Tuesday, December 22, 2015

அறியாமையின் அழகு
விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென ஓடிவந்து இந்த முட்டி ஒடிஞ்சி போயிடுச்சுப்பா என்றான். பதறிப் போய்விட்டேன். எங்கே என்ன ஆச்சு என்றேன். காட்டிய அவன் வலது முட்டி நன்றாகத்தான் இருந்தது. ஓடும்போது வலிக்குதுபா ஒடஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன் என்றான். அது அப்படிதான் என சொல்லி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு போ சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மற்றொருநாள் அப்பா இந்த ஹார்ட் கலண்டி வர்றமாதிரி இருக்குபா ஒடவே முடியல என்றான். சிரிப்பு தாளமுடியவில்லை. கேட்டுப்பாருப்பா எப்படி அடிக்குதுன்னு என்றான். என் இதயதுடிப்பை ஒருமுறை அவனுக்கு கேட்கவைத்ததின் விளைவு. ஓடும்போது ஏற்படும் மூச்சுவாங்களை அப்படி சொல்கிறான். தொடர்ந்து ஓடாமல் கொஞ்சம் இளைபாறிச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால் நாளெல்லாம் சிரிப்பாக இருந்தது. சிரிப்போடு நான் கிண்டல் அடித்தாலும், அவனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அறியாமையோடு அதற்கு பதிலளிக்க முடிந்தது. ஆம் குழந்தை அறியாமையில் இருக்கும்போது நமக்கு நம‌க்கு அளவில்லா ஆனந்தமும் ஏற்படுகிறது. குழந்தைகளைக் கொஞ்ச அது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

அறியாமையுடன் பேசாத குழந்தையை நாம் கொஞ்சுவதே இல்லை. அந்த நிலா ஏன்பா வெள்ளையா இருக்கு?, ஏம்பா இந்த பொம்ம பேசவே மாட்டாங்குது, எப்பமா நாம் படைச்சு வெச்ச சாப்பாட்ட சாமி சாப்பிடும், ஏம்மா அக்கா மட்டும் சடை இருக்கு' போன்ற கேள்விகளை எதிர் கொள்ளாத அப்பா அம்மாக்களே இல்லை. அவர்களுக்கு விடை சொல்வதையும் அதிபுத்திசாலித்தனமாக சிந்திப்பதாக ஒருநாள்கூட‌ அவர்கள் நினைக்காமல் இருக்கமுடியாது. மிக அபத்தமாக கேள்வி கேட்கும் குழந்தைதான் மற்ற குழந்தைகளைவிட புத்திசாலிதனமான குழந்தை என்று முடிவும் செய்கிறோம்.
குழந்தைகள் பயப்படுவதையும் நாம் சந்தோஷமாக நினைக்கிறோம். ஒருவர் தன் குழந்தையை அடக்க, ரொம்ப அடம்பன்னினே அந்த தாடி வெச்ச சாமியாருக்கிட்ட விட்டு வந்துடுவேன் என்பார். குழந்தை பயந்து அடம் செய்வதை விட்டுவிடும். எல்லா வீடுகளிலும் குழந்தைகளை மிரட்டும்போது ஹாஸ்டலில் விட்டுவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்வார்கள். குழந்தை நிஜமாகவே பயந்துவிடுவார்கள்.
நமக்குபிடித்த நம்மை உயர்வாக மதிக்கவைக்கும் கேள்விகளை குழந்தைகள் கேட்கும்வரை நாம் அவர்களிடம் அதிக கொஞ்சல்களையும் வேடிக்கைகளையும் செய்கிறோம். கொஞ்சம் உடல் சார்ந்த அல்லது சமூகம் விளக்கிவைத்திருக்கும் செக்ஸ்குறித்த கேள்விகளை எதோ ஒரு ஆர்வத்தில் கேட்டுவிடும் குழந்தைகளை அதன் பின் அவர்களிடம் கொஞ்சல்களைவிட்டு விலகியே இருக்கிறோம்.
குழந்தை அறியாமையுடன் இருக்கும்வரை அதனுடன் நாம் செலுத்தும் அன்பை சற்று வளர்ந்தவுடன் விட்டுவிடுகிறோம். குழந்தை கொஞ்சம் தன் வயதிற்கு மீறிய கேள்விகளை கேட்கும்போது, நாம் பயப்பட ஆரம்பிக்கிறோம். குறிப்பாக செக்ஸ், உடல் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது மிக கவனமாக அதை திசைதிருப்பிவிடுவார்கள் அல்லது மிக அதிகப்படியான கோபத்தோடு அதை அடக்கிவைக்க நினைப்பார்கள். ஒருவயதில் இந்த விஷயங்களை அறியத்தான் போகிறார்கள் என்று நினைப்பதில்லை. கூடவே கெட்டுப் போய்விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.
உண்மையில் அப்படி இல்லை. அதிலும் அவர்கள் அறியாமையில் தான் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்வதில்லை.
குழந்தை எல்லா வயதிலும் குழந்தையாக இருக்கவேண்டும் என நினைப்பது அந்த குழந்தையைவிட பெற்றோர்கள் அறியாமையில் இருப்பதாக நினைக்கிறேன். எல்லா துறையிலும் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் செக்ஸ், உடற்சம்பந்தமான்வைகளிலும் அதே முதிர்ச்சியை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவைகளைப் பற்றி அவர்களிடம் விவாதிப்பதில்லை.
பத்துவயதில் அல்லது அதற்கு மேற்ப்பட்ட வ‌யதில் வரும் இந்த சந்தேகங்களை மிக மென்மையாக அவர்களுக்கு புரியும்படி பேசவேண்டியது பெற்றோரின் கடமை என்று நினைக்கிறேன். அப்படி பேசியபின் அவர்கள் அந்த விஷயங்கள் மேல் தேவையற்ற கவனம் பெறுவதை தவிர்த்துவிடுவார்கள். குழந்தைகளை பெரியவர்களாக மதிக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது இல்லையா?.

No comments: