந்த சிம்பு அனிருத் செய்திருக்கும் இந்த பாடல் சற்று வித்தியாசமானது. துணிச்சலாக இன்னும் நேரடியாக வார்த்தை வரும்படி பாடல் அமைந்திருக்கிறது. பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தனி மனிதர்கள் பொதுநலவிரும்பிகள் என்று எல்லோரும் இதை வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இது அது காலத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் சிலர் தூற்றவும் செய்யலாம்.

Friday, December 11, 2015

நவீனத்தை கொண்டுவந்த‌ விளம்பரங்கள்



தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம் பார்த்த‌ விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான். அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில் இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே கிடைத்த‌ன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

Thursday, December 10, 2015

வெள்ளை யானை - ஜெயமோகன்



வரலாற்று நாவல்கள் நூல்களை படிக்கையில் அபரிதமான உற்சாகம் வந்துவிடுகிறது. பழமையின் பெருமையை கேட்பதிலும் நேற்றை இன்றோடு இணைத்து மகிழ்ச்சி கொள்வதிலும் கரைந்துவிடுகிறது. ஆனால் வெள்ளையானை அப்படி பட்டதல்ல அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் முதன்முதலாக ஒரு வரலாற்று நாவலுக்கு இருக்கும் அபரிதமான வேகமும் உற்சாகமும் இல்லாமல் ஒரு சமூக நாவலைப்போல் நேரடியான காட்சியமைப்பில் சொல்லப்படுவதுதான் இதில் நடந்திருக்கிறது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் நாவலின் இடம் தான் இதிலும். ஆனால் வெள்ளையானை  நாவலின் அதீத விவரனைகளும், தகவல்களும் நம்மை முழுமையாக நம்பச் செய்கிறது. ரத்தம் ஒரே நிறம் நாவல் ஒரு கற்பனை கதாபாத்திரம் இங்கிருந்து சிப்பாய் கலவரம் நடக்கும் வடநாட்டிற்கு செல்வதாக வரும், வெள்ளையானை ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் பார்வையில் அவர் அடைந்ததாக சொல்லும் நீதியுணர்ச்சியின் மீது நின்று மொத்த நாவலும் நகர்த்துகிறது. ப‌ல பாத்திரங்கள் கற்பனையாக இருந்தாலும் வெள்ளையானை நிஜமாக நடந்துமுடிந்த ஒரு நிகழ்வை டாக்குமெண்டரி படம் காண்பதுபோல மனதில் விரிகிறது.

Tuesday, December 8, 2015

நிஜ‌ நிவாரணம்



சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப‌ வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்க‌ளுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க‌, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.

Monday, December 7, 2015

'அந்த' நல்ல டைனோசர்



நான் சிறுவயதில் முதலில் பார்த்த 3டி படம் மைடியர் குட்டிசாத்தான். அந்த படத்தை பார்க்கும்போது கொடுத்திருந்த கண்ணாடியை நன்கு துடைத்துவைத்திருந்தேன், படம் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக. ஆனால் படம் ஆரம்பித்தபோது போட்டுபார்த்தால் கண்ணாடி மேலிருந்த கெமிக்கலெல்லாம் போனதால் ஒன்றுமே தெரியவில்லை. மங்கலாக தெரிந்த திரையை மட்டும் பார்த்துவிட்டுவந்தேன். கொஞ்ச நாள் களித்து வந்த தங்கமாமா என்று நினைக்கிறேன், மற்றொரு 3டி படம் வந்தபோது கவனமாக துடைக்காமல் பார்த்தேன். அந்த சமயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வேல், கம்பு எல்லாம் கண்களை குத்துவது போல் வந்ததால் துள்ளிக் குதித்து முகத்தை திருப்பிக் கொண்டேன். என் அருகில் இருந்தவர் அட 3டி படம் இப்படிதாப்பா தெரியும் என்று அமைதிப்படுத்தினார். ஆனால் ரொம்ப நேரம் வரை காட்சிகளை புரிந்துக் கொள்ள முடியாமல் திண‌றினேன்.

Friday, December 4, 2015

பேரிடர் உண‌ர்த்துவது



ஆபத்தில் நண்பர்களை புரிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். இந்த சென்னை வெள்ள பேரிடர் நம்முடைய நண்பர்கள் யார் யார் என்பதை உணர்த்திவிட்டது. ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலைதான் சற்று அதிகம்.
சென்னை மாதிரியான நகரம் இப்படி வெள்ளத்தில் மாட்டும் என நாம் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் நல்ல மழைகூட இங்கு பெய்வதில்லை. எல்லா காலங்களிலும் வெய்யில் தான். ஆனால் காலம் எப்போது போலவே இருப்பதில்லை. காலம் மாறும்போது நாமும் மாறவேண்டியிருக்கிறது.
இந்த மாதிரியான பேரிடர்களில் பணம் நமக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை. தினப்படி உணவுகள், உறங்க இடம்தான் வேண்டியதாக இருக்கிறது. உண்ண உறங்க இடம் இல்லாமல் இருக்கும் சேரிமக்களும் நல்ல இடமும் உணவும் இருந்த நடுத்தர, மேட்டுக்குடி மக்களும் ஒன்றாக கலந்துவிட்டார்கள். இப்போது இவர்களுக்கு தேவையானவைகள் பணமும் அந்தஸ்தும் இருக்க முடியாது. இந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்ப்பது உதவியையும் தன்னலமற்ற சேவையையும்தான்.

Thursday, December 3, 2015

வெள்ளமும் வெறுப்பும்



திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில் ஒருமுறை பெரிய மழைவந்தது. பேச்சலர்களாக சில நாட்கள் சரியான உணவு கிடைக்காமல் அழைந்திருக்கிறோம். ஒரு முறை பெல்ஸ் ரோடு திருப்பத்தில் வரும்போது மழை பிடித்துவிட்டது. மூடிய கடையின் ஓரத்தில் ஒதுங்கிய பலரில் நானும் ஒருவன். அங்கு ஏற்கனவே சிலர் இருந்தனர். ஒரு பக்கத்தில் ஒரு கல்லின் மேல் தன் 10 மாத இருக்கும் குழந்தையை ஒரு சுருட்டியதுணியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பார்த்த‌தும் லேசாக மனது பதறியது. இந்த அடைமழையில் எப்படி நனையாமல் போகபோகிறார் என்று. அவர் ரொம்ப நேரம் அங்கு இருப்பதாக தோன்றியது. அவரின் உடை ஸ்டைலில் அங்கு பக்கதில் இருக்கும் சேரியில் இருக்கும் மனிதர் என தெரிந்தது. கசங்கிய லுங்கியும் சட்டையும் அணிந்து கலைந்த தலையுமாக இருந்தார். அவரின் மேலேயும் தூங்கும் குழந்தையின் மேலேயும் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.

Wednesday, December 2, 2015

வெள்ளச் சென்னை



சென்னை நகரம் மற்ற எந்த இந்திய நகரத்தைவிட பாதுகாப்பானது என்றுதான் தோன்றுகிறது. எந்த தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் முதலில் குண்டுவைப்பது தில்லியாகத்தான் இருக்கும். அதன் வடக்கிலிருந்து குளிர் காலத்தில் வரும் குளிர் காற்றால் நடுங்கி இறப்பவர்கள் அதிகம். சாதாரண குளிரே 10 டிகிரிக்குள்தான் இருக்கும். மும்பை நகரம் அமைந்திருக்கும் இடம் அரபிக்கடலில் ஒருமாதிரி வெளிவந்து உள்ளடங்கி ஒரு முனையில் தொத்தியபடி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையில் நகரம் தத்தளிக்கும். கோல்கட்டா வங்கத்தின் கங்கையின் நேரும் முனையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் தாக்கி ஒரு வழி செய்துவிடும். பெங்களூரும் அப்படிதான். ஆனால் எல்லா நகரங்களும் அதன் பகுதிகள் கொஞ்சம் தள்ளிதள்ளி அமைந்து தேவையா இடவசதியோடு அதன் ஏரியாக்கள் இணைந்திருக்கும்.