Thursday, December 3, 2015

வெள்ளமும் வெறுப்பும்திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில் ஒருமுறை பெரிய மழைவந்தது. பேச்சலர்களாக சில நாட்கள் சரியான உணவு கிடைக்காமல் அழைந்திருக்கிறோம். ஒரு முறை பெல்ஸ் ரோடு திருப்பத்தில் வரும்போது மழை பிடித்துவிட்டது. மூடிய கடையின் ஓரத்தில் ஒதுங்கிய பலரில் நானும் ஒருவன். அங்கு ஏற்கனவே சிலர் இருந்தனர். ஒரு பக்கத்தில் ஒரு கல்லின் மேல் தன் 10 மாத இருக்கும் குழந்தையை ஒரு சுருட்டியதுணியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பார்த்த‌தும் லேசாக மனது பதறியது. இந்த அடைமழையில் எப்படி நனையாமல் போகபோகிறார் என்று. அவர் ரொம்ப நேரம் அங்கு இருப்பதாக தோன்றியது. அவரின் உடை ஸ்டைலில் அங்கு பக்கதில் இருக்கும் சேரியில் இருக்கும் மனிதர் என தெரிந்தது. கசங்கிய லுங்கியும் சட்டையும் அணிந்து கலைந்த தலையுமாக இருந்தார். அவரின் மேலேயும் தூங்கும் குழந்தையின் மேலேயும் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.
அவருக்கு மேல் இருந்த ஒரு தட்டியை தள்ளி மேலே நீர் விழாமல் நான் செய்ததை பெரிய உதவியாக நினைக்கமுடியாது. ஆனால் அவர் எந்தவித அனுதாப வேண்டுதல்கள் இல்லாமல் மிக இயல்பாக என்னிடம் பேசினார். ரொம்ப மழ புடிசுகிட்டா இப்படிதான், ஒன்னுமே பண்ண முடியறதில்லபா என்றார். அவருடைய வாழ்க்கை அப்படிதான் இருக்கும் போல. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அவர்கள் இப்படி மூடிய கடைகளின் முன்னால் தங்கள் வாழ்க்கையை இரவு பகலென்று நடத்த வேண்டியிருக்கிறது.
1977ல் மிகப்பெரிய மழை வெள்ளம் சென்னையில் வந்ததாக சொல்கிறார்கள் அடுத்தபடியா இந்த ஆண்டு (2015)தான் வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விளிம்புநிலை மனிதர்கள் பாதிக்கப்படுவதும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தான் நடக்கிறது. மத்தியதர வர்க்கம் பாதிக்கபடும்போது அந்த ஆண்டு வந்த மழை வெள்ளம் என்று கொள்ளபடுகிறது. இதேபோல முதல் இரண்டுநாள் மழை பெய்து நதிகள் உடைந்து வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியபோது கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்கள், ஏர்போர்ட் மூடப்பட்டதும் எல்லா ஆங்கில ஊடகங்கள் முதல் பக்கத்தில் செய்தியாகவும், டிவிகளில் தலைப்பு செய்தியாகவும் வாசிக்கப்பட்டன.
நாம் சொந்த அல்லது தங்கியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவது என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. அப்படியே சாமான்களை விட்டுவிட்டு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுவதை யாரும் பொதுவாக நினைத்துப் பார்ப்பதில்லை. சென்னையில் இருந்தபோது ஒருநாள் பூகம்பம் வந்துவிட்டது. எல்லோடும் போட்டிருந்த உடைகளோடு வெளியே வந்து நின்றபோது ஏற்பட்ட மன‌நிலையை இன்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே ஊருக்கு போய்விடலாமா? தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று இருப்போமா? என்று பல்வேறு சிந்தனைகள். அன்று இரவு எப்போது வேண்டுமானாலும் பூகம்பத்தால் தாக்கப்படலாம் என்ற அச்சதோடே தூக்க வேண்டியிருந்தது..
கேதாரிநாத்தில் மிகப்பெரிய வெள்ளம் வந்தபோதும் கொஞ்சநாள் முன்பு ஜப்பானில் பூகம்பம் வந்து அணு உலை உடைந்து, வீடுகளை எல்லாம் இழந்து வெளியே நின்றதும் ஒரே மனநிலையைதான் மக்களுக்கு உண்டாக்கியிருக்கும்.
இதில் மற்றொன்று ஒன்று உண்டு பொறுமை. வெறுப்பற்ற பொறுமை. பல்வேறு சமயங்களில் இந்த பொறுமையை நாம் இழக்க இழக்க நமக்கான தேவைகளை நாம் பெறமுடியாமல் போய்விடும். இதற்கு பல உதாரணங்கள் சொல்லமுடியும். ஜப்பானில் ஏற்ப்பட்ட பூகம்பத்தில் சிக்கிய மக்களை மீட்டபோது அவர்கள் காட்டிய அசாதாரண பொறுமை இன்றும் நாம் யூடியூபில் காணும்போது வியக்க வைக்கும். இந்த தேவைகளை நான் முதலில் எடுத்துக் கொள்கிறேன் என்று ஒரிருவர்கள் முன்னேறும்போது உண்மையிலேயே உதவிகள் தேவைப்படும் மனிதர்களுக்கு சென்றடையாமல் போய்விடும். கேதாரிநாத்தில் நடந்தபோது மக்கள் தங்களுக்கு கிடைத்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து உண்டே வாழ்ந்தார்கள். ஏழைப் பணக்காரர் என்கிற பாகுபாடு அங்கே இல்லாமல் இருந்தால்தான் இது சாத்தியம்.
நேற்று டிவியில் பார்த்தப்போது நமது உரிமையை நாம் கேட்கிறோம் இது அவர்களது கடமை என்று பேசப்பட்டது. ஒருவகையில் இது உண்மைதான் என்றாலும், இம்மாதிரியான பேச்சுகள் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே பெருகும் இடைவெளியை கவனிக்க தவறுகிறார்கள். எங்களால் செய்ய முடியாது என ஆள்பவர்கள் சொல்லும் நிலைக்கு கொண்டு செல்லவைத்து இது மாதிரி நடக்கிறது என்று போட்டு காட்டுவதனால் ஒன்று ஆகபோவதில்லை. வெறும் வெறுப்பு அரசியலை வளர்க்க மட்டுமே உதவும்.
உண்மையாக உதவ நினைப்பவர்கள் அல்லது உதவி சென்றடைய வேண்டும் என நினைப்பவர்கள் இம்மாதிரியான வெறுப்பு பேச்சுகளை தவிர்ப்பதே நமக்கு நல்லது. இது யாரின் ஆட்சி அல்லது நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு ஆகவே இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் இது உதவலாம். மற்றபடி மீண்டும் அதே வெறுப்பைதான் நாம் மனிதர்களிடையே விதைத்துவிடுகிறோம். எல்லாம் சரியானதும் மீண்டும் அதே வெறுப்புகள் வேவ்வெறு பக்கங்களிலிருந்து வந்துக் கொண்டே இருக்கும் என்பதை தவிர இதனால் நமக்கு பயன் எதுவும் விளையப்போவதில்லை.

No comments: