Monday, December 21, 2015

பீப்பும் இளையராஜாவும்

மிகப் பெரும் மேதமைக் கொண்ட விஞ்ஞானி, ஐன்ஸ்டைன் என நினைக்கிறேன், அவர் தன் தொழிற்கூடத்தில் இரண்டு எலிகள் தினம் தொல்லை செய்துவந்தன. இரண்டையும் பிடிக்க முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது. ஆகவே அவைகள் போய்வர வழி ஏற்படுத்து தரவேண்டும் என யோசித்தார். ஒரு பெரிய ஒரு சிறிய எலிகளுக்காக ஒரு பெரிய‌ ஓட்டையும் ஒரு சிறிய ஓட்டையும் ஏற்படுத்தியிருந்தார். அதை கவனித்த அவரது நண்பர் ஏன் இரு ஓட்டைகள் என கேட்டார். இரண்டு எலிகள் இருக்கின்றனவே என்றார். ஏன் ஒரே பெரிய ஓட்டையில் இரு எலிகளும் செல்லமுடியுமே என்றார் நண்பர். விஞ்ஞானி அதிர்ச்சியடைந்தார், எப்படி நமக்கு இது தெரியாமல் போனது என்று. ஆம் மேதமைகள் எப்போதும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து இருக்க முடிந்ததில்லை. அவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் வேறு எங்கோ இருக்கும். அத்தோடு நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அளவு பழக்கப்படாமலும் இருந்திருப்பார்கள்.

பல மேதமைகள் சின்ன மாற்றங்களைகூட எதிர்க் கொள்ளமுடியாமல் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை நோக்கி வரும் மனிதர்களையும் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். மர்லன் பிராண்டோ அப்படி நடந்துக்கொண்டதாக சொல்வார்கள்.
இளையராஜா அப்படிப்பட்ட ஒரு மேதமை. அவர் சின்ன வயதிலிருந்தே இசைதவிர மற்றவைகளை அவர் அறிந்தவரில்லை. தன் தினப்படி உணவிற்காககூட வேலை செய்தவரில்லை. எல்லா மேதமைகளைப் போல பீப் பாடலைப் பற்றி ஒரு பொதுஇடத்தில் நிருபர் கேட்டதும், உனக்கு அறிவு இருக்கா? என்னிடம் பேச உனக்கு தகுதியிருக்கா என கேட்டுவிட்டார். வீடு சென்றதும் இது குறித்து அவர் நிச்சயம் வருந்தியிருப்பார். அப்படி அவர் வருந்தவில்லை என்றால் அவர் மேதமையை இழந்துவிட்டதாக நினைக்க இடமிருக்கிறது.
இணையமுழுவதும் இளையராஜாவின் அறிவிருக்கா உனக்கு என்கிற ஒருவரை ஒருவர் கேட்கப்பட்டு இன்னும் ஓயாமல் அழைந்துக் கொண்டிருக்கிறது. என்னதான் பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்ககூடாது என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் காட்டமாக அப்படி கேட்பவர்களை தங்கள் தாய் தந்தையை விளிக்க வேண்டும், அவர்கள் நல்ல பிறப்பில் பிறந்தவர்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நிருபரின் கேள்வியை சாதாரணமாக எதிர் கொண்டிருக்கலாம் என்பதை ஏற்கமுடியாத நிலையில், இளையராஜா இல்லை, அவரின் சீடராக, அவரின் சாதிக்காரராக தன்னை நினைப்பவர்களின் நிலை இருக்கிறது.
இளையராஜா புனிதப்படுத்தப்பட்டுவிட்டார் என தோன்றுகிறது. அவரின் இசையை விமர்சித்திருந்தால் கூட இவ்வளவு தூரம் பேசியிருக்கமாட்டார்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவிக்க இவ்வளவு மெனெக்கெடுக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தானே?
கேள்வி கேட்டவர் ஒரு தலித்தாக இருந்து உனக்கு அறிவிருக்கா என கேட்டவர் தலித் அல்லாதவராக இருந்திருந்தால், இதே போன்ற நிலைப்பாட்டை எல்லோரும் எடுத்திருப்பார்களா? அன்னேரம் அவர் மற்றொரு மேதமை என்பதை மறந்து, தலித்தை பேசியது குற்றம் என்றே சொல்லப்பட்டிருக்கும். இளையராஜா தலித் குடும்பத்தில் பிறந்ததை யாரும் பெரியதாக அல்லது ஒரு மாற்று குறைவாக சொல்லி நான் கேட்டதில்லை. கர்நாடக இசை மேதைகளிலிருந்து சாதாரணம் இசைப்பிரியர்கள் வரை இளையராஜாவை தங்கள் உறவு என்றே பார்க்கிறார்கள். ஒரு தலித் அல்லாத கவிஞர் இளையராஜா தனக்கு தந்தைக்கு மேலானவர் என்கிறார். இது அவருக்கு பெரிய விருதுதான். இப்படி சொல்லும் மக்கள் ஒரு கணம்கூட அவரை தலித் என நினைக்காதபோது. தலித் மக்கள் அவர் எங்களுக்கானவர் என்று நினைப்பதும் மற்றவர்களை தூற்றுவதும் தமிழ் சமூகத்தின் மீது அச்சத்தையே வரவழைக்கிறது.
அப்துல் கலாம் முஸ்லீம்களுக்காக மட்டும் உழைக்கவில்லை, ராமானுஜர் பிராமணர்களுக்காக மட்டும் உழைக்கவில்லை, இளையராஜா தலித்துகளுக்காக மட்டும் உழைக்கவில்லை. அவர்கள் போன்றவர்கள் இந்த ஒட்டுமொத்த சமூகத்திற்காக உழைத்தவர்கள். ஆனால் கீழான எண்ணம் கொண்டவர்கள் உழைப்பை சாதிக்கானதாக நினைத்து காற்றில் நடக்கிறார்கள்.

No comments: