Wednesday, December 2, 2015

வெள்ளச் சென்னைசென்னை நகரம் மற்ற எந்த இந்திய நகரத்தைவிட பாதுகாப்பானது என்றுதான் தோன்றுகிறது. எந்த தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் முதலில் குண்டுவைப்பது தில்லியாகத்தான் இருக்கும். அதன் வடக்கிலிருந்து குளிர் காலத்தில் வரும் குளிர் காற்றால் நடுங்கி இறப்பவர்கள் அதிகம். சாதாரண குளிரே 10 டிகிரிக்குள்தான் இருக்கும். மும்பை நகரம் அமைந்திருக்கும் இடம் அரபிக்கடலில் ஒருமாதிரி வெளிவந்து உள்ளடங்கி ஒரு முனையில் தொத்தியபடி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையில் நகரம் தத்தளிக்கும். கோல்கட்டா வங்கத்தின் கங்கையின் நேரும் முனையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் தாக்கி ஒரு வழி செய்துவிடும். பெங்களூரும் அப்படிதான். ஆனால் எல்லா நகரங்களும் அதன் பகுதிகள் கொஞ்சம் தள்ளிதள்ளி அமைந்து தேவையா இடவசதியோடு அதன் ஏரியாக்கள் இணைந்திருக்கும்.
சென்னை நகரம் முற்றிலும் பாதுகாப்போடு இருக்கிறது. ஆங்கிலேயர்களின் காலத்திலேயே தேவையான வடிகாலுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடையும்போது அதன் நகர்களிம் அமைப்பில் தேவையான கவணம் பெறவில்லை என தோன்றுகிறது. ஒரு சின்ன இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாக ஒவ்வொரு பகுதியும் இணைந்திருக்கிறது. இவ்வளவு நெருக்கமாக அமைந்திருக்கும் நகர்கள்/பகுதிகள் தீபாவளி பொங்கல் சமயங்களில் வெறிச்சோடி காணப்படும். தீபாவளி சமயத்தில் முக்கிய வீதியில் சென்றுபார்த்தால் அந்த நகரம் எவ்வளவு தற்காலிகமான நகரம் என்று தெரியும். ஆம் உண்மைதான் என நினைக்கிறேன். நாம் சென்னையை நமது நகரமாக நினைக்கவில்லை. இங்கு வாழவரும் ஒரு வலசை பறவைப்போலவே நம்மை உணர்கிறோம் என நினைக்கிறேன்.
தமிழகத்தின் பிறபகுதியில்கூட பொதுஇடத்தில் குப்பை கொட்டுவதை யாராவது கேள்வி கேட்பார்கள், ஆனால் சென்னையில் அந்த மாதிரி எதுவும் இல்லை, நீங்கள் எதைச் செய்தாலும் அதை பொறுத்துக் கொள்ள தயாராக இருக்கும் மக்கள் தங்களை பழக்கபடுத்திக் கொண்டுவிடுகிறார்கள். சென்னை அங்கிருக்கும் மிக வறிய எளிய மக்களின் கையில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. ரிக்ஷா காரர்கள், கூவம் நதியோரத்தில் ஆக்கிரமித்திருக்கும் மனிதர்கள், மீன்காரர்கள் என்று சில மனிதர்களின் தொகையில்தான் சென்னை இருக்கிறது. இழிவாக தரம்தாழ்ந்து அவர்களைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. ஆனால் இயல்பாக சென்னையின் மையம் அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்களால் இந்த நகரத்தை முழுமையாக ஆக்கிரமித்து தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டுவிட‌ முடியும் என தோன்றும்.
உண்மையில் அவர்கள்தான் இந்த நகரத்தை தங்கள் நகரம் என்கிற எண்ணத்தோடு வாழ்பவர்கள். மற்ற நடுநிலை, உயர்குடி மக்கள் இந்த நகரத்தின் மீது இருக்கும் வெறுப்புகளால் தானோ என்னவோ விலகியே இருக்கிறார்கள். நான் குடியிருந்த கொட்டிவாக்கம் பகுதி மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை காலியாக இருக்கும் எதாவது ஒரு மனையில்தான் கொட்டுவார்கள். அதை அள்ள சரியான அமைப்புகள் அங்கு இருந்ததில்லை. எப்போதாவது யாராவது வந்து எடுத்துச் சென்றால்தான் உண்டு. யாரும் இதுகுறித்து புகார்களை அளிப்பதில்லை. ஒவ்வொரு தெருவிலும் பிளாஸ்டிக் காகிதங்கள் ஒரு காலிமனையில் உள்ள கருவேலமர‌த்தில் தொற்றிக் கொண்டு காற்றில் ஆடுவதை போன்ற சித்திரத்தை வேறு எங்கும் பார்த்ததில்லை.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான வீட்டை கட்டிக் கொண்டு செட்டில் ஆகவேண்டும் என நினைக்கும் ஒருவர். நம்முடைய தெரு, ஏரியா, ஆறு, குளம், ஏரி, என்று ஏன் நினைப்பதில்லை. நமக்கு தேவையான பொருட்கள் நல்ல தரத்துடன் இருக்க நல்ல கடைகளை தேடிச் செல்வதுபோல, நம் நகரை பாதுகாக்க நாம் ஏன் ஒன்றுமே செய்வதில்லை. கூவம் ஆற்றில் சாக்கடையாக மாற்றியதையும் அதில் நாற்றம் எடுத்து கொசுக்கள் அதிகரிப்பதையும் நாம் எந்த புகாரை தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்வது எதனால். நமக்கு இந்த நகரத்தின் மீது இம்மியளவும் அக்கறை இல்லை என்பதனால் தானே?
கொஞ்ச நாள் முன்பு வேளச்சேரி வரை கடல் உள்வாங்கிவிடும் என்று ஒரு வதந்தி பரவியது. ஆனால் அது உண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது. அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளுக்கும் இந்த பகுதியில் பிரச்சனைவரும் ஆகவே வீடு கட்டுவதை ஏற்க முடியாது என்று ஒருவர்கூட எதிர்த்ததில்லை. சோழிங்க நல்லூரில் பறவைகள் வந்து அமரும் சேற்று நிலத்தில்கூட இன்னும் கொஞ்சநாளில் வீடுகளை கட்டிவிடுவார்கள் என தோன்றுகிறது.
வடமாநிலங்களில் தவறு செய்யும் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை கருப்புமை பூசிவிடுவதை அவர்கள் மிகப்பெரிய அவமானமாக கருதுகிறார்கள். தவறு செய்யவும் பயப்படுகிறார்கள். ஆனால் மக்களே தவறு செய்பவர்களாக இருப்பதால் அவர்களால் என்ன செய்துவிடமுடியும்.

No comments: