Friday, December 11, 2015

நவீனத்தை கொண்டுவந்த‌ விளம்பரங்கள்



தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம் பார்த்த‌ விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான். அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில் இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே கிடைத்த‌ன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

இந்த விளம்பரங்கள் முக்கியமாக கிராம, சிறுநகர மக்களை நோக்கியே இருந்தன. அவர்களை நோக்கியே அவர்களை போன்ற மக்கள் தோன்றிய விளம்பரங்களாக வெளியிடப்பட்டன. உண்மையில் அவர்களை நவீனப்படுத்தின இந்த விளம்பரங்கள் என்றால் மிகையில்லை. சவுக்கார் தேய்து துணிகளை துவைக்க வேண்டியிருந்த காலத்தில் அதுவும் வாசிங் மிஷின் இல்லாத காலத்தில் பவுடரில் ஊறவைத்து துணிகளை துவைத்தல் எளிது என்று உணரவைக்கப்பட்டன. நிர்மாவின் ஆரம்ப வரியே வாசிங் பவுடர் நிர்மா என்றே ஆரம்பிக்கும், பலமுறை அது சொல்லப்படும் கடைசியில் மீண்டும் ஒரு முறை சொல்லி முடிக்கப்படும். அதில் வரும் பெண் குழந்தை பாவாடை சட்டையோ அல்லது வேறு இந்திய உடைகளை அணிந்திருக்காது. ப்ராக் எனப்படும் வெளிநாட்டு உடைதான் அணிந்திருக்கும்.
அதேபோல் பற்பசை விளம்பரங்கள் நாம் உபயோகித்து வந்த பழைய பற்பொடிகளை கிண்டல் செய்து அவைகள் நம்மை நவீனப்படுத்தாது என்கிற பொருளில் விளம்பரம் அமைந்திருக்கும். கரியோடு இருப்பவரின் பற்பசை உடைய பிரசை கொடுத்து விளக்க சொல்வார்கள். கரி, உப்பு, வேம்பு, கிராம்பு போன்றவைகள் பழமையானவைகள் அவைகள் பற்களை தூய்மைசெய்யாது கறைகளை நீக்காது என்றே விளம்பரங்கள் இருந்தன. அதே கோல்கேட் இன்று உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா, புதினா இருக்கா என்று கேட்டு உப்பும் புதினாவும் சேர்க்கப்பட்டது என விளம்பர படுத்தப்படுகின்றன.
மாத்திரை வகைகளில் சாரிடான், அனாசின், விக்ஸ் ஆக்சன் 500 என்று சிலவைகள் தொடர்ந்து விளப்பரப்படுத்தப்பட்டன. அப்போது பழக்கத்தில் இருந்த நாட்டு மருந்துகள், வீட்டு மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளை எதிர்த்து விளம்பர படுத்தப்பட்டன என்பது கண்கூடு.


உடனே நிவாரணம் அளிக்கும், உடனே ஓடியாட முடியும், மிகவும் நம்பகமானது என்று சொன்ன இந்த விளம்பரங்கள் அதன் பின் விளைவுகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட அதாவது அடிகுறிப்பாக கூட சொன்னதில்லை. இன்று நம் வயதானவர்களுக்கு கேன்சர் உட்பட இருக்கும் எல்லா வியாதிகளுக்கும் இந்த மாத்திரைகள்தான் காரணம். நானே என் சிறுவயதில் பெட்டிக்கடைக்கு சென்று என் அப்பா சொன்ன சாரிடான் மாத்திரையை வாங்கி வந்திருக்கிறேன். அவைகள் எப்போது தயாரிக்கப்பட்டன என்ற விவரங்கள் அதில் இருக்காது எந்த வருடத்தில் இதை வாங்கி வந்தோம் என்று கடைகாரருக்கும் நினைவிருக்காது. கருத்து அழுக்கு படிந்திருக்கும் பேப்பர் மூடிய மாத்திரையை இன்று நினைக்கும் போது நிச்சயம் அது காலாவதியான மாத்திரையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
சோப்களில் 501, டெட் கட்டிகள் மிகவும் நவீனமானவைகள் என்று விளம்பரத்தில் சொல்லப்படுவதும் அது மிக எளிதாக பெயர்களை தாங்கி இருப்பதும் வேறு எந்த சவுக்கார கட்டிகளையும் விட எளிதில் கிடைக்கும்படி செய்ததால் மக்கள் உபயோகித்தார்கள். டிடர்ஜன்ட் நம் வயல்களை எவ்வளவு நாசம் செய்யும் என்பதை அவர்கள் கடைசிவரை சொல்லவில்லை.
நம் தினப்படி வேலைகளுக்கு தேவையானவைகள், உபயோகிக்கும் பொருட்கள் பழைமையான முறைகளை கொண்டுள்ளது, கடினமானவைகள், நம்பகதன்மை அற்றவைகள், நாம் நவீனம் அடைய மேற்கத்திய முறைகளை கொண்டுள்ள இவைகள் தேவை என்று தொடர்ந்து விளம்பரபடுத்தப்பட்டு கடைசியில் அதில் வெற்றியும் அடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
நாம் அடைந்துள்ள இப்போதைய நுகர்வு கலாச்சரத்தின் அடித்தளம் இவைகள்தாம். நவீன பண்பாட்டிற்காக நேரத்தை எளிதாக்க பணத்தைக் கொடுத்து வியாதிகளை வாங்கிக் கொள்கிறோம்.

No comments: