Tuesday, December 8, 2015

நிஜ‌ நிவாரணம்



சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப‌ வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்க‌ளுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க‌, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.

எந்த மகிழ்ச்சியை நினைத்து நாங்கள் அங்கு சென்றோமோ அது காணாமல் போய்விட்டது. அந்த இடம் கடவுளின் இடம் அங்கு மக்கள் கண்ணியமாகத்தான் நடப்பார்கள் என்று நாம் நினைத்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக இதுதான் தமிழகத்தின் சித்திரம் என்று சொல்லலாம். கோயில், சினிமா, திருமணம் போன்ற இடங்களில் நாம் அப்படிதான் நடந்துக் கொள்கிறோம். கூடுமிடங்களில் எல்லாம் இதே ஒழுங்கின்மையை காணமுடியும். மற்றொரு முறை ஒரு விழாவில் மீதமாகிவிட்ட உணவை கொடுக்க திருவான்மியூரில் உள்ள ஒரு சேரிக்கு எடுத்துச் சென்றபோது இதே நிலமைதான் ஏற்பட்டது.
விளிப்புநிலை, மத்தியவர்க்கம், உயர்வர்க்கம் யாராக இருந்தாலும் தங்களுக்கு தேவை என வரும்போது ஒரே போலத்தான் நடந்துக் கொள்கிறார்கள். மகாராஷ்டிராவில், தில்லியில் இருந்தபோது இவைகளை பார்க்க முடிந்ததில்லை. பலநாள் கோயில் திருவிழாக்கள் நடக்கும் அந்த பகுதி மக்கள் எந்த அவசரமும் இல்லாமல் அங்கு வழங்கப்படும் அன்னதானங்களை வாங்கிச் செல்வார்கள். புனேயில் நடக்கும் சிவாஜிவிழா, விநாயகர் பண்டிகைகளில் நடக்கும் எந்த அன்னதானங்களுக்கும் அடிதடிகள் நடந்ததில்லை.
முன்பு நான் இருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அங்கு இருந்த கோயில் கூழ் ஊற்றும்போது 5 நிமிடத்தில் எல்லாம் காலியாகிவிடும். அடித்துபிடித்து அதை வாங்கி சென்றுவிடுவார்கள். நிஜமாக அதை குடிக்கிறார்களா தெரியாது. ஆனால் அதை நாமும் வாங்கிவிட வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆம் பசி இந்த விஷயங்களை மறக்கடித்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எளிய பொறுமைகூட நமக்கு தேவை என்பதை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். வீணாகும் உணவுகளை பார்த்து நாம் பொறுமையாக இருந்தான் ஆகவேண்டும்.
இயற்கையாகவே ஒரு அவசரம் நம‌க்கு இருக்கிறது என நினைக்கிறேன். நமக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது. அந்த அவமானத்தை எப்படி வெல்வது என்கிற பயம் இருப்பதாக நினைக்கிறேன். இதை ஒரு போட்டியாக ஒரு சவாலாக நினைக்கிறார்கள் அதற்காக தங்கள் வெட்கங்களை, கண்ணியங்களை விட்டுவிட தயாராகவும் இருக்கிறார்கள். ஒரு பேச்சரங்கத்தில் ஒருவர் இலவசமாக கொடுப்பதை தான் விரும்புவதாகவும் அது ஒருவகையில் சந்தோசம் அளிப்பதாகவும் கூறினார். அது எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை என்றார்.
இப்போது வெள்ள நிவாரணம் கொடுக்க எவ்வளவு சிரமம் இருந்தது என்பதை கொடுப்பவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் அதை நாசுக்காக சொல்வதை கவனிக்கிறேன். கொடுப்பதில் இருக்கும் சந்தோஷ‌மே வாங்குபவர்களை நாம் சந்தோஷப்படுத்தினோமா என்பதில்தான் இருக்கிறது. அதை பிடுங்கி ஓடுபவர்களிடம் எப்படி பார்ப்பது. அவர்களை தனியாக அழைத்து கேட்டால் உண்மையை சொல்லலாம். உண்மையாக கஷ்டங்களை அனுபவித்த மக்களுக்கு நாம் செய்தது சென்று சேர்ந்ததா என்கிற ச‌ந்தேகம் இருக்கும். இதையெல்லாம் தாண்டிதான் ஒருவர் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ளமுடிகிறது.

No comments: