Monday, December 7, 2015

'அந்த' நல்ல டைனோசர்நான் சிறுவயதில் முதலில் பார்த்த 3டி படம் மைடியர் குட்டிசாத்தான். அந்த படத்தை பார்க்கும்போது கொடுத்திருந்த கண்ணாடியை நன்கு துடைத்துவைத்திருந்தேன், படம் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக. ஆனால் படம் ஆரம்பித்தபோது போட்டுபார்த்தால் கண்ணாடி மேலிருந்த கெமிக்கலெல்லாம் போனதால் ஒன்றுமே தெரியவில்லை. மங்கலாக தெரிந்த திரையை மட்டும் பார்த்துவிட்டுவந்தேன். கொஞ்ச நாள் களித்து வந்த தங்கமாமா என்று நினைக்கிறேன், மற்றொரு 3டி படம் வந்தபோது கவனமாக துடைக்காமல் பார்த்தேன். அந்த சமயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வேல், கம்பு எல்லாம் கண்களை குத்துவது போல் வந்ததால் துள்ளிக் குதித்து முகத்தை திருப்பிக் கொண்டேன். என் அருகில் இருந்தவர் அட 3டி படம் இப்படிதாப்பா தெரியும் என்று அமைதிப்படுத்தினார். ஆனால் ரொம்ப நேரம் வரை காட்சிகளை புரிந்துக் கொள்ள முடியாமல் திண‌றினேன்.

என் மகனை முதன்முதலில் ஒரு 3டி படத்திற்கு அழைத்து செல்லும்போது கவனமாக இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி அவனை அமைதிப் படுத்த என்னை தயார்ப் படுத்திக் கொண்டேன். முதன் முதலில் பார்க்கும் இந்தப் படத்தை தனக்கு பயமாக இருக்கிறது அல்லது ச‌ரியாக தெரியவில்லை என்று அடம்பிடிப்பான் என்கிற பயம் ஒரு காரணம்.
ஆனால் படம் ஆரம்பித்ததும் என்னப்பா லெட்டரெல்லாம் முன்னாடி தெரியுது என்றான். இரண்டு நிமிடத்திற்க்கு பின்னால் அந்த காட்சி அமைப்பை பற்றி எளிதாக புரிந்துக் கொண்டுவிட்டான். ஆச்சரியம் என்னவெனில் நான் பார்க்கும்போது எனக்கு இருந்த வயதைவிட இளம் வயத்தில் அவன் இந்த படத்தைப் பார்க்கிறான்.
படம் முடிந்து 3டி அனுபவம் எப்படி என்று கேட்டபோது ம் நல்லாதான் இருக்கு என்று ஒற்றைவரியில் முடித்துக் கொண்டான். டிவி பார்த்து பழ‌கிய கண்களுக்கு இது பெரியதாக இல்லாமல் போனது ஆச்சரியம் இல்லைதான் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அனிமேசன் படத்தை மிகவும் ரசித்தான். அந்த சின்ன டைனோசர் செய்யும் குறும்புகளை ரசித்து சந்தேகங்களை இடைஇடையே சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தான். படம் முடிந்து வெளியே வந்தும், வீட்டிற்குவந்தும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஏன் அது அங்கே போகிறது? எதற்காக அவன் அப்பா காணாமல் போகிறார் என்று.
டைனோசரை சொல்ல அதன் காலகட்டத்தை தேர்தெடுத்தது ரொம்ப அழகுதான். அப்போது இருந்த நியான்டர்தால் மனிதர் அவ்வளவு வளர்ச்சியடையாததால் அவன் மொழி வளர்ந்து பேச ஆரம்பித்திருக்க வில்லை. ஆனால் எல்லா வகை டைனோசர்கள் பேசுகின்றன. அதுவும் ஆங்கிலத்தில்.
கூடவே அந்த நல்ல டைனோசர்கள் விவசாயம் செய்கின்றன. அம்மா அப்பா என்று இருக்கும் டைனோசர் குடும்பம் ஒன்று தன் மூன்று பிள்ளைகளுக்கு விவசாயம் க‌ற்று தருகின்றன.
மூன்றாவதாக இருக்கும் ஆர்லோ என்று சோனி டைனோசர்தான் கதாநாயகன். தன் தந்தையிடம் விவசாயம் செய்து அதை பத்தாயத்தில் சேமிக்கும்போது அதை தின்னவரும் விலங்குகளை எப்படி அடிக்க வேண்டும் என கற்று தருகிறார். அதில் ஒரு நியான்டர்தல் சின்ன குழந்தை வந்து மாட்டுபோது அதை அடிக்க முடியாமல் திணறிப்போகிறது ஆர்லோ டைனோசர். தப்பிவிட்டதற்கு கடிந்துக் கொள்ளும் அப்பா டைனோசர் ஒரு காற்றாறில் அப்பா அடித்துச் செல்லப்பட்டு இறந்துவிட அப்பாவை தேடிச் ஆர்லோவை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துவருகிறது. இருவரும் தத்தமது குடும்பத்துடன் சேருகிறார்கள்.
பயணத்தில் இருவரும் நண்பர்கள் ஆவதும் இணைந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்வதையும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லா ஹாலிவுட் படங்களைப்போல மிக நல்ல தரத்தில் கதையம்சத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் எல்லா அனிமேசன் படங்களும் ஒரே டெம்ளேட்டில் இருப்பது போல தெரிகிறது.
அதாவது இரண்டு வெவ்வெறு கதாப்பாத்திரங்கள் (விலங்குகள்/பொம்மைகள்) இணைந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளுதல். மிக இளம் குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான கொஞ்சமும் சுவாரஸ்யம் குன்றாத காட்சிகள், பின் ஒரு காட்சிக்கு அடுத்த காட்சிக்கும் இடையே சரியான புரிதல்களை விட்டுவைத்தல் என்று ஒரே மாதிரியானவைகளை சொல்லலாம்.
ஒவ்வொரு காட்சிகளிலும் குழந்தைகள் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காகவேனும் மற்ற அனிமேசன் படங்களைப்போல் தையும் பார்த்துவிடலாம்.

No comments: