Tuesday, December 15, 2015

பீப்குள்ள என்ன இருக்கு?சில ஆண்டுகளுக்கு முன்னால் சமஞ்சது எப்படி என்று ஒரு சினிமா பாடல் வெளிவந்தது. எப்படி எப்படி சமஞ்சது எப்படி என்கிற பாடல் மிக பிரபல்யமாக, பெண்களை பார்த்து கிண்டலடிக்கும் பாடலாக இருந்தது. சமஞ்சதை பீப் வைத்துதான் படத்தில் வெளியிட்டார்கள். ஆனால் வெளியே பாடல் கேட்கும்போது பீப் இருக்காது. அதற்கும் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் சென்றால் மற்றொரு பாடல் அப்படி இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் ஒரு பாடல் வேண்டுமென்றே கவனதை கவர இயற்றப்படுகிறது என நினைக்கிறேன். இந்த சிம்பு அனிருத் செய்திருக்கும் இந்த பாடல் சற்று வித்தியாசமானது. துணிச்சலாக இன்னும் நேரடியாக வார்த்தை வரும்படி பாடல் அமைந்திருக்கிறது. பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தனி மனிதர்கள் பொதுநலவிரும்பிகள் என்று எல்லோரும் இதை வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இது அது காலத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் சிலர் தூற்றவும் செய்யலாம்.

பெண்களை இழிவுப் படுத்துவதை பெண்களை கேவலபடுத்துவதை நான் ஏற்கவில்லை. ஆனால் முதலிலிருந்து வரும்போது சினிமா பாடல்களில் ஒவ்வொரு இடைவெளியில் இப்படி பாடல் வருவதை நாம் பார்க்கலாம். அத்தோடு தனிப்பட்டவர்களின் நாட்டுபுற பாடல்களில் கிராமிய பாடல்களில் அவர்கள் பாடுவதை கேட்கும்போது அல்லது கேசட்டுகளில்/சிடிகளில் கேட்கும்போதோ பல பெண்கள் அங்கங்கள் குறித்த இழிவு படுத்தும் அல்லது கிண்டல் படுத்தும் வார்த்தைகளை அதில் இருப்பதை காணலாம்.
கிராமங்களில் ஆண் உறுப்புகளை பெண் உறுப்புகளை தங்கள் தினப்படி வார்த்தைகளில் சொல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் பேசும் சாதாரண பேச்சு வார்த்தைகளில் அது சம்பந்தமான செய்களை கொண்ட வார்த்தைகளை நாம் தொடர்ந்து கேட்க முடியும்.
ஒருவேளை இந்த பாடலை அவர்கள் கேட்டால் முகம் சுளிக்க மாட்டார்கள். நன்றாக இருப்பதாக சொன்னாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. சிம்பு என்கிற மனிதர் இதற்கு முன்பு செய்த பல்வேறு செய்கையால் நாம் கொண்டிருக்கும் அருவருப்பை இந்த பாடலோடு இணைத்துக் கொள்கிறோம். வேறு ஒருவர் இந்த பாடலை எழுதியிருந்தால் பாடியிருந்தால் நாம் இயல்பானதாக எடுத்துக் கொண்டிருப்போம் என நினைக்கிறேன்.
அமெரிக்க கருப்பின மக்களின் பாடல்களில் இந்த மாதிரியான கொச்சை வார்தைகளைக் கொண்ட மிகப் பிரபல்யமான பாடல்கள் உண்டு. அவைகள் ஒரே நாளில் வெளிவந்தவையல்ல. நம்முடைய ஊடகப்பார்வையின் கலாச்சார பண்பாட்டு வெளியில் இந்த பாடல் பெரிய வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும். ஆனால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த மாதிரியான பாடல்களில் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் வெளிவர வாய்ப்பிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.
பெண்ணை நிச்சயம் கொச்சைப்படுத்தும் பாடல்தான் இது. பெண்கள் தங்களை கீழ்தரமாக உணரவைக்க முயற்சிக்கும் பாடலாக இதை நினைத்தாலும் அது தப்பில்லை. நாம் நம் மோஸ்தர்களை மேற்கிலிருந்துதான் எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் பின்பற்றிவிட்டுவிட்ட எச்சங்களை நாம் பொறுக்கி பயபடுத்த ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றது. வடஇந்தியாவில் இப்படி ஒரு இந்திபாடல் வந்தால் அது பெரிய பரபரப்பு இன்று அடையாது. முன்பே பல்வேறு உத்திகளை, எதிர்ப்புகளை அந்த சமூகம் கடந்து வந்துவிட்டது.
பாண்டிட் குயின் என்கிற படம் வெளிவந்தபோது ஏற்ப்பட்ட அலைகள் இன்று இல்லை. அந்த படம் அந்த பகுதி மக்கள் பேசிய நேரடியான கொச்சை அல்லது கெட்டவார்த்தைகளை அவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் வெளிவந்தது. அதைப் பார்த்து முகம் சுளிக்காதவர்கள் இல்லை. இன்று அது சாதாரணப் படம். அதேப்போல் இதுவும் கடந்து எந்த தடமும் இல்லாமல் காணாமல் போகலாம் அல்லது அடுத்த பத்தாண்டுகளில் மற்றொரு பீப் பாடல் வந்து இது ஒன்றுமே இல்லை சாதாரண நல்ல‌ப்பாடல் என்கிற மேன்மையை அடையலாம்.

No comments: